துருவங்களை இணைப்பவர் இயேசு

தொழுகைக்கூடத்தில் இயேசுவுக்கு எதிர்ப்பு வலுக்க ஆரம்பித்துவிட்டது. பரிசேயர்களும், சதுசேயர்களும் இயேசுவிடம் குற்றம் காண நேரம் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இயேசு தனது போதனை தளத்தை மாற்ற ஆரம்பிக்கிறார். தொழுகைக்கூடத்திலிருந்து, கடற்கரையிலும், தெருக்களிலும், ஆலயத்திலும் அவர் போதிக்கத்தொடங்குகிறார். இயேசு வாழ்ந்த காலத்தில், போதகர்களுக்கு பணிவிடை செய்வது என்பது ஆசீர்வாதமான செயலாகக் கருதப்பட்டது. போதகர்கள் செல்கிறபோது, அவரோடு உடனிருந்து, அவருக்குத்தேவையானவற்றை செய்து தருவதற்கு பலர் தானாகவே முன்வந்தனர். இயேசுவோடு பெண்களும் உடனிருந்தார்கள் என்பதை இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்கிறோம்.

இயேசுவோடு உடனிருந்த பெண்களில் முக்கியமானவர்கள் மகதலா மரியாவும், யோவன்னாவும். இந்த மகதலாவிடமிருந்து இயேசு பல பேய்களை ஓட்டியிருந்தார். அவருடைய கடந்த கால வாழ்க்கை ஒரு பாவ வாழ்க்கை. அவரோடு யோவன்னாவும் இருந்தார். இந்த யோவன்னா, ஏரோதுவின் மாளிகையில் மேற்பார்வையாளராக இருந்த கூசாவின் மனைவி. மேற்பார்வையாளர் பணி அதிகாரம் மிகுந்த பணி. அரசருடைய அனைத்து உடைமைகளுக்கும் பொறுப்பு இவராவார். அரசரின் மதிப்பையும், அன்பையும், நம்பிக்கையையும் பெற்ற ஒருவர் தான் மேற்பார்வையாளராக இருக்க முடியும். அத்தகைய உயர்குலத்தைச்சார்ந்த பெண்ணும் இயேசுவோடு இருக்கிறார். இரு துருவங்களாக இருக்கக்கூடிய பெண்களை, ஒரே நேர்கோட்டில் தன்னோடு வைத்திருப்பது தான் இயேசுவின் சிறப்பு.

நமது வாழ்வில் எப்போதும் இரு துருவங்களைச் சேர்ந்த மனிதர்கள் நிச்சயம் இருப்பார்கள். அவர்களிடம் உள்ள நல்லவற்றை தட்டிக்கொடுத்து, அவர்களை உற்சாகப்படுத்தி, அவர்களோடு நல்ல உறவில் இருப்பது, அவர்களுக்கு நாம் செய்கின்ற மிகப்பெரிய உதவி. அதற்கு பொறுமையும், தியாகமும் தேவை. அதை ஆண்டவரிடத்தில் கேட்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: