கிறிஸ்துமஸ் பெருவிழா

கிறிஸ்துமஸ் பிறப்பு விழா ஏன் டிசம்பர் 25 ம் நாள் கொண்டாடப்பட வேண்டும்? ஆங்கில வருடத்தை “கிறிஸ்து பிறப்பிற்கு முன்” மற்றும் ”கிறிஸ்து பிறப்பிற்கு பின்” என்று பிரித்திருக்கிறோம். அப்படிப்பார்த்தால், இயேசு பிறந்தது ஜனவரி முதல் தேதி தானே. பின் ஏன் கிறிஸ்துமஸ் பிறப்புவிழாவை டிசம்பர் 25 ம் நாள் கொண்டாடுகிறோம்?

கிறிஸ்து பிறப்பு விழாவைப்பற்றி இரண்டு வாதங்களை, திருவழிபாட்டு அறிஞர்கள் முன்வைக்கின்றனர். 1. சமய வரலாறு. 2. கணக்கீடு. முதல் கூற்றுப்படி, உரோமைப் பேரரசன் அவ்ரேலியுஸ் கி.பி.274 ம் ஆண்டு, சூரிய கடவுளுக்கு தனது ஆட்சி பொறுப்பில் உள்ள அனைத்து இடங்களிலும் ஒரு விழா கொண்டாடப்பட வேண்டும் என்று ஆணையிட்டான். அதனை டிசம்பர் 25ம் நாள் கொண்டாட வேண்டும் என்று கட்டளை பிறப்பித்தான். ஆனால், அவனுடைய உள்நோக்கம் விழா கொண்டாடுவது கிடையாது. மாறாக, இந்த விழா மூலம், மக்கள் அனைவரையும் தன்னுடைய அதிகாரத்தின் கீழ் ஒரே கலாச்சாரத்தின் கீழ், தனது ஆட்சியை பலப்படுத்தவே ஆகும். கிறிஸ்தவர்களை உரோமை கிரேக்க விழா மோகத்திலிருந்து, காக்கும் முயற்சியாக உரோமைத் திருச்சபையானது கிறிஸ்து பிறப்பு விழாவையும் இதே நாளில் கொண்டாட ஆணை பிறப்பித்தது. இதுதான் சமய வரலாறு பற்றிய கூற்று.

இரண்டாவது கூற்றுப்படி, பழைய திருத்தந்தையர்கள் மற்றும் புனிதர்களின் மறையுரைகளிலிருந்து மார்ச் 12 ம் தேதி இயேசுவின் பாடுகள் கொண்டாடப்பட்டது, என்பதை நாம் அறியலாம். இதன்படி, மார்ச் 25 ம் நாள் தான் மரியாளுக்கு, கபிரியேல் அதிதூதர் மங்கள வார்த்தை சொல்லியிருக்க வேண்டும். பழங்கால முறைப்படி மனித வாழ்வின் தொடக்கத்தையும், முடிவையும் ஒரேநாளில் முழு எண்ணிக்கை வருமாறு கணக்கிட்டனர். இந்த வாதத்தின்படி, மார்ச் 25 ல் இயேசு கருவில் உருவானார். அதிலிருந்து சரியாக, ஒரு குழந்தை முழுவளர்ச்சி பெறும் காலத்தைக் கணக்கிட்டால், டிசம்பர் 25 ல் இயேசு பிறந்திருக்க வேண்டும். இரண்டு சிந்தனைகளுமே வேறு வேறாக இருந்தாலும், அடிப்படையில் அவைகள் சொல்ல வருவது, டிசம்பர் 25 ம் தேதி, தொடக்கத்தில் இயேசு பிறப்பு விழாவாகக் கொண்டாடப்பட்டது என்பதுதான். இயேசு பிறப்பு விழா நமது வாழ்வில் என்றும் மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் நிறைவாகத் தரட்டும். அனைவருக்கும் இயேசு பிறப்பு நல்வாழ்த்துகள்.

 

எளிமையான இறைவன்

உரோமைப் பேரரசு காலத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பு அரசின் பார்வையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது. மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. முதலாவதாக, எத்தனை வரிகள் இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளவும், இராணுவத்திற்கு ஆள் சேர்ப்பதற்கும் இது பயன்படுத்தப்பட்டது. யூதர்களுக்கு இராணுவத்தில் சேர விலக்கு அளிக்கப்பட்டிருந்தது. எனவே, வரிமுறைக்காக அவர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு பதினான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்பட்டது.

நாசரேத்துக்கும், பெத்லகேமுக்கும் இடையேயான தூரம் ஏறக்குறைய 8 மைல்கள். வழக்கமாக பயணம் செய்வோர் தங்குவதற்கென ஆங்காங்கே சத்திரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சத்திரத்தில் தங்குவதற்கு இடமும், பயணம் செய்கின்ற விலங்குக்கான தீவனமும், சமைப்பதற்கு சிறிது வைக்கோலும் மட்டும்தான் கொடுக்கப்படும். உணவு பயணியரைச் சார்ந்தது. மரியாவும், யோசேப்பும் சத்திரத்தில் தங்க வந்திருந்தபோது, அது பயணியர்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. எனவே, அவர்கள் தங்குவதற்கு கிடைத்த இடம் மாட்டுக்கொட்டகை. அந்த இடத்தில்தான் கடவுளின் குழந்தை பிறக்கிறது. இந்த உலகத்தையே படைத்துப் பராமரிக்கிற இறைவனின் மகனுக்கு கிடைத்த இடம் எளிய இடம்தான். சற்று ஆழமாக சிந்தித்தால், இதுவும் கூட நமக்கு சிறந்த பொருள் தருவதாக அமைகிறது. நமது இறைவன் எளிமையை விரும்புகிற இறைவன். பகட்டையோ, ஆடம்பத்தையோ அல்ல என்பதையே இது காட்டுகிறது.

இறைவனை ஆடம்பரத்திலோ, பெரும் கொண்டாட்டங்களிலோ அல்ல, மாறாக, எளிமையிலும், எளியவர்களிடத்திலும் தான் பார்க்க முடியும். ஏழைகளிலும், எளியவர்களிலும் இறைவனைக்காண முற்படுவோம்.

~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: