சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ணவேண்டும்.லூக்கா 18:1

தாம் தேர்ந்துக்கொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூப்பிடும்பொழுது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா?அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்துவாரா?விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்கு சொல்கிறேன் என்று இயேசு கிறிஸ்து லூக்கா 18:7,8 ஆகிய வசனங்களில் நமக்கு வாக்கு அருளியிருக்கிறார். நாம் மனந்தளராமல் எப்பொழுதும் அவரிடம் மன்றாட வேண்டும். அப்படி செய்தால் நாம் விரும்பிய காரியத்தை நமக்கு தந்து நம்மை ஆசீர்வதித்து காத்துக்கொள்வார்.

ஒரு நகரில் ஒருவர் குடியிருந்தார்.அவர் கடவுளுக்கு பயப்படமாட்டார். மக்களையும் மதிக்க மாட்டார். அவர் இருந்த தெருவில் ஒரு விதவைப்பெண் வாழ்ந்து வந்தார். அந்த விதைவைப் பெண் ஒருநாள் அந்த மனிதரிடம் சென்று அவளுக்கு எதிராக செயல்படும் எதிரியை தண்டித்து தனக்கு நீதி செய்யுமாறு கேட்டாள். அந்த மனிதரோ காதில் வாங்கவே இல்லை.ஆனாலும் இந்தப்பெண் மனம் சோர்ந்து போகாமல் தொடர்ந்து அந்த மனிதனிடம் சென்று தனக்கு நீதி வழங்க்கும்படிக்கு தன் எதிரியை தண்டிக்கும்படி ஓயாமல் கேட்டுக்கொண்டே இருந்தாள். ஆனாலும் அந்த மனிதரும் நெடுங்காலமாய் எதுவும் செய்யாமல் கண்டுக்கொள்ளாமல் இருந்தார்.பின்பு ஒருநாள் அவர் தனக்குதானே சொல்லிக்கொண்டு நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை. மக்களையும் மதிப்பதில்லை. ஆனாலும் இந்த விதைவைப் பெண் எனக்கு தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் அவளுக்கு அவளின் காரியத்தில் நீதி செய்ய வேண்டும்.அவள் எதிருக்கு தண்டனை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று நினைத்து அவளுக்கு உதவி செய்ய நினைத்தார்.

அப்படி அவர் செய்யவில்லையானால் அந்தப் பெண் மறுபடியும் அவர் உயிரை வாங்கிக்கொண்டேயிருப்பார். அதற்கு பயந்து அவளுக்கு உதவிச்செய்ய நினைத்து அவளுக்கு உதவினார். கடவுளுக்கு பயப்படாத நேர்மையற்ற அவரே தொல்லை தாங்க முடியாமல் அவள் கேட்டதை செய்து விடவேண்டும் என்று நினைக்கும் பொழுது நமக்காக முள்முடி சூட்டப்பட்டு,சிலுவையில் அறையப்பட்டு, தமது இரத்தத்தை சிந்திய ஆண்டவர் நாம் கேட்கும் அதுவும் விரும்பி கேட்கும்பொழுது செய்யாமல் இருப்பாரோ!நிச்சயம் செய்வார்.

நம்மை நாம் தாழ்த்தி அவர் பாதம் சரணடைந்தால் நம்மை உயர்ந்த அடைக்கலத்தில் வைப்பார். நம் நோயிலிருந்தும், கடன் பிரச்சனையில் இருந்தும், நம்முடைய எதிரிகளிடமிருந்தும் நம்மை விடுவித்து காத்து நம் பாதம் கல்லில் இடறாதபடிக்கு அவரின் தூதர்களைக்கொண்டு காப்பாற்றி நாம் நினைப்பதற்கும்,வேண்டிக்கொள்வதர்க்கும் அதிகமாக கொடுத்து எல்லாத் தீங்கிலிருந்தும் பாதுக்காத்து உயர்த்தி வழிநடத்துவார்.

ஜெபம்

அன்பின் ஆண்டவரே!உம்மை போற்றுகிறோம், புகழ்கிறோம், ஆராதிக்கிறோம். அப்பா நாங்கள் மனம் சோர்ந்து போகாமல் உம்மிடம் எங்களை அர்ப்பணித்து உம்மிடம் வேண்டிக்கொள்ள உதவி செய்யும். எங்களுக்கு ஒத்தாசை வரும் கன்மலைக்கு நேராக எங்கள் கண்களை ஏறேடுக்கிறோம். விண்வெளியை விரித்தவரும்,மண்ணுலகை நிலை நாட்டியவரும், மனிதரின் ஆவியை அவர்களுள் தோற்றுவித்தவருமான ஆண்டவர் நீரே அல்லவா!! நாங்கள் யாரிடம் செல்வோம். நீரே
எங்களை உருவாக்கிய தேவாதிதேவன்.எங்கள் தேவைகள் யாவையும் அறிந்தவர் நீர் ஒருவரே.உம்மிடத்திலே கேட்டு பெற்றுக்கொண்டு வாழ எங்களுக்கு போதித்து வழிநடத்தும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறோம் நல்ல பிதாவே!ஆமென்!!அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.