தந்தையைப் பூரிக்கச் செய்வோம் !

“மகன் தந்தைக்காற்றும் நன்றி இவன் தந்தை என்னோற்றான் கொல் எனும் சொல்” என்னும் அழகிய குறள்மொழியின் பொருள்: இப்படிப்பட்ட மகளை, மகனைப் பெறுவதற்கு, இவர் தந்தை என்ன தவம் செய்தாரோ எனப் பிறர் போற்றும் அளவுக்கு வாழ்வதே ஒவ்வொரு மகனும், மகளும் தமது பெற்றோருக்கு ஆற்றும் கடமை, நன்றி.

இயேசு அப்படிப்பட்ட ஒரு மகனாக இருந்தார் என நற்செய்தி நூல் சான்று பகர்கிறது. இயேசு தம் பெற்றோருக்குப் பணிந்து நடந்தார் என்றும், “கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்து வந்தார்” எனவும் லூக்கா நற்செய்தியில் (2: 51,52) வாசிக்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்திலோ, வானகத் தந்தையே விண்ணிலிருந்து “என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகின்றேன்” என்று விண்ணிலிருந்து பறைசாற்றினார் எனக் காண்கிறோம். தமது வளர்ப்புப் பெற்றோரையும், விண்ணகத் தந்தையையும் மதித்து, அவர்களை மகிழ்விக்கச் செய்வதே தமது கடமை, மகிழ்ச்சி என்னும் உணர்வோடு எப்போதும் சிந்தித்து, செயல்பட்டார் ஆண்டவர் இயேசு.

நாமும் நம்மை ஈன்றெடுத்த நம் பெற்றோரைப் பெருமைப்படுத்தும் விதத்தில் வாழ உறுதிபூணுவோம். நமக்கு உயிர் தந்து, நம்மை இருக்கவும், இயங்கவும், வாழவும் செய்யும் வானகத் தந்தை மகிழ்ச்சி அடையும்படியாக வாழவும் உறுதிகொள்வோம்.

மன்றாடுவோம்: அன்புத் தந்தையே இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எம் வாழ்விலும், எம் பணியிலும் நீர் மாட்சிமை அடைவீராக. எம் சொல்லிலும், எம் நினைவிலும் நீர் பெருமை அடைவீராக, ஆமென்.

– பணி. குமார்ராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: