கர்த்தர் தம்முடைய வார்த்தையினாலே தம்மை வெளிப்படுத்துவார்

கடவுளுக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நமது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

இந்த நாளிலும் நாம் நமது ஒவ்வொரு தேவைகளுக்கும் ஆண்டவரிடம் கேட்போமானால் அவர் நிச்சயம் நம்மை கைவிடாமல் தமது வார்த்தையை அனுப்பி நமது தேவைகளை சந்திப்பார். நம்மை பேர்சொல்லி அழைத்த தேவன் நம்மை முற்றும் முடிய காக்க வல்லவராய் இருந்து ஒரு தீங்கும் நம்மை தொடாமல் காப்பார். நாம் தனிமையில் தவிக்கும் பொழுது அவரின் வார்த்தைகள் நம்மை ஆற்றி, தேற்றும். நம் அருகில் நம்மோடு கூடவே இருந்து நம் கண்ணீரை துடைத்து அவருடைய அளவற்ற அன்பினால் அனைத்துக்கொள்வார். அவருடைய அன்பு என்ற தென்றல் காற்று நம்முடைய இதயத்தில் வீசும் பொழுது நமது துக்கம் யாவும் சந்தோஷமாக மாறும். கவலை, கண்ணீர் யாவும் மறைந்து விடும்.

நாம் 1 சாமுவேல் 3ம் அதிகாரத்தில் வாசிக்கும்பொழுது சாமுவேல் சிறு குழந்தையாய் இருந்தபொழுதே கர்த்தர் அவரை ஒருநாள் பெயர் சொல்லி கூப்பிடுகிறார். ஆண்டவர் தன்னை கூப்பிடுவதை அறியாத நிலையில் அவர் ஏலியினிடத்தில் போய் இதோ இருக்கிறேன். என்னை கூப்பிட்டீரே என்று கேட்கிறார். அதற்கு ஏலி நான் உன்னை கூப்பிடவில்லை. நீ போய் படுத்துக்கொள். மறுபடியும் உன்னை கூப்பிட்டால் அப்பொழுது நீ:கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன்,என்று சொல் என்று சொல்லித்தருகிறார். சாமுவேல் போய் மறுபடியும் படுத்துக்கொள்கிறார்.

மறுபடியும் ஆண்டவர் முன்போலவே சாமுவேலே சாமுவேலே, என்று கூப்பிட்டார். அதற்கு சாமுவேல் சொல்லும் அடியேன் கேட்கிறேன் என்றார். அப்பொழுது ஆண்டவர் சாமுவேல் ஒரு சிறு
குழந்தையாய் இருந்தபொழுதும் அவருக்கு இஸ்ரவேலில் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்துகிறார்.அவருக்கு ஆசாரிய ஊழியம் பார்த்த ஏலியிடம் அதை கூராமல் சாமுவேலிடம் ஆண்டவர் வெளிப்படுத்துகிறார். மனிதர்கள் நம்முடைய முகத்தை பார்ப்பார்கள். ஆனால் ஆண்டவரோ நம்முடைய இருதயத்தை பார்க்கிறார்.

நம்முடைய இருதயமும் கள்ளம், கபடம் இல்லாமல் ஒரு சிறு குழந்தையின் இருதயம்போல் இருக்கும் பொழுது ஆண்டவர் தம்மை நமக்கு வெளிப்படுத்துவார். அதோடு மட்டுமல்லாமல் தாம் செய்ய நினைத்த பெரிய பெரிய காரியங்களையும் நமக்கு வெளிப்படுத்தி நம்மைக்கொண்டு செய்ய வைப்பார். ஏலியின் பிள்ளைகள் ஆண்டவருக்கு பிரியமாய் நடக்காத காரணத்தால் அந்த வம்சத்தில் வந்த யாருமே அதற்கு பிறகு ஆண்டவரின் பணிவிடைகளை செய்யும் தகுதியை இழந்து போகின்றனர். ஒரு காரியத்தை ஆண்டவர் யாரைக்கொண்டு செய்ய நினைக்கிறாரோ அவர்களை கொண்டு செய்து முடிப்பார். ஆண்டவர் தம்முடைய எல்லா வார்த்தைகளிலும் ஒன்றையாகிலும் தரையிலே விழுந்து போக விடமாட்டார். சாமுவேலை ஆண்டவரின் தீர்க்கதரிசிதான் என்று தாண் முதல் பெயர் செபா மட்டுமுள்ள சகல இஸ்ரவேலருக்கும் விளங்கும்படி செய்தார்.

நாம் நம்முடைய எல்லா காரியங்களிலும் கடவுளுக்கு பயந்து நடந்தோமானால் கடவுள் நாம் செய்ய வேண்டிய எல்லா காரியத்தை யும் நமக்கு தெரிவிப்பார்.அவரின் வார்த்தைகளை அனுதினமும் வாசித்து தியானிக்கும் பொழுது அவருடைய வார்த்தைகளின் மூலம் நம்மோடு பேசுவார்.தம்மை நமக்கு வெளிப்படுத்துவார். அப்பொழுது நாமும் அவருக்கு பிரியமாய் நடந்து அவர் கொடுக்கும் சந்தொசத்தாலும் சமாதானத்தாலும்,நிறைந்து அவரிடத்தில் இருந்து ஆசீர்வாதங்
களை பெற்று வாழலாம். அவரை கனம் பண்ணுகிறவர்களை அவரும் கனம் பண்ணுவார். அவரை அசட்டை பண்ணினால் நாமும் அசட்டை பண்ணப்படுவோம்.ஏனெனில் ஆண்டவர் சிறியவனை புழுதியிலிருந்து எடுத்து எளியவர்களை குப்பையிலிருந்து உயர்த்துகிற தேவனாய் இருக்கிறார். தமக்கு பயந்து கீழ்படிந்து நடப்பவர்களை பிரபுக்களோடு உட்காரவும்,மகிமையுள்ள சிங்காசனத்தை கொடுக்கவும் விருப்பம் உள்ளவராய் இருக்கிறார்.

ஜெபம்

அன்பின் தேவனே! உம்மை நம்பி உமது வார்த்தைகளுக்கு கீழ்படிந்து நடக்கும் உமது பிள்ளைகளை நீர் ஒருபோதும் கைவிடவே மாட்டீர். உமது வார்த்தைகளை அனுப்பி எங்களை ஆற்றி தேற்றுகிறவர் நீரே. நாங்கள் அறியாமல் தெரியாமல் பாவம் செய்திருப்போமானால் அனுதினமும் எங்கள் குற்றங்கள், பாவங்கள் யாவையும் மன்னித்து எங்களை ஏற்றுக்கொள்ளும். உம்மைப்போல் பொறுமையோடும் அன்போடும் வாழ எங்களுக்கு கற்றுத்தாரும். நல்ல உள்ளத்தை தந்தருளும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம் எங்கள் ஜீவனுள்ள பிதாவே!ஆமென்!!அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: