கவலைகளைத் தவிர்த்து அவரில் நம்பிக்கை வைப்போம்

”சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும், நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்” என்று திருப்பாடல் 23: 4 சொல்கிறது. கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைத்து வாழ்கிறவர்களின் வாழ்க்கை மட்டும்தான் நிறைவுள்ள வாழ்வாக இருக்க முடியும். துன்பங்கள், துயரங்கள், கவலைகள் இவையனைத்தும் வாழ்வின் அங்கம். இதுதான் வாழ்க்கை. அந்த துன்பங்களை எதிர்கொள்வதற்கான ஆற்றலைக் கடவுள் நமக்கு தருகிறார்.

துன்பங்களை நாம் எதிர்கொள்ள வேண்டுமென்றால், நம்முடைய ஆற்றலில், திறமையில் நம்பிக்கை வைக்காமல், கடவுளின் வல்லமையில் நம்பிக்கை வைக்க வேண்டும். கடவுளின் வல்லமையில் நம்பிக்கையில் வைத்தவர்கள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள் என்பது இஸ்ரயேல் மக்களின் வாழ்விலிருந்து நாம் அறிந்துகொள்ளக்கூடிய மிகப்பெரிய பாடமாக இருக்கிறது. இதையே புனிதர்களின் வாழ்வும் நமக்கு பறைசாற்றுகிறது. ஒவ்வொரு புனிதர்களுமே, துன்பங்களுக்கு மத்தியில் வாழ்ந்தவர்களாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், அந்த துன்பங்களுக்கு நடுவிலும் அவர்கள் மகிழ்ச்சியோடு வாழ்ந்தார்கள். காரணம், அவர்கள் கடவுள் மீது வைத்திருந்த ஆழமான நம்பிக்கை.

”துணிவோடிருங்கள்” என்ற இயேசுவின் வார்த்தை இதைத்தான் நமக்குச்சொல்கிறது. மத்தேயு 11: 28 ல் இயேசு, ”பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்கிறார் நம் அன்பு ஆண்டவர். இறைவன் நம்மோடு என்றும் இருக்கிறார் என்கிற நம்பிக்கையில் வேரூன்றுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: