துன்பத்திற்கே துன்பம் கொடு…

மாற்கு 8:27-35

இறையேசுவில் இனியவா்களே! பொதுக்காலம் 24ம் ஞாயிறு வழிபாட்டைக் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

மனிதர்களாகிய நாம் துன்பம் வரும் நேரத்தில் கலங்காதிருக்க வேண்டும். துன்பமே வராத வாழ்வு என ஒன்றில்லை. துன்பத் தருணங்களில் அமைதியோடு, வந்த துன்பத்தை எதிர்கொண்டால், வாழ்வை எளிதாக வென்றுவிடலாம் எனவும் துன்பத்திற்கே துன்பம் கொடுத்து அதை விரட்டும் விறுவிறுப்பான வழிமுறைகளையும் சொல்லித் தருகிறது பொதுக்காலம் 24ம் ஞாயிறு.

துன்பம் வரும் நேரத்தில் நாம் எப்படி நடக்க வேண்டும். எப்படி நம் செயல்பாடு அமைய வேண்டும் என்பதை நாம் மூன்று விதங்களில் பார்க்கலாம்.

1. துரத்த கற்றுக்கொள்ளுங்கள்
விவேகானந்தர் வாழ்வில் ஒரு சம்பவம். காசியில் ஒரு குறுகலான சந்து வழியாக நடந்து சென்றுகொண்டிருந்தார் அவர். திடீரென அவரைப் பத்துப் பதினைந்து குரங்குகள் துரத்தத் தொடங்கிவிட்டன. எல்லாம் பெரிய பெரிய குரங்குகள். இப்போது என்ன செய்வது? ஓட்டம்தான் ஒரே வழி. விவேகானந்தர் ஓடலானார். ஆனால், குரங்குகள் அவரை விடாமல் துரத்தத் தொடங்கின.

சற்று தூரத்தில் சென்று கொண்டிருந்த வயதான துறவி ஒருவர் திரும்பிப் பார்த்தார். நிலைமையைப் புரிந்து கொண்டார். பின் ஆணித்தரமான குரலில் பின்வரும் வார்த்தைகளைச் சொல்லி அவருக்கு அறிவுறுத்தினார்:

மகனே! ஓடாதே! திரும்பி நில். குரங்குகளை நோக்கி முன்னேறு. என்ன நடக்கிறதென்று பார்!’ விவேகானந்தருக்கு அவர் அறிவுரைப்படி நடப்பதைத் தவிர வேறு வழியில்லை. அவர் தம் ஓட்டத்தை நிறுத்தினார். குரங்குகளை நோக்கித் திரும்பினார். குரங்குகள் திகைத்தவாறு அப்படியே நின்றன. விவேகானந்தர் கால்களை உறுதியாக வைத்து மெல்ல குரங்குகளை நோக்கி நடக்கலானார். குரங்குகள் பம்மிப் பதுங்கின. விவேகானந்தர் தொடர்ந்து குரங்குகளை எதிர்கொண்டு அவற்றை நோக்கியே நடக்கலானார். அச்சமடைந்த குரங்குகள் சடாரென்று திரும்பி தாங்கள் வந்த வழியிலேயே அவரை ஒன்றும் செய்ய முடியாது என்று ஓடி மறைந்தன.

இந்தச் சம்பவத்தைப் பின்னாளில் நினைவு கூர்ந்த விவேகானந்தர் எழுதுகிறார்: `வாழ்வில் வரும் துன்பங்களெல்லாம் நம்மைத் துரத்தும் குரங்குகளே. அவற்றிற்கு அஞ்சி ஓடினால் அவை நம்மைத் துரத்தும். தைரியமாக எதிர்கொண்டால் அவை நம்மிடம் பயந்து நம்மை விட்டு ஓடியே போய்விடும்!’

நற்செய்தியில் பார்க்கும் போது ஆண்டவர் இயேசு கிறிஸ்து தனக்கு வரும் துன்பங்களின் பட்டியலை அறிந்திருந்தார். “மானிடமகன் பலவாறு துன்பப்படவும், மூப்பர்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்று நாள்களுக்குப்பின் உயிர்த்தெழவும் வேண்டும் என்று அவரே தன் துன்பங்களின் பட்டியலை சொல்கிறார். இயேசு துன்பத்தை அறிந்து அதை துணிவுடன் துரத்த தயாராக இருந்தார். அவர் வீரத்துடன் துன்பத்தை துரத்தினார். அந்த துணிவு நமக்கு வேண்டும். துன்பத்திற்கே துன்பம் கொடுத்து அதை நிலைகுலையச் செய்ய வேண்டும்.

2. சிரிக்க கற்றுக்கொள்ளுங்கள்
துன்பம் வரும்போது சிரிக்கக் கற்றுக் கொள்ளவேண்டும். துன்பத்தை எதிர்கொள்வதற்கு ஏற்ற துணை சிரிப்பைத் தவிர வேறில்லை. உலக அழகிப் போட்டிகளில் கலந்துகொள்ளும் அழகிகளும் சரி, கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர்களும் சரி, ஒருசிலர் தாங்கள் வெற்றி பெறும்போது அளவுகடந்த ஆரவாரத்தோடு அந்த வெற்றி உணர்வை வெளிப்படுத்துவதைப் பார்க்கிறோம். அதே நேரம் போட்டியில் வென்றாலும் கூடச் சிலர், சிரித்தவாறே தோல்வியுற்றவர்களிடம் கைகுலுக்கி தோற்றவர்களின் தகுதியைப் பாராட்டுவதையும் பார்க்கிறோம். வாழ்க்கை என்கிற விளையாட்டில் வெற்றி தோல்வி சகஜம் என்ற மனப்பான்மையைப் பெறுவதே வாழ்வில் நிம்மதி அடைய ஒரே வழி.

ஆண்டவர் இயேசு கிறிஸ்து வாழ்வில் சிரித்த முகத்துடன் தன் பணியைச் செய்தார். அவமானங்கள், இழிவுகள், புறக்கணிப்புகள் மத்தியிலும் தன் சிரிப்பை அவர் சிதறவிடவில்லை. நாமும் சிரித்த முகத்துடன் துன்பத்தை சந்தித்து அது துன்பத்தின் முன் தலைநிமிர்ந்து நிற்க வேண்டும்.

3. வெல்ல கற்றுக்கொள்ளுங்கள்
தடைகள் தோன்றிய இடத்திலெல்லாம் கூட வண்டியைக் காளைமாடு இழுத்துச் செல்கிறதே? அதுபோலத்தான், தொடர்ந்து முயல்பவனின் துன்பம் தானே விலகி விடும். திரைப்படத் தயாரிப்பாளரும் நடிகருமான அமரர் எல்.வி.பிரசாத்தைத் தெரியாதவர்கள் இருக்க வாய்ப்பில்லை. இன்று சென்னை சாலிகிராமத்தில் அவரது பிரசாத் ஸ்டூடியோ வெற்றிகரமாக இயங்கி வருகிறது. கமலஹாசன் பார்வையற்றவராக நடித்த ராஜபார்வை படத்தில் கமலின் காதலுக்கு உதவும் தாத்தாவாக நடித்துப் புகழ்பெற்றவர் அவர். அவர் வாழ்க்கையில் அவர் அடைந்த அனுபவங்கள் முற்றிலும் வித்தியாசமானவை.

ஒரு படத்தில் நடித்து அது சிறப்பாக ஓடியதால் பெரும் செல்வந்தரானவர் அவர். பின் தன் செல்வம் முழுவதையும் பணயம் வைத்து இன்னொரு படம் எடுத்து பணமே இல்லாது போண்டி ஆனார். கடன்காரர்கள் தொல்லை. ஊரை விட்டே ஓடிவிட்டார். வட இந்தியாவில் ஒரு கிராமத்தில் பிஸ்கட்டும் டீயும் சாப்பிட்டுத் தலைமறைவு வாழ்க்கையை அவர் நடத்தி வாழ்ந்தார்.

என்ன ஆச்சரியம்! அப்போது அங்கேயும் அவருக்குத் திரைத்துறை தொடர்பான ஒரு வேலைதான் கிடைத்தது. மாபெரும் தயாரிப்பாளரான அவர் திரையரங்கு ஒன்றில் கட்டணச் சீட்டுக் கிழித்துக் கொடுக்கும் வேலையில் சேர்ந்தார்! ஒருநாள் அவர் நண்பர் அந்தத் திரையரங்கிற்கு வந்து அவர் அங்கிருப்பதைக் கண்டுபிடித்தார்.

`நீங்கள் ஜெயிக்கிற குதிரை. உங்கள் திறமை பற்றி உங்களுக்குத் தெரியாது. ஆனால், எனக்குத் தெரியும். எவ்வளவு கோடி தேவையானாலும் கடன் தருகிறேன். ஜெயித்தால் திருப்பித் தாருங்கள். ஒருவேளை நீங்கள் ஜெயிக்காது போனால் அது நான் உங்களுக்குக் கொடுத்த அன்பளிப்பாக இருக்கட்டும்!’

நண்பரின் வார்த்தைகளால் நெகிழ்ந்த எல்.வி.பிரசாத் நண்பரின் பொருளுதவியோடு படத்துறையில் மீண்டும் இறங்கினார். வெற்றிமேல் வெற்றிகளைக் குவித்தார். தொடர்ந்து முயற்சி செய்பவர்களின் துன்பம் தானே விலகிவிடும் என்ற வள்ளுவரின் கருத்தைத் தம் வாழ்வில்
நிரூபித்தார் அவர். அவர் வளர்ந்து வரக் காரணம் துன்பத்திற்குத் துன்பத்தைக் கொடுத்து வாழ்க்கையை வெல்ல முடிவு செய்ததே.

ஆண்டவர் இயேசு துன்பத்தை வென்ற வெற்றியின் வீரர். உயிர்ப்பு தான அவரின் வெற்றி. வென்ற ஆண்டவர் நம்மையும் துன்பத்திலிருந்து வென்று வர அழைக்கிறார். துன்பத்திற்கே துன்பம் கொடுத்து வெற்றி வாகை சூடுவோம்.

மனதில் கேட்க…
1. துன்பத்திற்கே துன்பம் கொடுக்கும் ஆசை எனக்கு இருக்கிறதா?
2. துன்பத்தை வென்று வெற்றிவாகை சூடுவது தானே எனது இலக்கு?

மனதில் பதிக்க…
கற்றுகொண்டதையும், பெற்றுக்கொண்டதையும், கடைபிடியுங்கள்(பிலி 4:9)

~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: