காத்திருப்போம்

தொடக்ககால கிறிஸ்தவர்களை கொடுங்கோல் மன்னன் நீரோ, கடுமையாக வதைத்தான். கொடுமைப்படுத்தினான். அவர்களை தீப்பந்தங்களாக அரண்மனையில் எரியவிட்டான். இவ்வளவு சித்திவதைக்கு நடுவிலும் இயேசுவை பற்றிப்பிடிக்க கிறிஸ்தவர்களைத் தூண்டியது அவர்களின் விசுவாசம். தங்களை அடித்தாலும், உதைத்தாலும், சிலுவையில் அறைந்தாலும், ஈட்டியால் குத்தினாலும், பொறுமையோடு அனைத்தையும் ஏற்றுக்கொள்ள திருத்தூதர்களைத்தூண்டியது இந்த விசுவாசம். தனது மகளைக்கொன்ற கொலைகாரனை தனது மகனாக ஏற்றது மட்டுமல்லாமல், அவன் விடுதலைபெற முயற்சி எடுத்த அருட்சகோதரி. இராணி மேரியின் குடும்பத்திற்கு உந்துசக்தியாக இருந்தது, அவர்கள் இயேசுவில் கொண்டிருந்த விசுவாசம்.

விசுவாசம் என்றால் என்ன? அபகூக்கு 2: 3 ”குறித்தகாலத்தில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கின்ற காட்சி ஒருக்காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகக்கூறினாலும், எதிர்பார்த்துக் காத்திரு” என்று சொல்கிறது. இங்கே “காத்திரு” என்கிற வார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது. விசுவாசம் என்பது காத்திருத்தல். எப்படிக் காத்திருக்க வேண்டுமாம்? எபிரேயர் 11: 1 ல் சொல்லப்படுவது போல, ”எதிர்நோக்கி இருப்பவை கிடைக்கும் என்ற உறுதியோடு” காத்திருக்க வேண்டுமாம். எப்படிப்பட்ட மனநிலையோடு காத்திருக்க வேண்டுமாம்? எபிரேயர் 6: 14 ல் சொல்லப்படுவது போல, விசுவாசத்தின் தந்தை ஆபிரகாமைப்போல ”பொறுமையோடு” காத்திருக்க வேண்டுமாம். ஆக, விசுவாசம் என்பது, ”உறுதியோடு பொறுமையாக காத்திருத்தல்” ஆகும்.விவிலியம் முழுமையும் உறுதியோடு பொறுமையாக காத்திருந்தவர்கள் தான் விசுவாசத்திற்கு மாதிரியாகக் காண்பிக்கப்படுகிறார்கள். அதிலும் சிறப்பாக துன்பநேரங்களில் உறுதியோடு பொறுமையாக காத்து இருந்தவர்கள் தான் சிறந்த விசுவாச வீரர்கள். ஆபிரகாம், நோவா, யோசேப்பு, அன்னை மரியாள் விசுவாசத்திற்கு சிறந்த உதாரணங்கள்.

உறுதியோடு பொறுமையாக காத்திருந்து விசுவாசத்தை காத்துக்கொள்ள ஆண்டவர் அழைப்புவிடுக்கின்றார். இறுதிவரை விசுவாசத்திலே நிலைத்திருக்கிறவர்கள் தான் பேறுபெற்றவர் ஆவர். எனவே, நாமும் அத்தகைய விசுவாசத்தில் வார்த்தெடுக்கப்பட முயற்சி எடுப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: