தூய கன்னி மரியாவின் பிறப்பு (ஆரோக்கிய அன்னை) விழா

வாழ்க்கையை கோலாகலமாக்கு…
மத்தேயு 1:1-16,18-23

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

அன்னை மரியாளின் பிறந்த நாள் விழாவினைச் செப்டம்பர் 8 ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மிக கோலாகலமாக நாம் கொண்டாடுகின்றோம். அன்னை மரியாள் மிகவும் கோலாகலமாக வாழ்ந்தார். ஆகவே அவரின் அன்பு பிள்ளைகளாகிய நாமும் மிகவும் கோலாகலமாக கொண்டாடுகின்றோம். இந்த இனிய நாளில் நம் வாழ்வை கோலாகலமாக மாற்ற வேண்டும். அதற்கு மரியை மாதிரியாக கொண்டு வாழ வேண்டும் என இப்பெருவிழா பெருமகிழ்ச்சியோடு நம்மை அழைக்கின்றது. மரியிடமிருந்து நான்கு மாதிகள் நமக்கு மூலதனமாக உள்ளன.

1. அருள் தெரிகிறது
“தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கும் முன்பே அறிந்திருந்தேன் நீ பிறக்கும் முன்பே உன்னைத் திருநிலைப்படுத்தினேன்(எரே 1:5) என்று இறைவன் கருவிலேயே ஒவ்வொரு குழந்தையையும் திருநிலைப்படுத்தி அருளுக்குரிய குழந்தையாக ஆக்குகின்றார். அன்னை மரியாள் கருவாகி உருவான போதே இறைவன் அவருக்குத் தனது அருளை நிறைவாக வாரி வழங்கினார். இறைவன் கொடுத்த அருளை இந்த உலகிலுள்ள மாயைகளுக்குள் செலுத்தி அதை இழந்துபோகவில்லை. அவர் வாழ்வின் தொடக்கத்தில் பெற்ற அருளை நிறைவாக்கி வாழ்ந்தார்.

2. தாயன்பு தெரிகிறது
அன்னை மரியாளின் பிறப்பே ஒரு மிகப் பெரிய சிறப்பு. உலக மீட்பரை ஈன்றெடுப்பதற்கென்றே கடவுளால் அன்னை மரியாள் படைக்கப்பட்டாள். அன்னை மரியாளின் பிறப்பு ஒரு அற்புதமான ஒன்று. தாயின் அன்பையும் அரவணைப்பையும் ஆறுதலையும், அக்கறையையும், அர்ப்பணத்தையும், பரிந்து பேசுதலையும், பணிவிடை புரிவதையும் நிறைவு செய்வதையும் அன்னையின் பிறப்பு விழா நமக்கு உணர்த்துகின்றது.

3. பரிசுத்தம் தெரிகிறது
புனித அகுஸ்தினார் மரியாவை ஏவாளுடன் ஒப்பிட்டுப் பின்வருமாறு எழுதியுள்ளார். “நாம் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பெருவிழா வந்து விட்டது. மண்ணில் தோன்றிய விண்மலர் இவர் இவரிடமிருந்து தாள்வாள் புகழ் லீலீமலர் தோன்றியது இவருடைய வருகையால் தான் முதல் பெற்றோரிடமிருந்து நாம் பெற்றுக்கொண்ட தூசி படிந்த மனித இயல்பு மாற்றம் அடைந்து மேன்மை பெற்றது. இதனால் இந்த இயல்பிற்கு ஏற்பட்ட இழுக்கு இல்லாமால் போனது. ஆகவே ஆனந்தம் அடைவோம். அக்களிப்போம்.

4. பூரிப்பு தெரிகிறது
ஏவாள் கண்ணீர் வடித்தாள். மரியோ பூரிப்படைந்தார். ஏவாள் பாவியாகிய மனிதர்களை ஈன்றெடுத்தார். மரியோ மாசு மருவற்ற இயேசுவை ஈன்றெடுத்தார். முதல் ஏவாள் கொண்டு வந்தது தண்டனை. மரியோ கொண்டு வந்தது மனித குல மீட்பு. சாவின் தொடக்கம் ஏவாள். வாழ்வின் தொடக்கம் மரியா. இரண்டாம் ஏவாள் அருள் வாழ்வைத் தருபவர் ஆனார். ஏவாளின் கீழ்ப்படியாமை மரியின் கீழ்ப்படிதலின் மூலம் அழிக்கப்பட்டது. ஏவாளின் அவிசுவாசம் மரியாவின் விசுவாசத்தினால் நலம் அடைந்தது. ‘என் ஆன்மா ஆண்டவரை ஏத்திப் போற்றி மகிழ்கின்றது” என்று ஆர்ப்பரித்து அன்று முதலாக ஏவாளின் புலம்பல்கள் முடிவு அடைந்தன.

மனதில் கேட்க…
1. என் வாழ்க்கை ஆர்வமாக, கோலாகலமாக போய்க் கொண்டு இருக்கிறதா?
2. அன்னை மரியாளின் பிறப்பு நாளில் அவர் தரும் மாதிரிகளைப் பின்பற்றி மாறலாமே?

மனதில் பதிக்க…
நான் தனிமையாக இருப்பதில்லை, தந்தை என்னோடு இருக்கிறார் (யோவா 16:31)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: