கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு விழா

இந்த விழா ஐந்தாம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் இந்த விழா மார்ச் மாதம் 25 ம் தேதி கொண்டாடப்பட்டது. கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு 9 மாதங்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. இது தவக்காலம் அல்லது உயிர்ப்பு பெருவிழாவின் காலங்களில் வந்ததால், இவ்விழா குறித்துக்காட்டும் மகிழ்ச்சி பண்புகளை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, பிற்காலங்களில் டிசம்பர் 18 ம் தேதிக்கு, இந்த விழா மாற்றியமைக்கப்பட்டது.

இந்த விழாவானது, மரியாளின் முன்னறிவிப்பு, இயேசு கருவில் உருவான விழா, இறைமகன் மனிதரான விழா என, பல பெயர்களால் அழைக்கப்பட்டது. 1969 ம் ஆண்டிற்கு பிறகு நடந்த வழிபாட்டு மறுசீரமைப்பிற்கு பின், இந்த விழாவானது கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா என்று அழைக்கப்பட்டது. புதிய திருவழிபாட்டு ஒழுங்கின்படி, இந்த விழா மார்ச் மாதம் 25 ம் நாள் கொண்டாடப்பட வேண்டும். புனித வாரத்திலோ அல்லது உயிர்ப்பு விழாவின் வாரத்திலோ வந்தால், உயிர்ப்பு வாரத்திற்கு அடுத்து வரும் திங்கட்கிழமை கொண்டாடப்பட வேண்டும். இது தவக்காலத்தில் கொண்டாடப்பட்டாலும் பெருவிழா தான்.

இந்த விழாவின் பெயர், மரியாளின் மீட்புப்பணியில் பங்கு குறைவதாகஅர்த்தம் கொள்வதற்காக கொடுக்கப்படவில்லை. மாறாக, இந்த விழா இயேசுவின் மீட்புப்பணியில் அவருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைக் குறிப்பதாக அமைகிறது.


திருப்பாடல் 40: 6 – 7அ, 7ஆ – 8, 9 – 10
”இறைவா உம் திருவுளம் நிறைவேற்ற நான் வருகின்றேன்”

கடவுளுக்கு உகந்தது எது? கடவுளுக்கு பிரியமானது எது? எது கடவுளை மகிழ்ச்சிபடுத்தும்? இது போன்ற கேள்விகளெல்லாம் நாம் கேட்டுப்பார்த்து, நமது வழிபாட்டை அமைத்துக்கொண்டால், இன்று நாம் “வழிபாடு” என்ற பெயரில் செய்துகொண்டிருக்கிற பலவற்றை, நாம் நிறுத்த வேண்டியது வரும். மாதாவுக்கும், புனிதர்களுக்கும் தங்கநகைகள் போட்டு அழகு பார்க்கிற மக்களின் உள்ளம், ஓர் ஏழையின் வயிற்றுப்பசியைப் போக்கவோ, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தவோ முயற்சிகள் எடுப்பது இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலைகள் நிலவும் காலக்கட்டத்தில், நாம் கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவதுதான் உண்மையான பலி என்பதை, இன்றைய திருப்பாடலின் பல்லவி நமக்கு உணர்த்துவதாக அமைகிறது.

கடவுளின் திருவுளம் எது? கடவுள் பலிபொருளை விரும்பவில்லை. எரிபலிகள் தனக்கு படைக்கப்படுவதை விரும்பவில்லை. மாறாக, உண்மையான அன்பு, நீதி, நேர்மை, வாய்மை போன்ற பண்புகளை நாம், வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகிறார். அதுதான் கடவுளுக்கு நாம் செலுத்தக்கூடிய உண்மையான பலியாக இருக்க முடியும் என்றும் சொல்கிறார். நாம் நேர்மையோடு வாழ்கிறபோது, அது மற்றவர்களுக்கும் தெரியக்கூடிய வகையில், அனைவரும் அறியக்கூடிய வகையில் வாழப்பட வேண்டும். அதை மறைத்து வாழ்வது, சரியான வாழ்வாக இருக்க முடியாது. அது நிச்சயம் சவாலான, கடினமான ஒன்று தான். ஆனால், அதுதான் கடவுளுக்கு உகந்த வாழ்வாக இருக்கிறது. கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றக்கூடிய வாழ்வாக இருக்கிறது.

இன்றைக்கு நீதியோடு வாழ்கிறவர்கள் மிக மிக சொற்ப எண்ணிக்கையிலே உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர், மறைமுக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அப்படி வாழ்வது உண்மையில் சவாலான வாழ்வு தான். அப்படி வாழ வேண்டும் என்கிற எண்ணம் கொண்டிருந்தால், நிச்சயம் கடவுள் தன்னுடைய ஆவியை நமக்குக் கொடுத்து நம்மை இயக்குவார் என்கிற நம்பிக்கையோடு, இந்த திருப்பாடலை நாம் தியானிப்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: