தூய சவேரியார் திருவிழா

புனித பிரான்சி சவேரியார் – மறைப்பணியாளர்
இந்தியாவின் பாதுகாவலர் பெருவிழா

வந்தார்! வென்றார்!
மத்தேயு 8:5-11

இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் தூய சவேரியார் திருவிழா திருப்பலிக்கு தித்திப்போடு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.

உலகம் போற்றும் நமது இந்தியத் தாய் திருநாட்டில், கிறிஸ்தவ மதம் வளரவும் தழைக்கவும் வித்திட்ட பல மேலை நாட்டினர்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர், புனிதர் பிரான்சிஸ் சவேரியார். இவர் 1506ஆம் ஆண்டு, ஏப்ரல் 7ஆம் நாள், ஸ்பெயின் நாட்டிலுள்ள புகழ்மிக்க சவேரியார் அரண்மனையில் பிறந்தார். யுவான் தெயாசு- டோனா மரியா என்ற தம்பதியின் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். இவரது தந்தை யுவான் தெயாசு, அந்நாட்டின் அரசவையில் நிதியமைச்சராகப் பணியாற்றி வந்தார்; சட்டவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தன்னுடைய ஒன்பதாம் வயதில் தந்தையை இழந்த இவர் தாயின் பராமரிப்பிலேயே அதே அரண்மனையில் படித்து வந்தார்.

இறைவனால் மண்ணகத்திற்கு அனுப்பப்பட்ட பிரான்சிஸ் என்ற தூய திருக்குழந்தை மண்ணகத்தை வென்றது. மண்ணகத்திற்கு வந்த தூய சவேரியார் சாதித்து விட்டார். சரித்திரத்தின் பக்கத்திலே இடம்பிடித்து விட்டார். தூய சவரியார் வெற்றிகளை இரண்டு விதங்கிளில் நாம் பார்க்கலாம்.

1. உள்ளங்களை வென்றவர்
இப்போது கோட்டாரில் இருக்கின்ற தூய சவேரியார் ஆலயம் சவேரியாரால் கட்டப்பட்டது தான். திருவிதாங்கூர் மன்னரிடம் தொடக்கத்தில் ஆலயம் கட்டுவதற்கான இடம் கேட்டபோது அவர் மறுத்துவிட்டார். சவேரியார் தன்னுடைய இனிய பேச்சினால் ஆட்டுத்தோல் அளவு இடம் தரும்படி மன்னரிடம் அன்பொழுக கேட்க மன்னரோ சம்மதிக்கிறார். ஆனால் ஆண்டவரின் உதவியால் அனைவரும் மிக ஆச்சரியப்படும் அளவுக்கு அந்த ஆட்டுத்தோல் விரிந்துக்கொண்டே சென்றது. மன்னரும் மிகவே ஆச்சரியப்பட்டார். மன்னர் வியந்துபோய் ஆட்டுத்தோல் சென்ற வரைக்குமுள்ள இடத்தை அன்புடன் கொடுத்தார். சவேரியாரும் மன்னரும் நண்பர்களாயினர். கிறிஸ்தவா்கள் மதம்மாறுவதற்கு எதிராக இருந்த தடையும் நீக்கப்பட்டது. சவேரியார் இவ்வாறு தன்னிடம் இருந்த இறையொளியால் பல உள்ளங்களை கவா்ந்தார்.

2. உலகத்தை வென்றவர்
தூய சவேரியாருக்கு இந்த உலகத்தை வெல்ல வேண்டும் என்ற ஆர்வம் எப்போதும் அவர் உள்ளத்தில் பற்றியெறிந்தது. அதன் பெயரில் தன்னை வளப்படுத்த ஆரம்பித்தார். அதற்காக அவர் இரண்டு சிறப்பு முயற்சிகளை எடுத்தார்.

3 நன்கு அறிவை வளர்த்தார்
தன்னுடைய ஒன்பதாம் வயதில் ஸ்பானிஷ் (SPANISH) மற்றும் பாஸ்க் (BASQUE) மொழிகளில் புலமை பெற்றிருந்தார். பிரான்சிஸ் சவேரியார் தனது பள்ளிப்படிப்பை முடித்த பிறகு, உயர்கல்வி கற்க விரும்பினார்; 1525ஆம் ஆண்டு, பிரான்சிஸ் சவேரியார் உலகப் புகழ் பெற்ற பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் பல்கலைக் கழகத்தில் தனது படிப்பை தொடர வீட்டை விட்டு வெளியேறினார். அங்கு மெய்யியல் மற்றும் இறையியல் கற்கத் தொடங்கினார். 1530ஆம் ஆண்டு மெய்யியல் முதுகலைப்பட்டம் பெற்றார். பின்னர் 1530 முதல் 1534 வரை அதே கல்லூரியில் இறையியல் மாணவர்களுக்கு விரிவுரையாளராக பணியாற்றினார். எவ்வளவு அறிவில் புலமை பெற முடியுமோ அந்த அளவு புலமை பெற்றார். அறிவினால் உலகை வென்றார்.

4 நல்ல நட்பை வளர்த்தார்
1925ஆம் ஆண்டு பிரான்சிஸ் கல்லூரியில் பயிலும்போது பியர் பாவர் (Pierre Favre) வுடன் நண்பரக்கிறார். இந்த நேரத்தில் 39 வயது நிரம்பிய “இனிகோ’ என்ற “லொயோலா’ என்பவரை சந்திக்க சவேரியாருக்கு வாய்ப்பு கிடைத்தது. இனிகோ, குருவாவதற்காக அதே கல்லூரியில் படிக்க சேர்கிறார். இனிகோ ஒரு முன்னால் படைவீரர். ஆனால் இப்போது கடவுளுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவர், சவேரியாரைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வார்த்தையைச் சொல்வார். அதாவது “பிரான்சிஸ், ஒருவன் உலகமெல்லாம் தனதாக்கிக் கொண்டாலும் தன் ஆன்மாவை இழந்துவிட்டால் அதனால் அவனுக்கு என்ன பயன்?” என்பதே அந்த வாசகம். இந்த வார்த்தைகள் சவேரியாரின் மனதில் ஆழமாகப்பட்டது.

ஒரு நாள் சவேரியார், “தனது பணம், புகழ், பட்டம், ஆசை, ஆடம்பரம், உலக இன்பம் அனைத்தையும் துறக்க வேண்டும்; தானும் ஒரு குருவாக வேண்டும்; இறை மகன் இயேசுவின் பணியை-அவரது அன்பு, பாசம், பெருமை, இரக்கம், விட்டுக் கொடுக்கும் மனம் இவற்றை உலகமெங்கும் அறிவிக்க வேண்டும்’ என்ற அணையாத தாகத்தைப் பெற்றார். பின்னர் இவர்கள் இயேசு சபை என்னும் இயக்கத்தை தொடங்கினர். இதில் மீண்டும் நான்கு நண்பர்கள் சேர்த்து இறைபணியை செய்ய முடிவு செய்கின்றனர். சவேரியாரின் பணிகள் வெற்றி அடைந்ததற்கு மிக முக்கிய காரணம் அவரின் நல்ல நண்பர்களும், அவர் பெற்ற அறிவுமே.

மனதில் கேட்க…
1. என் வாழ்க்கையின் முன்னுதாரணமாக தூய சவேரியாரை எடுத்து வாழ்வில் புனிதத்தை தேடலாமா?
2. உள்ளத்தையும், உலகையும் நான் எப்போது வெல்வேன்?

மனதில் பதிக்க…
ஒருவர் உலகம் முழுவதையும் தமதாக்கிக் கொண்டாலும் ஆன்மாவை இழப்பாரெனில் அதனால் வரும் பயனென்ன?’ (லூக் 9: 25)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: