தனித்து வேண்டியபோது !

தான் யார் என்பது பற்றி இயேசு ஒரு சுய ஆய்வு மற்றும் பொது ஆய்வு நடத்தி அறிந்துகொண்டார் என்பது ஆழ்ந்து சிந்தித்தால் வியப்பு தருகின்ற ஒரு செய்தி. ஒவ்வொரு மனிதரும் அவ்வப்போது செய்துகொள்ளவேண்டிய ஒரு பணி தன் பணியும் வாழ்வும் பற்றிய ஆய்வு. இதில் தன்னாய்வும் இருக்க வேண்டும், பிறருடைய கருத்துக் கணிப்புகளும் இடம் பெறவேண்டும். இதன்படியே, இயேசுவும் தன்னாய்வு ஒன்றை மேற்கொண்டார். அதற்கு உதவியாகத் தம் சீடர்களிடம் மக்களின் கருத்தை அறிந்துகொள்கிறார். ஆனால், இந்தத் தன்னாய்வுக்கு முன் அவர் என்ன செய்தார் என்பதையே இன்றைய சிந்தனைக்காக நாம் எடுத்துக்கொள்ளலாம். அவர் தனித்து இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்தார் என்று பதிவு செய்திருக்கிறார் நற்செய்தியாளர்.

ஆம், தனித்திருந்தார், வேண்டுதல் செய்துகொண்டிருந்தார். தனிமையும், இறைவேண்டுதலும்தான் தன்னாய்வு செய்வதற்குரிய அருமையான சூழல்கள். இயேசு நமக்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறார். நாமும் அவரைப் போல அவ்வப்போது தனித்திருக்கவும், இறைவேண்டலில் ஈடுபடவும் அத்தகைய வேளைகளில் நம் வாழ்வு மற்றும் பணிகள் பற்றிய தன்னாய்வில் இறங்கவும் உறுதிகொள்வோமா?

மன்றாடுவோம்:

வாழ்வின் நிறைவே இறைவா, வாழ்வு என்னும் கொடைக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். இந்த வாழ்வும், நீர் தந்த பணியும் உமக்கு உகந்ததாக இருக்கின்றனவா என்று என்னையே ஆய்வு செய்துகொள்ள நீர் தருகின்ற இந்த அழைப்புக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தனித்திருக்கவும், உம்மோடு உரையாடி அதன் வழியாக எனது வாழ்வையும், பணியையும் ஆய்வுக்கு உட்படுத்தவும் எனக்குத் தூய ஆவியின் ஞானத்தை நிறைவாகத் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

–அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: