சுதந்திர தின மற்றும் மாதா விண்ணேற்படைந்த நாள் நல்வாழ்த்துக்கள்

இந்தியா என் தாய் நாடு. இந்தியர் யாவரும் என்னுடன் பிறந்தவர்கள். என் தாய் திருநாட்டை உளமார நேசிக்கிறேன். இந்த நாட்டில் பிறந்த நாம் ஒவ்வொருவரும் நம் நாட்டை நேசிக்க வேண்டும். உலகத்தில் எவ்வளவோ நாடுகள் இருக்கின்றன. ஆனால் எல்லா நாடுகளும் நம் வேதத்தில் இடம் பெறவில்லை. ஆனால் இந்தியா தேசம் நம் விவிலியத்தில் இடம் பிடித்துள்ளது. அதற்காகவே நாம் பெருமை பட வேண்டும். இந்தியாவை இயேசு அளவில்லாமல் நேசிக்கிறார், என்பதை இதன்மூலம் உணரலாம். சுமார் கி. மு . 470 – 460 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா தேசத்தை எழுதியிருக்கிறார்கள். இதை நாம் எஸ்தர் புத்தகம் முதல் அதிகாரம் முதல் வசனத்திலேயே காணலாம்.

அகாஸ்வேர் ராஜா அரசாண்ட காலத்தில் இந்தியா முதல் எத்தியோப்பியா தேசம் வரை சுமார் 127 மாநிலங்களை அரசாண்டார் என்று எஸ்தர் 1 : 1 ல் வாசிக்கிறோம். 127 நாடுகள் என்று இருக்கும் பட்சத்தில் இந்தியா தேசம் இடம் பெற்றிருப்பது நாம் எல்லோரும் பெருமை கொள்ள வேண்டிய விஷயம் தானே! எஸ்தர் 1:1 மற்றும் 8:9.ஐ வாசித்துப்பாருங்கள். அதுமட்டுமல்ல. இயேசுகிறிஸ்துவின் 12 சீடர்களில் ஒருவரான தோமா நம்முடைய இந்தியா தேசத்திற்கு வந்து இங்கு ஆண்டவரின் பணியை செய்து இரத்த சாட்சியாய் இறந்து இருக்கிறார். ஏன் உலகத்தில் எவ்வளவோ நாடுகள் இருக்கும்பொழுது இயேசுவின் சீடர்களில் ஒருவரே இங்கு வரவேண்டும்? நம் நாட்டின் மீது ஆண்டவருக்கு எவ்வளவு பிரியம் பாருங்கள்.

இத்தனை பெருமை மிக்க நாட்டில் நாம் பிறந்து இருக்கிறோம் என்று சொல்லும் பொழுது நமக்கெல்லாம் எவ்வளவு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை ஒன்றுபட்டு ஒற்றுமையுடன் கொண்டாடுவோம். நம்நாடு சுதந்திரம் அடைய பாடுபட்ட ஒவ்வொருவரையும் நினைவு கூர்ந்து நம் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றியை தெரிவிப்போம். அவர்கள் அன்று பட்ட கஷ்டத்தினால் தானே இன்று நாம் சந்தோஷமாக வாழ முடிகிறது. இல்லாவிட்டால் அடிமையாக அல்லவா இருந்திருப்போம். இந்த மண்ணுலகில் வாழ அவர்கள் சுதந்திரம் வாங்கித் தந்தார்கள். ஆனால் இத்துடன் நம் வாழ்க்கை முடிந்துவிடவில்லையே! இவ்வுலகில் அதிக பட்சம் 100 வருஷம் வாழ்ந்தால் அதுப்பெரியது.

ஆனால் அதன்பின்பு நாம் வாழும் வாழ்க்கையே நமக்கெல்லாம் நிரந்தரமானது. இன்பமானது. அங்கு கஷ்டம் இல்லை, தொல்லை இல்லை, பயம் இல்லை, போட்டி இல்லை, பொறாமை இல்லை, சுயநலம் இல்லை. எல்லோரும் இறைவனின் பிள்ளைகளாய் அவர்உடன் இருப்போம். கடவுளும் ஆட்டுக்குட்டியும்,வீற்றிருக்கும் அரியணை அங்கு இருக்கும்.கடவுளின் பணியாளர்கள் அவரை வழிபடுவார்கள். அவரது முகத்தைக் காண்பார்கள். அவரது பெயர் அவர்களுடைய நெற்றியில் எழுதப்பட்டிருக்கும். இரவே அங்கு இராது. விளக்கின் ஒளியோ கதிரவனின் ஒளியோ தேவைப்படாது. ஏனெனில் கடவுளாகிய ஆண்டவரே ஒவ்வொருவர்மீதும் ஒளி வீசுவார்.

மரியா தான் இறைவனால் கருவுற்றிருப்பது தெரிந்து ஒரு பக்கம் சந்தோசப்பட்டாலும் இன்னொரு பக்கம் எத்தனை அவமானம்? அவர்களை ஊரார் எல்லாம் என்னென்ன சொல்லி அவமானப்படுத்தினார்களோ, ஆனாலும் கடவுளுக்காக எல்லாவற்றையும் தம் மனதிலே வைத்து பொறுமையோடு எல்லா சோதனைகளையும் மேற்கொண்டு வெற்றி வாகை சூடி இறைவனின் தாயாக இருப்பதை நினைத்து எத்தனை பெருமையாக உள்ளது. அவர்களின் தியாகமுள்ள அன்பை நாம் வாழ்த்தாமல் இருக்கமுடியுமா? கானாவூர் திருமணத்தில் திராட்சை ரசம் இல்லாத பொழுது உடனே அதை இயேசுவிடம் தெரிவித்து திராட்சை ரசம் கிடைக்க ஏற்பாடு செய்து தருகிறார்கள். அங்கு அவர்களின் இரக்க குணத்தை வெளிப்படுத்தினார்கள். தியாகத்திலும்,இரக்கத்திலும் , அன்பிலும்,பரிவிலும் கடவுளின் குணாதியசங்களைப் பெற்றுத்திகழ்ந்த அவர்கள் எப்படி இந்த உலகில் இருக்கும் பொழுது வாழ்ந்தார்களோ நாமும் அவர்களைப் போல் வாழ்ந்து அவர்களைப்போல் விண்ணுலகில் நுழைவோம். அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை ஆகும்.

அன்பு நிறைந்த ஆண்டவரே!

உம்மை போற்றி துதிக்கிறோம். இந்தியா என்ற எங்கள் நாட்டை நீர் நினைவு கூர்ந்து அதை விவிலியத்தில் இடம் பெற செய்த உமது கிருபைக்காக நன்றி சொல்கிறோம். இன்றும் இந்த நாட்டை நினைவு கூர்ந்து இங்குள்ள எங்கள் சகோதர,சகோதரிகள் யாவரும் உம்மை அறிந்து உமது ஆட்சியில் பங்குக் கொள்ள வேண்டுமாக ஒரே மனதோடு உம்மிடம் கேட்கிறோம். நீர் தாமே ஒவ்வொருவரின் இதயத்திலும் பேசவேண்டுமாக கெஞ்சி மன்றாடுகிறோம். இந்த நாட்டின் சுதந்த்திரத்துக்காக பாடுப்பட்ட ஒவ்வொருவரையும் நினைவு கூருகிறோம். அவர்கள் செய்த நன்மைக்கு தக்க பலனை நீர் அவர்களுக்கு தந்து உம்மிடம் சேர்த்துக்கொள்ள வேண்டுமாக வேண்டுகிறோம். ஒவ்வொருவரையும் நீரே பொறுப்பெடுத்துக்கொள்ளும். ஆசீர்வதியும். துதி,கனம்,மகிமை யாவும் உமக்கே செலுத்துகிறோம். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் கெஞ்சி வேண்டுகிறோம் நல்ல பிதாவே!

ஆமென்! அல்லேலூயா!!

வாழ்க பாரதம்!! வளர்க இந்தியா!!!

Written by Sara, MyGreatMaster.com

You may also like...

Leave a Reply

%d bloggers like this: