தூக்கி எறிபவர்களுக்கு நன்றி சொல்லுங்கள்

மாற்கு 11: 27-33

ஒரு அருமையான பொன்வரி இப்படி ஆரம்பமாகிறது, ”தூக்கி எறிபவர்களுக்கு நன்றி சொல்லுங்கள். ஏனெனில் அவர்களே உங்களை முளைக்கவைப்பர்கள்”. நம்முடைய மனது நம்மை தூக்கி எறிபவர்களை தூரே வைக்க வேண்டும் என துடியாய்த் துடிக்கிறது. அவர்களை விரோதியாய் பார்க்கிறது. பகைமையை போகும் இடமெல்லாம் வளர்க்கிறது. இதனால் பல பகைவர்கள் நம் வாழ்க்கையின் வட்டத்திற்குள் வருகிறார்கள். இதனால் வாழ்க்கையின் வசந்தக்காற்று நம் பக்கம் வீசாமலேயே போகிறது.

இப்படி வாழ்க்கையை களிக்கிற நமக்கு இன்றைய நற்செய்தி வாசகத்தில் கனிவான பாடத்தை புகட்டுகிறார் நம் ஆண்டவர் இயேசு. தலைமைக்குருக்கள், மறைநூல் அறிஞர்கள், மூப்பர்கள் ஆகியோர் இயேசுவை தங்கள் அதிகாரத்தால் விரோதியாக பார்த்தனர். பல தொல்லைகளை கொடுத்துக்கொண்டே இருந்தனர். விரோதியாய் பார்த்து வாழ்கையை அனுபவிக்காமலேயே இந்த உலகத்தை விட்டு காணாமல் போய்விட்டனர். ஆனால் இயேசு விரோதியாய் வந்தவர்களை தன் கனிவால் உருக வைத்தார். தன் அன்புக் கலந்த அதிகாரத்தால் தன் ஊழியர் ஆக்கினார். தூக்கி எறிந்தவர்களை முறைக்காமல் பாசம் காட்டியதால் இயேசு மக்களின் இதயங்களில் முளைத்தார். ஆகவே இயேசு எக்காலமும் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்.

ஆண்டவரில் அன்பார்ந்தவர்களே! உங்களுக்கு யார் வேண்டும் எதிரிகளா? நண்பர்களா? தூக்கி எறிபவர்களை தூரத்தில் வைத்திருக்கிறீர்களா? பக்கத்தில் இருக்கிறார்களா? அவர்கள் தான் முளைக்க வைத்தவர்கள் என்பதை உணா்ந்திருக்கறீர்களா? எல்லா இடத்திலும் நல்ல நண்பர்களையே உருவாக்கவும் உற்பத்தி செய்யவும் முயற்சி செய்யுங்கள். இதன் வழியாக சுத்தமான, சுகாதாரமான உலகில் உலா வாருங்கள்.

மனதில் கேட்க…

  • எனக்கு யார் அதிகம் – நண்பர்களா? விரோதிகளா?
  • தூக்கி எறிபவர்கள் தான் முளைக்க வைக்கிறார்கள். இது எனக்கு புரிகிறதா?

மனதில் பதிக்க…
உங்கள் கனிந்த உள்ளம் எல்லா மனிதருக்கும் தெரிந்திருக்கட்டும்(பிலிக4:5)

– அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: