கிறிஸ்து அரசர் பெருவிழா !

பணித் தலைமை என்னும் புதிய தலைமைத்துவத்தை அறிமுகப்படுத்தியவர் ஆண்டவர் இயேசு. இன்றைய நாள்களிலும் ஆளுகை மேலாண்மைப் பாடங்களில் பணித் தலைமைத்துவத்தை ஓர் அவசிய பாடமாகவும், இன்றியமையா மாதிரியாகவும் காட்டுகின்றனர் தலைமைத்துவ வல்லுனர்கள். இயேசுவை அரசராகக் கொண்டாடும் இந்த நாளில் நமது சிந்தனையும், செயல்பாடும் அவ்வாறே இருக்க வேண்டும். இயேசு அறிமுகப்படுத்திய அரசாட்சி, இயேசு மாதிரி காட்டிய பணித் தலைமைத்துவம். இயேசுவைப் போல நாம் வாழ்கிறோமா என்று நம்மையே கேட்டுக்கொள்வோம்.

ஒவ்வொரு கணவரும் தம் மனைவியை எப்படி நடத்துகிறார் என்று சோதித்துப் பார்க்க வேண்டும். அதிகாரமும், அடிபணியச் செய்யும் ஆளுமையா, அல்லது பணிவிடை செய்யும் அன்பின் ஆளுகையா? அதிகாரிகள் தங்கள் ஊழியர்களை நடத்தும் விதம் எப்படி? பணித் தலைமையா, அல்லது அதிகாரத் தோரணையா? ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை நடத்தும் விதம், பங்குத் தந்தையர் பங்கு மக்களை நடத்தும் விதம்… இவை அனைத்திலும் நாம் இயேசுவைப் பின்பற்றி தலைவர்களாக இருக்கலாம், அல்லது அதிகாரமும் ஆணவமும் கொண்ட தலைவர்களாகவும் இருக்கலாம் என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள் என்று சொன்ன ஆண்டவர் இயேசுவிடமிருந்து பணித் தலைமைப் பண்பைக் கற்றுக்கொள்வோம்.

மன்றாடுவோம்: எம் இறiவா, எம் அரசே, நாங்கள் உம்மைப் புகழ்ந்து போற்றுகிறோம். உம்மை எம் தலைவராக, ஆண்டவராக, அரசராக ஏற்று வழிபடுகிறோம். நீர் எங்களுக்குக் கற்றுத் தந்த, மாதிரி காட்டிய தலைமைப் பண்பை ஏற்று, பிறர்க்குப் பணிவிடை புரிந்து தலைவர்களாய் விளங்க அருள்தாரும் உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: