கிறிஸ்துவின் பணியாளராய்க் கடவுளின் திருவுளத்தை உளமார நிறைவேற்றுவோம்.எபேசியர் 6:6

கர்த்தருக்குள் அன்பார்ந்த சகோதர, சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்.

இந்த நாளிலும் நம்முடைய எல்லா வேண்டல்களையும், மன்றாட்டுகளையும் இறைவனிடம் எழுப்பி கிறிஸ்துவின் பணியாளர்களாய் செயல்பட்டு கிறிஸ்து எப்படி தான் ஒரு தெய்வ குமாரனாய் இருந்தும் தனது தந்தைக்கு எல்லா காரியங்களிலும் கீழ்படிந்து வாழ்ந்து அவரின் திருவுளத்தை நிறைவேற்றினாரோ நாமும் அதைப்போல் எல்லாக்காரியத்திலும் கிறிஸ்துவைப்போல் செயல்பட்டு கடவுளின் திருவுளத்தை அறிந்து அதன்படியே வாழ்ந்து அவரின் சித்தத்தை நிறைவேற்றுவோம். அப்பொழுது நமக்கு ஏற்படும் எல்லா பிரச்சனைகளிலும் இருந்து நம்மை பாதுகாத்து, காப்பாற்றி நம் தேவைகளையும், நாம் விரும்பும் எல்லாவற்றையும் கொடுத்து நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவார்.

நாம் வாழும் இந்த உலகத்தில் பலவிதமான கஷ்டங்களையும், இன்னல்களையும் நாம் ஒவ்வொருவரும் அனுபவக்கிறோம். கஷ்டம் இல்லாத வாழ்க்கை இல்லை என்று சொல்லும் ஒருவராகிலும் கிடையாது. ஏனென்றால் நாம் மனிதர்களோடு மட்டும் போராடுவதில்லை. ஆட்சிபுரிவோர், அதிகாரம் செலுத்துவோர், இருள் நிறைந்த இவ்வுலகின்மீது ஆற்றல் உடையோர், வான்வெளியிலுள்ள தீயஆவிகள் ஆகியவற்றோடும் போராடி வாழ்கிறோம். ஆகையால் நாம் கடவுளோடு இணைந்து அவர் தரும் வல்லமையாலும், ஆற்றலாலும், வலுவூட்டப் பெற்று, கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன்களையும் அணிந்துக் கொண்டு வாழ்வோமென்றால் அவைகளில் இருந்து பாதுக்காக்கப்படுவோம்.

தமது தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற கிறிஸ்து நமக்காக சிலுவை சுமந்து நம்முடைய பாவங்களுக்காக அவர் கல்வாரியில் தமது ஜீவனை கொடுத்தார். நாமும் இனிவரும் காலத்தில் பொல்லாத நாட்களுக்கு எதிர்த்து நின்று அனைத்தின்மீதும் வெற்றிபெற்று நிலை நிற்க வல்லமை பெறும்படி கடவுள் அருளும் எல்லாப் படைக்கலன் களையும்,எடுத்துக்கொள்வோம். உண்மையை இடைக்கச்சையாகக் கட்டிக்கொண்டு, நீதியை மார்புகவசமாக அணிந்து நிற்போம். அமைதியை அருளும் நற்செய்தியை அறிவிப்பதற்கான ஆயத்தநிலையை நம்முடைய காலில் மிதியடிகளாக போட்டுக்கொள்வோம். எந்த நிலையிலும் நம்பிக்கை என்னும் கேடயத்தைப் பிடித்துக்கொண்டு அதைக்கொண்டு தீக்கணைகளையெல்லாம் அணைத்து கடவுள் தரும் மீட்பை தலைச்சீராகவும், கடவுளின் வார்த்தையை தூய ஆவி அருளும் போர்வாளாகவும் எடுத்து செயல்பட்டு நம் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவோம்.

அன்பார்ந்தவர்களே!இதுவே கடவுளின் பணியாளராய் வாழ விரும்பும் ஒவ்வொருவரின் செயல்பாடாகும். இவ்வாறு செயல்பட்டு கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றி வாழ்ந்தோமானால் தந்தையாகிய கடவுளிடமிருந்தும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடமிருந்தும் நம்பிக்கையோடு கூடிய அன்பும்,அமைதியும்,நம் எல்லோருக்கும் உரித்தாகும். அவரின் திருவுளத்தை நிறைவேற்றும் ஒவ்வொருவருக்கும் அவரின் அழியாத அன்பு என்றும் நிலைத்திருக்கும். ஆமென்.

ஜெபம்

எங்களை அதிகதிகமாய் நேசிக்கும் பரம தகப்பனே!உமக்கு நன்றி சொல்கிறோம். கர்த்தராகிய இயேசுவே நீர் உமது தந்தையின் திருவுளத்தை அறிந்து அதன்படியே நடந்து அவரின் எண்ணத்தை எல்லாம் நிறைவேற்றியதுபோல் நாங்களும் உமது திருவுளத்தை அறிந்து அதன்படியே நிறைவேற்ற போதித்து வழிநடத்தும். உமது பணியாளாராய் செயல்பட்டு எல்லாக் காரியத்திலும் உமக்கு மகிமை சேர்க்க உதவிச் செய்யும். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் அன்பின் தெய்வமே! ஆமென்!! அல்லே லூயா !!!

You may also like...

Leave a Reply

%d bloggers like this: