சொன்னது ஒன்று… செய்தது இன்னொன்று !

இயேசுவின் படைப்பாற்றலில் வெளியான அற்புதமான இன்னொரு உவமையை இன்றைய நற்செய்தி வாசகத்தில் காண்கிறோம். மூத்த மகன் போகவிரும்பவில்லை என்று சொன்னான். பின்னர் மனந்திருந்தி வேலைக்குச் சென்றான். இளையவனோ போகிறேன் என்று சொன்னான். ஆனால், போகவில்லை. கேட்போரின் வாயிலிருந்தே மூத்த மகனே தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர் என்னும் பதிலை இயேசு வரவழைத்தார்.

திருப்பலியிலும், வழிபாடுகளிலும், இறைவார்த்தையிலும் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் விழிப்பூட்டும் ஓர் உவமையாக இது அமைகின்றது. நம்மைப் போன்றவர்கள் அந்த மூத்த மகனைப் போல அல்ல, இளைய மகனைப் போலவே செயல்படுகிறோம். இறைவனின் திருவுளத்தை நிறைவோற்றுவோம் என்று வாயால், மனதால் உறுதி கொள்கிறோம். ஆனால், சொன்னதுபோல, செயல்படுவதில்லை. மனித பலவீனத்தால், ஆர்வக்குறைவால், அ;ல்லது சோதனைகளின் சோர்வால் தடம் புரண்டுவிடுகிறோம். எனவே, ஆலயத்துக்கே வராதவர்கள், வழிபாடுகளில் ஆர்வம் காட்டாதவர்கள், இறைவார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காதவர்கள்— ஆனால், இறையாட்சியின் விழுமியங்களான நேர்மை, உண்மை, சமத்துவம் போன்றவற்றை இயல்பாகவே கடைப்பிடிப்பவர்கள்.. இத்தகையோரைவிட நாம் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் குறைந்தவர்களே என்பது புலப்படுகிறது. எனவே, நாம் விழிப்பாயிருப்போம். நம் செயல்கள் நம் எண்ணங்கள், சொற்களுக்கிசைய அமையுமாறு பார்த்துக்கொள்வோம்.

மன்றாடுவோம்: உண்மையின் நாயகனே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் சொல்லுக்கும், செயல்களுக்கும் முரண்பாடு இல்லாத வாழ்வை எங்களுக்குத் தந்தருளும். நாங்கள் எப்போதும்; இறைத்தந்தைக்குப் பிரியமானவர்களாக வாழும் அருளைத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: