தந்தை – மகன் ஒற்றுமை

யோவான் 17: 11 ”தூய தந்தையே, நான் ஒன்றாய் இருப்பது போல், அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும்” என்று, தன்னுடைய சீடர்களுக்காக மன்றாடுகிறார். கிறிஸ்தவர்களுக்கு இடையேயான ஒற்றுமையை, தந்தை-உறவு ஒற்றுமையோடு ஒப்பிடுகிறார். எவ்வாறு கிறிஸ்துவும் இறைத்தந்தையும் ஒரே மனநிலையோடு இருக்கிறார்களோ, அவர்களைப் பிரிக்க முடியாதோ, அதேபோல கிறிஸ்தவர்களுக்கு இடையேயான மனநிலை இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

கிறிஸ்தவ வாழ்வின் முக்கியமான நோக்கமாக இந்த ஒற்றுமையை இயேசு குறிப்பிடுகிறார். நாம் வாழக்கூடிய வாழ்வில் அனைவருக்குமே ஒரு நோக்கம் இருக்கிறது. நாம் செய்யக்கூடிய செயல்பாடுகளிலும் இந்த நோக்கம் காணப்படுகிறது. அதேபோல, கிறிஸ்தவர்கள் அவர்களுக்கு நடுவில் இந்த ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்ற நோக்கத்தை உடையவர்களாக வாழ வேண்டும். எவ்வாறு தந்தையும், மகனும் ஒற்றுமையாக இருக்கிறார்களோ, அதே ஒற்றுமை கிறிஸ்தவ வாழ்விலும் வெளிப்பட வேண்டும். அந்த ஒற்றுமைக்கு ஆணிவேராக இருப்பது நாம் வெளிப்படுத்தக்கூடிய அன்பு. எங்கே அன்பு இருக்கிறதோ, அங்கே வேற்றுமை இல்லை. மாறாக, ஒற்றுமை இருக்கிறது. அந்த அன்பை நாம் பற்றிக்கொள்வோம்.

இன்றைய உலகில் கிறிஸ்தவர்கள் பல குழுக்களாக பிரிந்து காணப்படுகின்றனர். பணத்திற்காக, புகழுக்காக, அதிகாரத்திற்காக, பெயருக்காக பல வேறுபாடுகளால் சிதைந்து, உடைந்து போய் கிடக்கிறார்கள். இவையனைத்துமே, நாம் இன்னும் கிறிஸ்துவுக்குள் வாழவில்லை என்பதைத்தான் நமக்கு அறிவிக்கிறது. ஒற்றுமையோடு வாழக்கூடிய அருளை கடவுளிடம் வேண்டுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: