கடவுள் நமக்கு மீட்பு அளித்துவிட்டார்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நல்ல நாமத்தில் எங்கள் அன்பான நல்வாழ்த்துக்கள்.

நம்முடைய ஆண்டவராகிய கிறிஸ்து இந்த உலகில் வந்து வாழ்ந்து நம் ஒவ்வொரு தேவைகளையும் சந்தித்து நமக்கு சந்தோஷத்தையும், சமாதானத்தையும் அளித்து தமது கிருபையினால் நம்மை மீட்டெடுத்து நமக்கு நல்வாழ்க்கையை தந்தருளியிருக்கிறார்.

கடவுள் நம்மை உருவாக்கி பெயர் சொல்லி அழைத்து நம் வலக்கரம் பிடித்து வழிநடத்தி காத்து வருகிறார். நிலையற்ற இந்த உலகில் நாம் மகிழ்ந்து வாழ்ந்திருக்கும்படி நம் குற்றங்களைக் கார்மேகம் போலும் நம் பாவங்களை பனிபடலம் போலும் அகற்றி பிள்ளைகளே என்னிடம் திரும்பி வாருங்கள் நான் உங்களுக்கு மீட்பு அளித்துவிட்டேன் என்று சொல்கிறார். எசாயா 44:22. நாம் நமது தேவைகளையும், எண்ணங்களையும் அவரிடம் ஒப்புக்கொடுத்து நம் விருப்பங்களை நிறைவேற்றி
கொள்ளலாம். அதற்காக தானே இந்த உலகில் வந்தார். தமது உயிரை கொடுத்தார். அதனால் நாம் கலங்காமல், அஞ்சாமல் அவருடைய சாட்சிகளாய் வாழ்வோம்.

நம்மை படைத்தவரும், உருவாக்கியவருமான நம் ஆண்டவர் கூறுவதை பாருங்கள். அஞ்சாதே, நான் உன்னை மீட்டுக்கொண்டேன்:உன் பெயரைச் சொல்லி உன்னை அழைத்தேன்: நீ எனக்கு உரியவன், நீ எனக்கு உரியவள் என்று சொல்கிறார். எசாயா 43:1. நாம் நீர்நிலைகள் வழியாக செல்லும் பொழுது நம்மோடு இருப்பார். ஆறுகளைக்கடந்து போகும்பொழுது அவை நம்மை மூழ்கடிக்க முடியாது. தீயில் நடந்தாலும் சுட்டெரிக்கப்பட மாட்டோம். நெருப்பு நம்மை சேதப்
படுத்தாது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவர் நம்மை எல்லா தீங்கிலிருந்தும் விடுவிப்பார். அவர் பார்வையில் நாம் விலையேறப்பட்டவர்கள். மதிப்பு மிக்கவர்கள். நம்மேல் உள்ள அன்பினாலும், அவர் மாட்சிக்காக படைத்த நம்மை அவரோடு அரசாள செய்வார்.

நாம் ஒருவேளை பாவம் செய்து அவரை விட்டு தூரம் போயிருந்தாலும் மறுபடியும் நம்மை அவரோடு சேர்த்துக்கொள்வார். முன்போலவே நம்மை பல்கிப் பெருகும்படி செய்து நம்மை மீட்டுக்கொள்வார். செக்கரியா 10:8. அவரின் மன விருப்பபடி வாழ்ந்து நம்முடைய ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.

ஜெபம்

அன்பின் பரலோக ஆண்டவரே, எங்களை பெயர் சொல்லி அழைத்து அறிந்திருப்பவரே உமக்கு நன்றி சொல்கிறோம். எங்களை மீட்கும்படி நீர் உம்மையே தியாகப்பலியாக ஒப்புக்கொடுத்து சிலுவையில் மரித்தீர் ஐயா. இதை நாங்கள் ஒருபோதும் மறவாமல் நன்றியோடு நடந்து கொள்ள உதவிச் செய்யும். எங்களை மீட்டெடுத்து இம்மட்டும் காத்து ஆசீர்வதித்து வழிநடத்தி வந்தற்காய் உமக்கு கோடிஸ்தோத்திரம், துதி, கனம், மகிமை யாவும் உமக்கே. ஆமென், அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.