காணாமல் போன நாம் !

இறைவனைவிட்டுப் பிரிந்து காணாமல் போய்விடுகின்ற இஸ்ரயேல் மக்களையும், அவர்களின் வழிமரபினரான நம்மையும் இறைவன் மீண்டும், மீண்டும் தேடிவருகிறார் என்பதை இன்றைய ஞாயிறு வழிபாட்டின் வாசகங்கள் நினைவுபடுத்துகின்றன. இன்றைய முதல் வாசகத்தில் இஸ்ரயேல் மக்கள்மீது இறைவன் கோபம் கொண்டு, அவர்களை அழிக்கத் திட்டமிடுவதையும், மோசே அவர்களுக்காகப் பரிந்துபேசும்போது, இறைவன் தம் மனத்தை மாற்றிக்கொண்டு தம் மக்களுக்கு செய்யப்போவதாக அறிவித்த தீங்கைச் செய்யாது விட்டுவிட்டார் என்று வாசிக்கிறோம். இறைமக்களின் மனநிலை, இறைவனின் மனநிலை இரண்டையும் அருமையாகச் சித்தரிக்கும் வாசகம் இது.

இறைமக்களின் உள்ளம் கடினமானது. நன்றி மறந்தது. இறைவன் செய்த வியத்தகு செயல்கள் அனைத்தையும் மறந்து, வேற்று தெய்வங்கள்பால் செல்வது. எனவேதான், இறைவன் கூறுகிறார்: “இம்மக்களை எனக்குத் தெரியும். வணங்காக் கழுத்துள்ள மக்கள் அவர்கள்?. இன்றைய நாள்களிலும் நாமும் வணங்காக் கழுத்துள்ளவர்களாக, இறைவனை மறந்து, உலக இன்பங்கள், உலகப் பொருள்கள், களியாட்டங்களில் ஆர்வம் கொண்டு, இறைவனை மறந்து, பிற ‘தெய்வங்களை’ நாடிச் செல்லும் இனமாக இருக்கிறோம்.

ஆனால், இறைவனின் இயல்போ மாறானது. மோசேயின் பரிந்துரை மன்றாட்டைக் கேட்டு, பரிவு கொண்டவர். இப்போதும், தந்தை பிள்ளைகள்மேல் இரக்கம் காட்டுவதுபோல, நம்மீது இரக்கம் காட்டுபவர். நம்மை மன்னித்து ஏற்றுக்கொள்பவர். காணாமல் போன ஆட்டைத் தேடிச் செல்லும் நல்ல ஆயனாக நம்மைத் தேடி வருபவர்.

இந்த நாளில் இறைவனின் பேரன்பை உணர்ந்து, நன்றி சொல்வோமா! வணங்காக் கழுத்தினராய் வாழ்வதற்காக மன்னிப்பு கோருவோமா? நம்மைத் தேடி வரும் ஆயனின் குரல் கேட்டு மனந்திரும்புவோமா!

மன்றாடுவோம்: தேடி வரும் தெய்வமே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். உம்மை விட்டுப் பிரிந்து வாழும் எங்களை ஆயனாகத் தேடி வருபவரே, எங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~ அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: