“கற்றுக்கொள்ளுங்கள்”!

இயேசு ஒரு நல்லாசிரியர். அவர் விண்ணரசின் பாடங்கள் பலவற்றையும் தம் சீடர்களுக்குக் கற்றுத் தந்தார். அவரிடமிருந்து நல்ல பாடங்களைக் கற்றுக்கொள்ள அழைப்பும் விடுத்தார். இளைப்பாறுதலைப் பற்றிப் பேசும்போது, “என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள்” (மத் 11: 29) என்று சொன்னவர், இன்றைய வாசகத்தில் “பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்” என்கிறார்.

காரணம், இந்த செய்தி அவர்களுக்குப் புதியதல்ல. இறைவாக்கினர் ஓசேயா நூலில் அவர்கள் கற்றறிந்த செய்திதான். ஓசேயா வழியாக இறைவன் “உண்மையாகவே நான் விரும்புவது பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன். எரிபலிகளைவிட கடவுளை அறியும் அறிவையே நான் விரும்புகின்றேன்” (ஓசே 6:6) என்று மொழிந்திருந்தார். ஆனால், பரிசேயர் இந்த உண்மையை உள்வாங்கவில்லை. எனவேதான், “உங்கள் மறைநூல் அறிவைப் புதுப்பித்துக்கொள்ளுங்கள், மீண்டும் கற்றுக்கொள்ளுங்கள்” எனச் சொல்லாமல் சொல்கிறார் இயேசு.

நமக்கு இதில் ஒரு பாடம் இருக்கிறது. நாமும் திருநூல், மறைக்கல்வி நூல்களைக் கற்றிருக்கிறோம். ஆனால், அவற்றின் அடிநாதமான மானிட நேயத்தை, பரிவை, இரக்கத்தை நாம் உள்வாங்கியிருக்கிறோமா? அல்லது மேலோட்டமான செய்திகளை மட்டுமே பெற்றிருக்கிறோமா? என ஆய்வு செய்யப் பணிக்கிறார் இயேசு. இறைச் செய்தியின் மையம் பரிவு, தீர்ப்பிடாத் தன்மை, இரக்கம், புரிந்துகொள்ளல் என்பதைப் “நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்” என்று நம்மிடமும் இயேசு இன்று சொல்கிறார்.

மன்றாடுவோமாக: ஆண்டவராகிய இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். நீர் கற்றுத் தந்த இந்தப் பாடத்தை மறவாமல், பாவிகள், அறிவிலிகள், தாழ்த்தப்பட்டோர், பிற சாதியினர் என எவரையும் ஒதுக்காமல் அனைவரையும் ஏற்று அன்பு செய்யும் ஆற்றலை எங்களுக்குத் தந்தருளும்,. ஆமென்.

— அருள்பணி. குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: