செபமாலை அன்னை திருவிழா

rosary6-2கி.பி 1571 இல் நடந்த கடற்போரில் கிறிஸ்தவர்கள் துருக்கியர்களை வென்றபோது, அவர்களுக்கு கிடைத்த வெற்றி, செபமாலையின் மகத்துவத்தால் விளைந்தது என்று கருதப்பட்டது. இதன் விளைவாக திருத்தந்தை ஐந்தாம் பயஸ் இந்த நாளை வெற்றி அன்னையின் திருவிழாவாக அறிவித்தார். பின்பு திருத்தந்தை பதிமூன்றாம் கிரகோரி காலத்தில் இந்த நாள் செபமாலை அன்னையின் திருவிழாவாக அக்டோபர் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. துருக்கியர் இரண்டாம் முறையாக தோல்வியுற்றபோது, திருத்தந்தை ஆறாம் கிளமண்ட் இத்திருவிழாவை வழிபாட்டு அட்டவணையில் சேர்த்தார். ஆனால், திருத்தந்தை பத்தாம் பயஸ், இந்த விழாவானது ஏற்கெனவே கொண்டாடப்பட்ட அக்டோபர் 7 ம் நாளன்று கொண்டாடுவதே, சிறந்தது எனக்கருதி, அதற்கான மாற்றங்களைக் கொண்டு வந்தார். அதன்படி, தற்பொழுது இவ்விழாவானது, அக்டோபர் 7 ம் நாளன்று கொண்டாடப்படுகின்றது.

செபமாலை என்பது வல்லமையுள்ள ஓர் ஆன்மீக ஆயுதம். செபமாலையைச் செபித்து, அன்னை மரியாவோடு இணைந்து நாம் கடவுளை மகிமைப்படுத்துகின்றபோது, அளவில்லா நன்மைகளை நாம் நிச்சயம் பெற்றுக்கொள்ள முடியும். இது திரும்ப திரும்பச் சொல்லுவதாக அமைந்திருந்தாலும் கூட, அதையே ஒரு மனவலிமை செபமாக மாற்றிச் செபிக்கலாம். ஒரே வாக்கியங்களை திரும்ப திரும்ப சொல்லி செபிக்கும்போது, தந்தையோடு நம்மையே இணைப்பதற்கு அதற்கு பேருதவியாக இருக்கிறது. முத்திப்பேறு பெற்ற பாட்லோ லோங்கோவின் வார்த்தைகள் இங்கு நினைவுகூறத்தக்கது: ”செபமாலை நம்மைக் கடவுளோடு இணைக்கும் ஒரு சங்கிலி”.

இறைவனால் கொடுக்கப்பட்ட மிகப்பெரிய கொடையாக மட்டுமல்ல, அனைத்து வேளைகளிலும் பேருதவியாக இருக்கக்கூடிய அன்னை மரியாளோடு இணைந்து நாமும் கடவுளைப் போற்றுவோம். அவரது பரிந்துரையின் மூலமாக ஏராளமான உதவிகளைப் பெற்று, தொடர்ந்து கடவுளை மகிமைப்படுத்துவோம்.

ஆழமான விசுவாசத்திற்காக மன்றாடுவோம்

இயேசுவின் பிறப்பைப்பற்றிய பல கேள்விகள் இன்று நம் முன்னால் வைக்கப்படுகிறது. இயேசு மனிதராகப்பிறந்தாரா? கடவுளாகப்பிறந்தாரா? இயேசுவின் தந்தை யார்? இயேசு எப்படி மாதாவிடமிருந்து பிறந்தார்? அன்னை மரியாள் எப்படி கன்னியாகக் கருவுற முடியும்? எப்படி குழந்தையைப் பெற்றெடுத்த பிறகும் கன்னியாக இருக்க முடியும்? அப்படியென்றால், இந்த மண்ணகத்தில் பிறக்கிற குழந்தைகள் பாவத்தின் விளைவாகத்தான் தோன்ற முடியுமா? கணவன், மனைவிக்கு இடையேயான உறவு புனிதம் இல்லையா? இதில் நாம் எந்தக் கேள்விக்கும் மற்றவர்கள் நிறைவு கொள்கிற பதிலைக் கொடுத்துவிட முடியாது.

இந்தக்கேள்விகள் கேட்கப்பட்ட தொடக்கமுதல் இன்று வரை இந்தக்கேள்விகளுக்கான பதிலை நாம் யாரும் சொல்ல முடியாது. ஆனால், விசுவாசம் என்கிற அளவுகோலை வைத்துக்கொண்டு, அனைத்துக்கேள்விகளுக்கும் ஒரு வினாடியில், ஒரு வரியில் பதில் சொல்லி விடலாம். அந்த விசுவாச அளவுகோல்: கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை”. ஒரு சிலவற்றை நம்மால், நமது மனித அறிவு கொண்டு புரிந்து கொள்ள முடியாது. அல்லது, அதைப்புரிந்து கொள்வதற்கு இன்னும் நமது அறிவு, வளர்ச்சி பெற வேண்டும். தொடக்க காலத்தில் விடைகாண முடியாத பலவற்றிற்கு நாம் இன்று விடை கண்டிருக்கிறோம். இன்னும் பலவற்றிற்கு முயன்று கொண்டிருக்கிறோம். இதற்கு இடைப்பட்ட காலக்கட்டத்தில், இந்த விசுவாச அளவுகோல் தான் நமக்குத்துணை. இதன் வழியாகத்தான், நமது மூதாதையர் வாழ்வு பெற்றனர்.

நமது விசுவாசம் எப்படி இருக்கிறது? அறிவுப்பூர்வமாக இருக்கிறதா? ஆழமானதாக இருக்கிறதா? பொறுமையாக இருக்கக்கூடியதாக இருக்கிறதா? அல்லது மறுக்கக்கூடியதாக இருக்கிறதா? சிந்திப்போம். ஆண்டவரில் நமது முழுநம்பிக்கையை வைப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: