ஞானத்தால் மீட்பு அடைவோம் !

இவ்வுலகில் நாம் புரிந்துகொள்ள முடியாத செய்திகள் பல இருக்கின்றன. நமது உடல் நலம், மகிழ்ச்சி, செல்வம், வெற்றிகள்… இவையெல்லாம் எங்கிருந்து வருகின்றன. அவற்றைத் தொடர்ந்து பெறுவதற்கு என்ன உத்திகளைக் கையாளலாம் என எவ்வளவுதான் ஆழமாக எண்ணிப்பார்த்தாலும், மானிட மனம் குறைபாடுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறோம்.

ஆனால், இறைவன் தருகிற ஞானம் நம்மில் நிலைத்திருந்தால், நாம் அனைத்தையும் புரிந்துகொள்ள முடியும். குறிப்பாக, நம் வாழ்வின் நிலையாமை, நம் வாழ்வின் இறுதி இலக்கு… போன்றவற்றை இறைவன் மட்டுமே நமக்கு வெளிப்படுத்த முடியும். “நீர் ஞானத்தை அருளாமலும், உயர் வானிலிருந்து உமது தூய ஆவியை அனுப்பாமலுமிருந்தால், உமது திட்டத்தை யாரால் அறிந்துகொள்ள முடியும்? என்னும் செய்தி இந்த உண்மையை நன்கு வெளிப்படுத்துகிறது. இறைவன் தரும் ஞானத்தால் மட்டுமே நாம் மீட்பு அடைய முடியும் என்று இன்றைய முதல் வாசகம் நிறைவுபெறுகிறது. எனவே, தூய ஆவி என்னும் இறைவனின் கொடைக்காக மன்றாடுவோம். ஆவியின் ஆற்றலால் செயல்பட்டு, மீட்படைந்தோராய் வாழ்வோம்.

மன்றாடுவோம்: ஞானத்தின் ஊற்றே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். துர்ய ஆவி என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறோம். உமது ஆவி தரும் ஞானத்தால் எங்களை நிரப்பி வழிநடத்தும். ஞானத்தால் நாங்கள் மீட்படைய வேண்டும் என்று உம்மை மன்றாடுகிறோம். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: