கொடுங்கள்! கொடுக்கப்படுவீர்கள்!

இயேசு படகைவிட்டு இறங்கிய உடனே, மிகப்பெரிய கூட்டம் இயேசுவைத்தேடி வருகிறது. வந்திருந்தவர்கள் அனைவருமே இயேசுவிடமிருந்து பெற்றுக்கொள்வதற்காக வந்தவர்கள். இன்னும் கடினமாகச் சொல்ல வேண்டுமென்றால், அவர்கள் இயேசுவைப் பயன்படுத்துகிறவர்கள். அவர் சொல்வது அவர்கள் உள்ளத்தை சென்றடைந்ததா? இல்லையா? தெரியவில்லை. ஆனால், இயேசுவிடமிருந்து எதையாவது பெற்றுக்கொள்ள வேண்டும், என்று தங்களத தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக வந்திருக்கிறவர்கள் தான்.

வந்திருக்கிறவர்களில் யாரும் இயேசுவுக்கு கொடுக்க வேண்டும் என்று வந்ததாகத் தெரியவில்லை. உண்மைதான். ஒரு சில தேவைகள் கடவுளால் மட்டும்தான் நிறைவேற்றித்தர முடியும். கடவுள் நமக்குக் கொடுப்பதற்கு மகிழ்ச்சியடைகிறவர் தான். கடவுளிடமிருந்து மட்டும்தான் நாம் எதையும் பெற்றுக்கொள்ள முடியும். இருந்தபோதிலும், கொடுப்பதும் அன்பின் அடையாளம் தான். இயேசுவிடமிருந்து ஏராளமானவற்றைப் பெற்றிருந்தும், இயேசுவுக்கு துன்பம் வந்தபோது, அவரோடு யாரும் இல்லை. இது, இயேசுவை மற்றவர்கள் வெறுமனே பயன்படுத்தினார்கள் என்பதாகத்தான் நாம் எண்ண முடியும்.

இன்றைக்கு ஆலயத்திற்கு எத்தனையோ பேர் வருகிறோம். வருகிற அனைவருமே, கடவுளிடமிருந்து பெற்றுக்கொள்ளத்தான் வருகிறோமே ஒழிய, கடவுளுக்கு நன்றி செலுத்த, கொடுக்க வருகிறவர்கள் வெகு சொற்பமே. பெறுவதை விட கொடுப்பதை பெருமையாக எண்ணுவோம்.

~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: