தாழ்ந்தோர் உயர்வர். உயர்ந்தோர் தாழ்வர். எசேக்கியேல் 21 : 26

இந்த உலகத்தில் நமக்கு நிலையான வாழ்வு கிடையாது. யாருக்கு எந்த நேரத்தில் என்ன சம்பவிக்கும் என்றும் தெரியாது. நாம் ஒவ்வொருநாளும் கடந்து செல்வது ஆண்டவரின் கிருபையால் மாத்திரமே. கடவுளுக்கு பயந்து அவரையே நம்பி வாழ்வோர் செழிப்பார்கள். அவரை
அசட்டையும், அலட்சியமும் செய்கிறவர்கள் ஆண்டவரின் கோபத்துக்கு ஆளாவார்கள். உண்மையாகவே இது ஒரு சோதனை; அவர்கள் மனம்மாற மறுத்தால், இவை அனைத்தும் அவர்களுக்கு நிகழும் இஸ்ரயேல் ஜனங்கள் மனம் திரும்பாத நேரத்தில் ஆண்டவரின் கோபம் அவர்கள் மேல் விழுந்ததால் தானே அவர்கள் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப்போனார்கள். எத்தனையோ இறைவாக்கினரை அனுப்பியும் அவர்கள் ஆண்டவரின் வாக்கை புறக்கணித்ததால் ஆண்டவரும் அவர்களை புறக்கணித்து பகைவர்களிடம் ஒப்புக்கொடுத்தார்.

கிருபையின் நாட்களில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிற நம்மேல் ஆண்டவரின் கோபம் வராதபடிக்கு நாம் நம்மை தாழ்த்தி அவரிடத்தில் ஒப்புக்கொடுத்துவிட்டால் நம்மை உயர்த்துவார். அவருக்கு அஞ்சி நடப்போருக்கு ஆண்டவர் ஆசி வழங்குவார். சிறியோருக்கும், பெரியோருக்கும் ஆசி வழங்குவார். உங்களையும்,உங்கள் பிள்ளைகளையும் வளரச் செய்வார். விண்ணகமோ ஆண்டவருக்கு உரியது. மண்ணகத்தையோ நமக்கு அளித்திருக்கிறார். இறந்தோர் ஆண்டவரை புகழ்வதில்லை. நாமோ ஆண்டவரை வாழ்த்துகின்றோம். அதனால் நமது செயல்களுக்கு தக்க பலனை அளிப்பார்.

ஒருநாள் ஒரு குடும்பத்தினர் ஆலயத்துக்கு போனார்கள். அப்பொழுது வழியில் ஒரு ஏழை பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தான் . இவர்களை பார்த்து அவன் பிச்சை கேட்டான். ஆனால் அவர்களோ அவனுக்கு ஒன்றும் கொடுக்காமல் போய்விட்டார்கள். ஆலயத்தில் போதகர் அன்று இவ்வாறு பிரசங்கம் செய்தார். ஏனெனில் நான் பசியாய் இருந்தேன், நீங்கள் உணவு கொடுத்தீர்கள், தாகமாய் இருந்தேன் என் தாகத்தை தீர்த்தீர்கள். அன்னியனாக இருந்தேன் என்னை ஏற்றுக்கொண்டீர்கள் என்று சொல்லி ஆண்டவரே எப்பொழுது உம்மை பசியுள்ளவராக கண்டு உணவளித்தோம், தாகம் தீர்க்க தண்ணீர் கொடுத்தோம் என்று கேட்பீர்களானால் மிகச் சிறியோராகிய என் சகோதரர், சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததை எல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்கு சொல்கிறேன் என்று ஆண்டவர் பதில் அளிப்பார். [ மத்தேயு 25:35,36,38,40 ] என்று போதகர் ஆண்டவரின் வார்த்தைகளை எடுத்துரைத்தார்.

அப்பொழுது அந்தக் குடும்பத்தினர் ஆண்டவரிடம் தங்களைத் தாழ்த்தி நாங்கள் தெரியாமல் தவறு செய்துவிட்டோம், என்று மனம் வருந்தி திருப்பலி முடிந்து வெளியே போனதும் அந்த ஏழை சகோதரனை அழைத்து அவனுக்கு உணவு வாங்கி கொடுத்துவிட்டு சென்றனர். இப்படித்தான் நாம் எல்லோரும் பல சமயத்தில் ஆண்டவரின் கட்டளைக்கு கீழ்படியாமல் அலட்சியமாக நடந்துக்கொள்வோம். அப்பொழுது ஆண்டவரின் கோபத்துக்கு ஆளாகிவிடுவோம். ஆண்டவரே ஆண்டவரே எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர். மத்தேயு 7: 21 நாம் இறைவாக்கு உரைக்கலாம், பேய்களை ஓட்டலாம். ஆண்டவரின் பெயரால் பல வல்லமையான செயல்களை செய்யலாம். ஆனால் ஆண்டவரின் மனவிருப்பத்தை நிறைவேற்றாவிட்டால் ஆண்டவரும் உங்களை எனக்கு  தெரியவே தெரியாது என்று சொல்லிவிடுவார்.

ஒரு சகோதரன், அல்லது சகோதரி போதிய உடையும், அன்றாட உணவும் இல்லாதிருக்கும் பொழுது அவர்கள் உடலுக்கு தேவையானவற்றை எதுவும் கொடுக்காமல் அவர்களைப்பார்த்து, நலமே சென்று வாருங்கள்; குளிர் காய்ந்து கொள்ளுங்கள்; பசியை ஆற்றிக்கொள்ளுங்கள் என்று சொன்னால் அதனால் அவர்களுக்கு என்ன கிடைக்கும்? யாக்கோபு 2 : 15,16. அவர்களுக்கு ஒன்றும் கிடைக்காதது போல நாம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடும் பொழுது நமக்கும் ஒன்றும் கிடைக்காது. ஏனெனில் பிறர்க்கு கொடுத்து உதவும்படிக்கே ஆண்டவர் நமக்கு கொடுத்திருக்கிறார். வாங்குவதைக்காட்டிலும் கொடுப்பதே சிறந்தது என்று தானே ஆண்டவர் அவரின் உயிரையே நமக்கு கொடுத்தார்.நம்மையும் உயர்த்தும்படிக்கு நாமும் கீழ்படிவோம். இதோ ! நான் விரைவில் வருகிறேன். அவரவர் செயலுக்கு ஏற்ப அவரவருக்கு நான் அளிக்கும் கைம்மாறு என்னிடம் உள்ளது. அகரமும், னகரமும், முதலும்,இறுதியும்,தொடக்கமும் முடிவும் நானே. என்று திருவெளிப்பாடு 22 : 12 ல் உள்ளது.

அன்பின் இறைவா!

தொடக்கமும், முடிவும் ஆனவரே! உம்மை போற்றுகிறோம், தாழ்நிலையில் உள்ளவர்களுக்கு கருணை காட்டுபவர் நீரே, ஆகையால் வல்லமைமிக்க உமது கரத்தின்கீழ் எங்களைத் தாழ்த்தி ஒப்புக்கொடுக்கிறோம். நீரே ஒவ்வொருவரையும் உயர்த்தும் தேவன். எங்களிடத்தில் உள்ள கெட்ட சுபாவங்கள் யாவையும் எடுத்துப்போடும். நீர் விரும்பும் வாழ்க்கையை வாழ்ந்து உமது கோபத்துக்கு தப்பித்துக்கொள்ள உதவி செய்யும். வெறுமனே , ஆண்டவரே! ஆண்டவரே! என்று சொல்லாமல் எங்களுக்கு நீர் கொடுப்பதை நாங்களும் பிறர்க்கு உதவும்படிக்கு நல்ல இதயத்தை தந்தருளும். நாங்கள் பாவம் செய்யாதபடிக்கு காத்துக்கொள்ளும். இந்த உலகத்தில் நாங்கள் கொண்டு வந்தது ஒன்றுமில்லையே, கொண்டு செல்வதும் ஒன்றுமில்லையே ஆகையால் எல்லாவற்றிலும் உமது திருவுளத்தை நிறைவேற்றி நீர் விரும்பும் பாதையில் நடக்க ஒவ்வொருநாளும் போதித்து, ஆலோசனைக் கொடுத்து வழிநடத்தும். எங்களை முற்றிலும் உமது கரத்தில் ஒப்புக்கொடுக்கிறோம் தந்தையே!

ஆமென்! அல்லேலூயா!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: