தாழ்ச்சி என்னும் அணிகலன்

இயேசு எப்போதுமே வெறும் போதனையோடு நின்றுவிடுவதில்லை. போதிப்பதை வாழ்ந்து காட்டக்கூடியவர். இன்றைய நற்செய்தியிலும், அப்படிப்பட்ட தான் வாழ்ந்து காட்டிக்கொண்டிருக்கக்கூடிய போதனையை, அவர் மக்களுக்கு அறிவிக்கிறார். அதுதான் தாழ்ச்சி. தாழ்ச்சியைப்பற்றி இயேசுவைத்தவிர சிறப்பாக எவரும் போதித்துவிட முடியாது. அந்த அளவுக்கு, தாழ்ச்சியே உருவானவர் தான், நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து. நாம் ஒவ்வொருவருமே இந்த தாழ்ச்சி என்னும் அணிகலனை அணிய வேண்டும் என்பது தான், இயேசுவின் விருப்பமாக இருக்கிறது.

நாம் எப்படி தாழ்ச்சி உள்ளவர்களாக வாழ முடியும்? எப்போது தாழ்ச்சி நம்முள் மேலோங்கியிருக்கும் என்று பார்ப்போம். தாழ்ச்சி என்னும் அணிகலனை நாம் அடைய, நமது எண்ணத்தை சீர்படுத்த வேண்டும். அதனை ஒழுங்குபடுத்த வேண்டும். நாம் எவ்வளவுக்கு சாதித்திருந்தாலும், இந்த உலகத்தில் இன்னும் சாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது. நான் சாதித்தது ஒரு துளி தான், என்று, நமது எண்ணத்திற்கு அவ்வப்போது உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். நமது எண்ணத்தை நாம் பொருட்டாக நினைக்காது, அதனை அதன் போக்கில் விட்டுவிட்டால், அது தனக்குள்ளாக கர்வம் என்னும் கோட்டையைக் கட்டிவிடும். அந்த கர்வம் இல்லாமல், எப்போதும், நமது எண்ணத்தைத் தூய்மைப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். அப்போது, நாம் தாழ்ச்சியின் கட்டுப்பாட்டிற்குள் இருப்போம். நமது வாழ்வும் மகிழ்ச்சியான வாழ்வாக இருக்கும்.

இன்றைக்கு, ஒரு சிறிய வெற்றி ஒருவருக்கு கிடைத்தாலே, இந்த உலகமே தன்னால் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பது போல, ஒரு சிலருக்கு நினைப்பு வந்துவிடுகிறது. அந்த எண்ணத்தை அகற்றிவிட்டு, இந்த உலகத்தில், இந்த மிகப்பெரிய பிரபஞ்சத்தில், நாம் ஒரு சிறிய துகள் என்கிற அந்த மனப்பான்மையை பெறுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: