சிறுகுழந்தைகளை வரவிடுங்கள்

பொதுவாக யூதத்தாய்மார்கள் தங்களுடைய குழந்தைகளைப் போதகர்களிடம் கொண்டுவந்து ஆசீர் பெற்றுச்செல்வது வழக்கம். குறிப்பாக தங்கள் குழந்தைகளின் முதல் பிறந்தநாளில் இதை அவர்கள் தவறாமல் செய்தார்கள். இந்த ஒரு நோக்கத்தோடு தான், அவர்கள் தங்கள் குழந்தைகளை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள். சீடர்களுக்கும் இது நன்றாகத்தெரியும். சீடர்களுக்கு நிச்சயமாக குழந்தைகளை இயேசுவிடம் கொண்டு வந்து ஆசீர்பெற்றச்செல்வது மகிழ்ச்சிதான். ஆனால், இங்கே அவர்கள் கோபப்படுவதற்குக்காரணம் ‘சூழ்நிலை’. இயேசு ஏற்கெனவே இரண்டு முறை தான் பாடுகள் பட்டு இறக்கப்போவதை சீடர்களுக்கு அறிவித்துவிட்டார். சீடர்களுக்கு அது என்னவென்று முழுமையாகப்புரியவில்லை என்றாலும், இயேசுவின் முகத்தில் படிந்திருந்த கலக்க ரேகைகளை அவர்கள் உணர்ந்திருந்தார்கள். எனவே, இயேசுவோடு இருந்து அவரைப்பாதுகாப்பதும், தேவையில்லாத தொந்தரவுகளிலிருந்து அவரைக்காப்பாற்றி அவருக்கு ஓய்வுகொடுக்க நினைப்பதும் சீடர்களுடைய எண்ணமாக இருந்தது. எனவேதான், அவர்கள் பெற்றோரை அதட்டினர்.

இயேசுவோ, சிறு குழந்தைகளை தன்னிடம் வரவிட அவர்களைப்பணிக்கிறார். தனக்கு எவ்வளவுதான் துன்பங்கள் இருந்தாலும், கலக்கம் இருந்தாலும், அதிலே மூழ்கிப்போய் தவிக்காமல், தன்னுடைய கடமையை நிறைவாகச்செய்வதில் அதிக அக்கறை எடுக்கிறார். இறைவனின் பிரசன்னத்தை, அன்பை, இரக்கத்தை, ஆசீரை மனுக்குலம் உணரச்செய்வதுதான் இயேசுவின் கடமை. அதை நிறைவாகச்செய்வதின் சிறப்பான உதாரணம்தான் இந்த நற்செய்திப்பகுதி. தன்னுடைய பணிவாழ்வில் ஒவ்வொருநிமிடமும் இயேசு விழிப்பாக இருந்தார் என்பதைத்தான் இது காட்டுகிறது. அவருடைய பணிவாழ்வில் தன் சுயநலத்துக்காக எதையும் குறை வைப்பதற்கு தயாரில்லை.

வாழும் ஒவ்வொரு கணமும் நிறைவோடு வாழ வேண்டும். நம்முடைய கவலைகளும், கலக்கங்களும் நாம் மற்றவருக்கு உதவி செய்வதற்கு தடையாக இருக்கக்கூடாது. அது ஒரு பொருட்டாகவும் இருக்கக்கூடாது. இறைவனை துணையாகக்கொண்டு நமது வாழ்வை சிறப்பாக வாழ்வோம்.

– அருட்பணி. தாமஸ் ரோஜர்


 

கணவனும் மனைவியும் என்றும் இணைந்து இன்புற்ற வாழ உறுதுணையாக இருப்பது குழந்தைகள். எந்த வீட்டில் குழந்தைகள் இல்லையோ அந்த வீட்டிற்கு விருந்தினர்கள் போகவேண்டாம் என்கிறார் ஒரு அனுபவஸ்தர். ஏனென்றால் அந்த வீட்டில் எப்பொழுதும் கணவன் மனைவியிடையே சண்டை, மனத்தாங்கல் இருந்துகொண்டே இருக்கும். குழந்தைகள்கணவனையும் மனைவியையும் இணைந்து மகிழ்ந்து வாழ வைக்கும் இணைப்பாளர்கள்.

குழந்தைகள் இருந்தால் மட்டும் போதாது. அந்த குழந்தைகள்ஆண்டவருக்குள் வளரும் குழந்தையாக இருக்க வேண்டும். எனவே தங்கள் சிறு பிள்ளைகளை இயேசு தொட வேண்டுமென்று பெற்றோர்கள்அவரிடம் கொண்டுவந்தனர் .இயேசு அவர்களைத் தொட்டு அரவணைத்து ஆசீர் வழங்கினார்.அவர்கள் வழியாக அந்த குடும்பம் முழுவதும் இயேசுவின் அரவணைப்புக்குள் என்றும் பாதுகாப்பாக இருக்கிறது. ஆசீரோடு இருக்கிறது.

ஆகவே உங்கள் குழந்தைகதளை ஆண்டவரிடம் எடுத்துச் செல்லுங்கள். ஆலயத்திற்கு கூட்டி செல்லுங்கள். அருளிலும் ஒழுக்கத்திலும் கிறிஸ்தவ பண்பிலும் அவர்கள் வளர இறை பக்தியை ஊட்டி வாருங்கள். கடவுள் உங்கள் குடும்பத்தைக் கட்டி காப்பார். உங்கள் குழந்தைகள் வாழ்வார்கள். அதிலே நீங்கள் மகிழ்வீர்கள்.

~ ஜோசப் லீயோன்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.