திருத்தலங்களின் மகிமையும் மாண்பும்

இன்றைக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ ஊர்களில் ஒருவிதமான “திருத்தல” நோய் பரவி வருகிறது. எப்படியாவது நமது ஆலயத்தை திருத்தலமாக மாற்றிவிட வேண்டும் என்கிற, வியாபார ரீதியாக போக்கு, மக்கள் மனதில் பரவி வருவது வேதனைக்குரியது, ஆனால் உண்மையானது. இதனை நாம் மறுக்க முடியாது. எதையாவது வித்தியாசமான ஒன்றைச் செய்து, மக்கள் மனதில் இடம்பிடித்து, ஏதோ சாதனையைச் செய்துவிட்டோம், கூட்டத்தைக் கூட்டிவிட்டோம் என்கிற பாணியில் செயல்படுவது, கடவுளின் பணியாளர்கள் மத்தியிலும் அதிகமாகி வருகிறது. இவையனைத்துமே, கடவுளை வைத்து, வியாபாரம் செய்யக்கூடிய போக்கையே காட்டுகிறது. ஆனால், ஒன்றை நாம் மறந்துவிடக்கூடாது. எங்கே பணம் இருக்கிறதோ, அங்கே பிரச்சனைகளும் அதிகமாக இருக்கிறது.

இந்த உண்மையே, நாம் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறோம் என்கிற உண்மையை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. திருத்தலம் என்பது இறையனுபவத்தை நமக்குப் பெற்றுத்தரக்கூடிய கடவுளின் அனுபவத்தைப் பெற்றிருக்கிற ஓர் உன்னதமான இடம். அது கடவுளின் பிரசன்னத்தை வெளிப்படுத்தக்கூடிய இடமாக இருக்க வேண்டும். வரக்கூடிய மக்களின் ஆன்மீக தேவைகளை பூா்த்தி செய்யக்கூடிய இடமாக அமைய வேண்டும். அதற்கான தேவைகளையும், காலச்சூழலையும் ஏற்படுத்தித் தருவதுதான் நமது கடமையாக இருக்க வேண்டும். பணம் நமது நோக்கமல்ல. வந்திருக்கிற மக்கள் இறையருளைப் பெற்றுச் செல்ல வேண்டும் என்பதுதான் நமது நோக்கமாக இருக்க வேண்டும். அவர்கள் திருத்தலங்களுக்கு வருகிறபோதெல்லாம், சங்கடங்கள் நீங்கி, மன அமைதி பெற்று செல்லக்கூடிய இல்லமாக, அது அமைதல் வேண்டும்.

நமது எண்ணங்களும், சிந்தனைகளும் எப்போது, பணத்திலிருந்து வெளிவந்து, கடவுளின் அருளைப் பெறுவதை, நோக்கமாகக் கொண்டிருக்கிறதோ, அப்போதுதான், நமது வாழ்வு உயர்வடையும். நாம் சார்ந்திருக்கிற மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடையும். அந்த நோக்கத்தோடு, திருத்தலங்களை நாம் நிர்வகிப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: