தொண்டு ஆற்றவும்,தம் உயிரைக்கொடுக்கவும் வந்தவர் நம் இயேசு கிறிஸ்து. மத்தேயு 20:28.

இயேசுகிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம்ஆண்டவரின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

அன்பானவர்களே! நம்முடைய கடவுள் 2000 வருஷங்களுக்கு முன் இந்த உலகத்தில் வந்து நமக்கு தொண்டு ஆற்றவும், அவருடைய இரத்தத்தை கொடுத்து நமக்கு மீட்பு அளிக்கவும், தமது உயிரையே கொடுத்தார். மத்தேயு 20:28. கடவுளாகிய அவரே தொண்டு ஏற்பதற்கு வராமல் தொண்டு ஆற்றுவதற்காகவே வந்திருக்கிறார். அவரை ஆண்டவராக ஏற்றுக்கொண்ட நாமும் அவர் காட்டிய பாதையில் நடந்து அவரின் திருவுளத்தை நிறைவேற்ற இந்த தவக்காலத்தில் நாம் ஒவ்வொருவரும் நல்லதொரு முடிவு எடுத்து மற்றவர்களுக்கு நம்மால் முடிந்தஉதவிகளை செய்ய மனவுருதிக்கொள்வோம்.

மனிதர் தம் மடமையாலேயே வாழ்க்கையைக் கெடுத்துக்கொள்வர்: அவர்கள் ஆண்டவர்மீது சினங்கொண்டு குமுறுவர். நீதிமொழிகள் 19:3. இதில் நாம் எந்த வகையை சேர்ந்தவர்கள்? முடிவு உங்களின் கையில் தான் இருக்கிறது.எது நல்லது, எது கேட்டது என்று சிந்தித்து செயல்படும் அறிவை ஆண்டவர் நம் ஒவ்வொருவருக்கும் கொடுத்திருக்கிறார். அவருக்கு பயந்து, கீழ்படிந்து நடப்போமானால் நாம் ஒன்றுக்கும் கவலைப்பட தேவையில்லை. எப்பேர்பட்ட கஷ்டங்களில் இருந்தும் காப்பாற்ற அவர் வல்லவர், நல்லவர். அதற்கு நாம் செய்ய வேண்டிய காரியம் அவரைப்போல் மனத்தாழ்மையோடும், அன்போடும், மற்றவர்களின் மேல் இரக்கத்தோடும், நடந்துக்கொண்டால் நிச்சயம் வெற்றி நமக்கே. நம்மை ஒருபோதும் வெட்கப்பட்டு போக செய்யமாட்டார். இந்த தவக்காலத்தில் ஏதோ கோவிலுக்கு சென்றோம் திருப்பலியில் கலந்துக்கொண்டோம் என்று இருக்காமல் அவரின் வார்த்தையாகிய திருச்சட்டத்தை கடைப்பிடித்து வாழ்வோமானால் இந்த உலகில் நாம் செய்யக் கூடாத காரியம் ஒன்றும் இருக்காது.

நாம் ஒவ்வொருநாளும் அவரின் சிலுவைப்பதையின் வழியில் நடந்து நமக்காக அவர் முள்முடி சூட்டப்பட்டதையும், நமக்காக ஏளனம் செய்யப்பட்டதையும், சிலுவையில் நம்முடைய பாவங்களை, அக்கிரமங்களை சுமந்ததையும், நினைவு கூர்ந்து அவரின் தியாகத்தை போற்றி துதித்து அவர் பாதத்தில் நம்மை அர்ப்பணம் செய்வோம். நம்மை அவர் இரத்தத்தை கொடுத்து தமது உயிரை கொடுத்து மீட்டுள்ளதை மறவாமல் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டிருக்கிற நிலையிலேயே  அவர்முன் நிலைத்திருப்போம். நாமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்பு செய்யவும், உதவி செய்யவும் கற்றுக்கொண்டு அவர் நாமத்தை உயர்த்துவோம்.

ஜெபம்

அன்பின் பரலோக தந்தையே நீர் எங்கள்மேல் வைத்த அன்பினால் உமது மகனை எங்களுக்காக உயிர்பலி கொடுக்கும்படி தந்தீரையா இதை நாங்கள் ஒருபோதும் மறவாமல் உமக்கு பயந்து, கீழ்படிந்து வாழ எங்களுக்கு போதித்தருளும்.நெறிகெட்ட செயல்களை செய்யாத படிக்கு பாதுகாத்துக்கொள்ளும். நீரே நேரடியாக வந்து உமது அன்பினாலும், இரக்கத்தினாலும் எங்களை மீட்டு, எங்களுக்காக தொண்டுஆற்றியதை மறவாமல் நன்றியோடு நடந்துக்கொள்ள உதவி செய்யும். ஆண்டவரே! எங்கள் வேண்டுதல் உம்திருமுன் வருவதாக, எங்கள் மன்றாட்டு உம்திருமுன் வருவதாக. உம்முடைய வாக்குறுதியின்படியே எங்களை விடுவித்து எங்களுக்கு நுண்ணறிவை புகட்டும்படி இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டிக்கொள்கிறோம்
எங்கள் பிதாவே, ஆமென்!! அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: