தெளிந்த சிந்தனை உள்ளவர்களாக…..

இயேசுவின் மலைப்பொழிவு இன்றைய நற்செய்தியாக (மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 5: 1 – 12) நமக்குத்தரப்படுகிறது. இந்த மலைப்பொழிவு போதனையின் முக்கியத்துவத்தை இங்கே சிந்திப்போம். முதலில் இயேசு மலைமீது ஏறி அமர்ந்ததாக சொல்லப்படுகிறது. அமர்தல், உட்காருதல் என்பதற்கு ஆழமான பொருள் சொல்லப்படுகிறது. பொதுவாக, போதகர்கள் எழுந்து நின்று மக்களுக்குப்போதிப்பார்கள். ஆனால், அவர்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்து சொல்கிறார்கள் என்றால், அது அதிமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அரசர் சிம்மாசனத்தில் அமர்ந்து சொல்வது, ஆயர் தன்னுடைய அதிகார இருக்கையில் அமர்ந்து போதிப்பதற்கு தனி விளக்கமே இருக்கிறது. இவை அவர்களின் அதிகாரத்தையும், போதனையின் முக்கியத்துவத்தையும் உறுதிப்படுத்துகிறது.

இயேசு திருவாய் அமர்ந்து போதிப்பதாகவும் நற்செய்தியாளர் சொல்கிறார். அதாவது இதயப்பூர்வமாக இயேசு போதிக்கிறார். உள்ளத்தின் ஆழத்திலிருந்து, உணர்வின் உறைவிடத்திலிருந்து இயேசுவின் வார்த்தைகள் வருகிறது. அவருடைய போதனையின் மைய அறிக்கைகள் தான் இந்த மலைப்பொழிவு. தான் யாருக்காக வந்திருக்கிறேன்? தன்னுடைய பணி யாருக்காக இருக்கப்போகிறது? கடவுளின் பிள்ளைகள் எப்படிப்பட்ட வாழ்வு வாழ்வதற்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதெல்லாம் இங்கே தெளிவாக்கப்படுகிறது. ஆக, தன்னுடைய நிலைப்பாட்டில், சிந்தனையியலில் இயேசு தெளிந்த சிந்தனையுடையவராக இருப்பது இங்கே வெளிப்படுகிறது.

நமது சிந்தனைகளும், எண்ணங்களும் அடிப்படையில் உயர்ந்தவையாக இருக்க வேண்டும். அப்போதுதான் நமது செயல்பாடுகள் நல்லவகையாக இருக்கும். தெளிந்து சிந்தனையைத்தருகிறவர் கடவுள். சிந்தனையில் தெளிவு இருக்கும்போது, நம்மால் துணிவோடு பேச முடியும், எதைக்கண்டும் பயப்படாமல் மதிப்பீடுகளுக்கா நிற்க முடியும். அதற்கான அருளை இறைவனிடம் வேண்டுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: