காலைதோறும் அவர் என்னைத் தட்டி எழுப்புகிறார். ஏசாயா 50 : 4

ஆண்டவரின் பேரன்பு முடிவுறவில்லை! அவரது இரக்கம் தீர்ந்து போகவில்லை! காலைதோறும் அவை புதுப்பிக்கப்படுகின்றது! அவரே பெரிதும் நம்பிக்கைக்குரியவர்!. அவரையே நம்முடைய பங்காக கொண்டு அனுதினமும் செயல்படுவோமானால் நம் நிழலாக இருந்து நம்மை காத்துக்கொள்வார். காலைதோறும் தேடுவோருக்கு அவர் நல்லவர்! ஆண்டவர் அருளும் மீட்புக்காக அமைதியுடன் காத்திருப்பதே நலம்! ஏனெனில் அவர் கட்டளையிடாமல் யார் தாம் சொல்லியதை நிறைவேற்றக்கூடும்?

ஆண்டவர் நம்மை ஆராய்ந்து அறிந்திருக்கிறார். நாம் அமர்வதையும், எழுவதையும் அறிந்திருக்கிறார். நம்முடைய எண்ணங்கள் சிந்தனைகள் யாவும் அவருக்குத் தெரியும். நாம் நடந்தாலும், படுத்திருந்தாலும் நம்முடைய வாயில் வார்த்தைகள் உருவாகும் முன்பே முற்றிலும்
அவர் அறிந்திருக்கிறார். நம்மேல் அவர் வைத்துள்ள அறிவை நாம் அறியமுடியுமோ? அது நமக்கு வியப்பானது அல்லவோ! அவருக்கு மறைவாக எங்கேயாவது நாம் போகமுடியுமா? விண்ணையும்,
மண்ணையும், காற்றையும், கடலையும், மண்ணான மனிதர்களாகிய நம்மையும் படைத்தவர் அவர் அல்லவா!!

நலிந்தவனை நல்வாக்கால் ஊக்குவிக்கும் அறிவை நாம் பெற்றிட ஆண்டவர் நமக்கு கற்றோரின் நாவைக் கொடுக்கிறார். அதற்காகவே காலைதோறும் நம்மை தட்டி எழுப்புகிறார். கற்போர் கேட்பதுபோல நாமும் காலைதோறும் அவரின் வார்த்தைகளை வாசித்து தியானித்து அவரின் வார்த்தைக்கு செவிக்கொடுப்போம். நம் கடவுளாகிய ஆண்டவர் நமது நடுவில் இருக்கிறார். அவர் மாவீரர்; மீட்பு அளிப்பவர்; நம் பொருட்டு மகிழ்ந்து களிகூருவார்; அவரின் அன்பினால் நமக்கு புத்துயிர் அளிப்பார்; நாம் காலைதோறும் அவரைத் தேடும்பொழுது நம்மைக் குறித்து மகிழ்ந்திடுவார்.

இயேசுகிறிஸ்து இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் அவர் கடவுளின் குமாரனாக இருந்தாலும் தினந்தோறும் அதிகாலையில் எழுந்து இறைவனிடம் வேண்டிட தனிமையான ஒரு இடத்தை நாடிச்சென்றார். இதை நாம் மாற்கு 1 : 35 ம் வசனத்தில் இப்படியாக வாசிக்கலாம்.[இயேசு விடியற்காலைக் கருக்கலில் எழுந்து தனிமையான ஓர் இடத்திற்குப் புறப்பட்டு சென்றார்.அங்கே அவர் இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார் ] இறைவனின் மகனாக வந்த அவரே காலைதோறும் வேண்டினார் என்றால் நாம் செய்வது எத்தனை முக்கியம்? என்று யோசித்து நாமும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் தினமும் காலையில் அவரைத் தேடுவோம். அப்பொழுது காலைதோறும் அவரின் கிருபையும், இரக்கமும், புதியவைகளாக இருந்து நம்மை ஒரு தீங்கும் தாக்காதப்படிக்கு அவரின் இறக்கைக்குள் வைத்து நம்மை காத்து, வழிநடத்தி ஆசீர்வதிப்பார். நம்முடைய தேவைகள் யாவையும் சந்தித்து பொறுப்பெடுத்துக்கொள்வார்.

கெத்சமனித் தோட்டத்தில் இயேசு தனது சீடர்களுடன் சென்று அவர் படப்போகும் பாடுகளை நினைத்து தன் தந்தையிடம் வேண்டுதல் செய்துவிட்டு திரும்பி வந்து பார்க்கும் பொழுது தமது சீடர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் காண்கிறார். அப்பொழுதும் அவர்கள் மேல் கோபம் கொள்ளவில்லை. பேதுருவை பார்த்து எனக்காக நீங்கள் ஒரே ஒரு மணி நேரம் விழித்திருக்க கூடாதா? என்று ஏக்கத்தோடு கேட்கிறார். நீங்கள் சோதனைக்கு உட்படாதபடிக்கு விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள் என்று சொல்கிறார்.மத்தேயு 26 : 40,41. ஆம், அதே இயேசு இன்றும் அதிகாலையில் உங்களுக்காக, நாம் அவரிடம் வேண்டும் காரியத்துக்காக, நம் தேவைகளை சந்திக்க மிகுந்தாவலுடன் காலைதோறும் நம்மை தட்டி எழுப்புகிறார். என் மகனே! என் மகளே! எனக்காக ஒரு மணி நேரம் தரமாட்டாயா? என்று ஏக்கத்தோடு கேட்கிறார்.உங்கள் பதில் என்ன? நீங்களே முடிவு செய்யுங்கள். அவர் யாரையும் கட்டாயப்படுத்த மாட்டார்.ஏனெனில் அவர் அன்பே உருவான கடவுள்.அவரையே நாடுங்கள், எல்லாம் சேர்த்துக்கொடுக்கப்படும்.

அன்புள்ள தெய்வமே!!

துதிகளின் மத்தியில் வாசம் செய்யும் இயேசு ஆண்டவரே! உம்மை போற்றுகிறோம், வாழ்த்துகிறோம், வணங்குகிறோம். காலைதோறும் எங்களை தட்டி எழுப்பி அந்தந்த நாளின் ஆசீர்வாதத்தால் நிரப்பி ஆசீர்வதித்து ஒரு தீங்கும் எங்களை தொடாதபடிக்கு கண்ணின் மணியைப்போல் காப்பவரே! உம்மையே ஆராதிக்கிறோம். நாங்கள் குறைவுள்ளவர்கள் ஆண்டவரே! நீரோ எங்கள் குறைகளை ஒரு பொருட்டாக எண்ணாமல் உமது அளவில்லா தயவினாலும், இரக்கத்தினாலும், கிருபையினாலும், எங்களை தாங்கி நேசித்து, அன்பு பாராட்டி அரவணைத்துக்கொள்கிறீர். உமக்கு நன்றி பலிகளை ஏறேடுக்கிறோம். மாட்சியும், மகிமையும், மகத்துவமும் உமக்கே உண்டாகட்டும். இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் தந்தையே!

ஆமென்! அல்லேலூயா!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: