சிந்திக்கத் தெரிந்தவர்களாக…

ஒரு துளி விஷம், பால் முழுவதையும் விஷமாக்கிவிடுகிறது. அதுபோலத்தான் கெட்ட எண்ணங்களும், கெட்ட குணங்களும். இயேசு தனது ஊருக்கு வந்து, ஆண்டவரின் வார்த்தையை அறிவிக்க வருகிறார். அங்கே ஏற்கெனவே, அவரைப்பற்றிய தவறான எண்ணத்தை ஒருசிலர் பரப்பிவருகின்றனர். சற்று ஆழமாகப் பார்த்தால், முதலில் மக்கள் வியப்படைகிறார்கள். அவரது போதிக்கும் ஆற்றலைப் பார்த்து, அதிசயிக்கிறார்கள். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, இவ்வளவு ஆற்றலோடு நற்செய்தியைப் பறைசாற்றும் இயேசுவிடத்தில், அவர்களுக்கு உண்மையிலே அதிகமான ஈர்ப்பு. ஆனால், அவர்கள் உள்ளத்தில் துளி விஷத்தை, கெட்டவர்கள் ஊற்றிவிடுகிறார்கள். அது அப்படியே கடைசிவரிகளில் பிரதிபலிக்கிறது.

எது நல்லது, எது கெட்டது என மக்களே, சிந்தித்து, முடிவெடுக்க ஆற்றல் இல்லாதவரை, உண்மைக்கெதிரான இந்த போராட்டங்கள் நடந்து கொண்டேயிருக்கும். ஏமாற்றுகிறவர்கள் இருந்துகொண்டே இருப்பார்கள். உண்மையை நாம் உரைப்பதைவிட, உண்மையை உணரும் ஆற்றலை மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இன்றைக்கு அரசியல்வாதிகள் இலவசங்கள் என்ற பெயரில் ஆயிரம் ரூபாய்க்கு கூட தேராத பொருட்களைக் கொடுத்து, பேருந்து கட்டணத்தையும், அத்தியாவசியப்பொருட்களையும் விலையேற்றி, ஏழைமக்களின் வயிற்றில் அடிக்கிறார்கள். ஆனால், மக்கள் இன்னும் இதனை உணராத நிலையில் இருக்கிறார்கள். அவர்களின் உணர்ச்சி வார்த்தைகளில், மாயவலைகளில் சிக்கிவிடுகிறார்கள். இந்த மாய வலையை அறுத்தெறிய வேண்டும். கட்சி அரசியலில் சேராது, நேர்மையானவர்களுக்கு, நல்லவர்களுக்கு நாம் வாக்களிக்க முன்வர வேண்டும். தலையாட்டிப் பொம்மைகளையும், ஊமைக் கோமாளிகளையும், எலும்பில்லாதவர்களையும் வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்டும். அதற்கு ஒவ்வொருவரும் அரசியல் அறிவும், அனுபவமும் பெற வேண்டும்.

இன்றைக்கு மக்களின் சிந்திக்கத் தெரியாத இந்த நிலையைப் பயன்படுத்தி, ஆளாளுக்கு ஏழை, எளிய மக்களை சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள். தங்களது உரிமைகளை உணராது இருக்கிறார்கள். பிச்சைக்காரர்களாக கையேந்திக் கொண்டிருக்கிறார்கள். அதை உடைத்து, ஏழை, எளிய மக்களை, சிந்திக்கத் தெரிந்தவர்களாக மாற்ற உறுதியேற்போம்.

~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: