துணிவும், நம்பிக்கையும்

எங்கே நம்பிக்கை இருக்கிறதோ, அங்கே துணிவு இருக்கிறது. நம்பிக்கை இருக்கிற இடத்தில் துணிவு இருக்கிறது. நம்முடைய அன்றாட வாழ்க்கையிலே, நாம் சந்திக்கின்ற சவால்களும், இன்னல்களும் ஏராளம். இத்தகைய தருணங்களில், அவற்றை நம்பிக்கையின் துணை கொண்டு துணிவோடு சந்திக்க நாம் அறிவுறுத்தப்படுகிறோம். அதாவது கடவுள் மட்டில் முழுமையாக நம்பிக்கை வைத்து, நம்முடைய பாரங்களை, துன்பங்களை அவர் பார்த்துக்கொள்வார் என்ற நம்பிக்கையோடு வாழ அழைக்கப்படுகிறோம்.

ஒரு குழந்தை, தன்னுடைய தாயிடமோ, தந்தையிடமோ இருக்கின்றபோது, தன்னை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்கிற துணிச்சலோடு இருப்பதாக உளவியல் அறிஞர்கள் கூறுவார்கள். இதற்கு காரணம், தன்னுடைய பெற்றோரிடம் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கை. என்ன நடந்தாலும், என்னை, என் பெற்றோர் பார்த்துக்கொள்வார்கள் என்கிற, ஆணித்தரமான பிடிப்பு. அந்த குழந்தை கொண்டிருக்கக்கூடிய நம்பிக்கையை, ஆழமான எண்ணத்தை நமதாக்க அழைக்கப்படுகிறோம்.

நம்முடைய விண்ணகத்தந்தையின் மீது, நாம் உண்மையிலே நம்பிக்கை கொண்டிருந்தால், நம்முடைய வாழ்விலே ஏற்படுகின்ற எத்தகைய துன்பத்தையும் கண்டு அஞ்ச மாட்டோம். துணிவோடு எதிர்த்து நிற்போம். இறை நம்பிக்கையோடு வாழ்க்கையை நாடுவோம். துணிவோடு வாழ்வை எதிர்கொள்வோம். இறைவனுடைய ஆசீர் நம்மை வழிநடத்தும். அதற்கான அருளை, இறைவனிடம் மன்றாடுவோம்.

~ அருட்பணி. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: