திருக்காட்சிப் பெருவிழா

திருக்காட்சி விழா கொண்டாடப்படுவதன் பிண்ணனி நீண்ட நெடியது. இதற்கு மற்ற சமயங்களில் இருந்த பழக்கவழக்கங்கள் அடிப்படையானது. குறிப்பாக எகிப்தில் இருந்த மற்ற மதங்களின் பழக்கங்களில் இருந்து, அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்கள் பலவற்றைப் புகுத்தினர். அந்த நீண்ட நெடிய பயணம் தான், திருக்காட்சி விழா. தொடக்கத்தில் கிறிஸ்து பிறப்பு விழா, திருக்காட்சி திருவிழா மற்றும் ஆண்டவரின் திருமுழுக்கு ஆகிய மூன்று விழாக்களும் ஒரு சேர கொண்டாடப்பட்டது என்று சொல்லப்படுகிறது. பின்னாட்களில் ஜனவரி முதல் தேதிக்குப்பிறகு வரக்கூடிய ஞாயிறு மற்றும் அதனைத்தொடர்ந்த ஞாயிற்றுக்கிழமையில், திருக்காட்சி விழாவும், ஆண்டவரின் திருமுழுக்கு விழாவும் கொண்டாடப்பட, வழிபாட்டு ஒழுங்குகள் பணித்தது.

இன்றைக்கு திருக்காட்சி விழா, மூன்று அரசர்களின் விழாவாக மக்களால் அறியப்படுகிறது. இது ஆண்டவரின் விழாவாகும். நற்செய்தியில் அரசர்கள் குழந்தை இயேசுவை காணவந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், அவர்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இருந்தாலும், பாரம்பரியப்படி ஒன்பதாம் நூற்றாண்டில் கஸ்பார், மெல்கியோர், பல்தசார் என்ற பெயர்கள் சொல்லப்பட்டன. விண்மீனின் வழிகாட்டுதல், அவர்கள் மெசியாவை ஆராதிப்பதற்கு உதவியாக இருந்தது. அவர்களின் உள்ளம் இயேசுவைக் காண வேண்டும் என்ற ஆவல் கொண்டிருந்தபோது, வழிதெரியாமல் திணறிக்கொண்டிருந்தாலும், அந்த நேர்மையான எண்ணம், அவர்களைக் கடவுளின் மகனிடம் கொண்டு சேர்த்தது.

நமது எண்ணம் சிறந்து இருந்தால் சிறப்பு. நிச்சயம் நாம் செல்ல வேண்டிய எல்லையை அதுவே நமக்குக்காட்டும். நமது வாழ்வில் நாம் எப்போதும் நல்லவற்றை எண்ணுவோம். மற்றவர்களிடம் நம்மை ஒப்பிடாமல், நாமே நல்ல உதாரணமாக வாழ, முயற்சி எடுப்போம்.

“ஆண்டவரே! எல்லா இனத்தவரும் உமக்கு ஊழியம் செய்வார்கள்”

இந்த திருப்பாடல்(திருப்பாடல் 72: 1 – 2, 7 – 8, 10 – 11, 12 – 13) சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. தாவீது அரசர் தன்னுடைய இறுதிகாலத்தில் இந்த பாடலை சொல்ல, சொல்ல வேறு ஒருவர் எழுதியிருக்கலாம். ஏனென்றால், அவருக்கு அடுத்து, அவருடைய மகன் சாலமோன் ஆட்சி செய்வதற்கான தயாரிப்பாக இந்த திருப்பாடல் பார்க்கப்படுகிறது. தனக்கு பின், தன்னுடைய வாரிசான சாலமோன் சிறப்பான விதத்தில் மக்களை வழிநடத்த வேண்டுமென்ற ஒரு செபஉணர்வு இந்த பாடலில் அதிகமாகக் காணப்படுகிறது.

எல்லா இனத்தவரும் கடவுளுக்கு ஊழியம் செய்வார்கள் என்று சொல்லப்படுகிறது. தர்சீசு. தீவுகள். செபா, சேபா போன்ற இடங்களும் இங்கே சுட்டிக்காட்டப்படுகின்றன. இவற்றிற்கெல்லாம் என்ன பொருள்? தர்சீசு என்பது மிகப்பெரிய நகரமாகச் சொல்லப்படக்கூடிய ஓர் இடம். இஸ்ரயேலம் மக்கள் வாழ்ந்த இடத்திலிருந்து வெகுதூரத்தில் மறுமுனையில் காணப்படக்கூடிய ஓர் இடம். அதேபோல மற்ற இடங்களும் இங்கே சுட்டிக்காட்ட விரும்பக்கூடிய செய்தி, அவையனைத்தும் எங்கோ காணப்படக்கூடிய இடங்கள். ஆக, உலகம் முழுவதிலிருந்தும் மக்கள், கடவுளின் பேரன்பை. இஸ்ரயேல் மக்கள் வழியாக கண்டுகொண்டு, அவரை அரசராக ஏற்றுக்கொண்டு ஊழியம் செய்வார்கள் என்பதுதான், இங்கே நாம் அறிந்துகொள்கிற செய்தியாக இருக்கிறது.

கடவுளின் அன்பையும், வல்லமையையும் மற்ற மக்கள் கண்டுகொள்ளக்கூடிய அளவுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் கண்டுகொள்ளாதது வேதனையிலும் வேதனை தான். நாம் முதலில் கடவுளின் பேரன்பை முழுமையாக உணர வேண்டிய அருள் வேண்டுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: