நமக்கு எதிராக செய்த பொல்லாப்பை தேவன் அவர்கள் மேலேயே திருப்புவார்.

கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம்முடைய தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் பெயராலே என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

பொறாமை கொண்ட இந்த உலகத்தில் வாழும் நமக்கு அநேகர் எந்த வகையினாகிலும் தீங்கு செய்ய காத்திருப்பார்கள். ஆனால் நம்முடைய ஆண்டவர் சொல்கிறார், என் மகனே, மகளே நீ கவலைப்படாதே, உனக்கு எதிராக உருவாகும் எந்த ஆயுதமும் வாய்க்காமல் போகும்படி செய்ய எனக்கு அதிகாரம் உண்டு. ஆகையால் நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் உங்கள் கவலைகள், பாரங்கள் எல்லாவற்றையும் என்னிடத்தில் தாருங்கள் நான் அவைகளை உங்களுக்காக சுமந்து உங்களை ஒரு தீங்கும் அணுகாமல் என் உள்ளங்கையில் ஏந்துவேன் என்று நமக்கு வாக்கு அளித்து அதன்படியே நம்மை காப்பார். பொல்லாப்பை நம்மை விட்டு விலக்கி காத்திடுவார்.

நீதித்தலைவர்கள் புத்தகத்தில் 9ம் அதிகாரத்தில் நாம் ஒரு சம்பவத்தை வாசிக்கிறோம். அபிமெலேக்கு என்னும் ஒருவன் தனது 70 சகோதரர்களையும், ஒரே கல்லின்மேல் வைத்து கொலை செய்கிறான். அந்த ஊர் மக்களும் அவனையே இஸ்ரயேலை ஆளுகை செய்யும்படி ராஜாவாக்கினர். அபிமெலேக்கு மூன்று வருஷம் ஆளுகை செய்கிறான். ஆனால் தேவனோ அபிமேலேக்குக்கும், சீகேமின் பெரிய மனுஷருக்கும் நடுவே பொல்லாப்பை உண்டாக்கும் ஆவியை தேவன் அவர்கள்மேல் வரவிடுகிறார். ஆகையால் அவன் எழுபது பேரை கொன்ற கொடுமையை தேவன் அவன்மேலேயே வந்து பலிக்கும்படி செய்து பொல்லாப்பை அவனையே நோக்கி திருப்பி விடுகிறார்.

அவன் செய்த கொடுமைக்கு தக்க பலனை ஆண்டவர் அவன்மேல் திருப்பி ஒரு பெண்ணைக்கொண்டு அவனை கொலை செய்கிறார்.நம்முடைய ஆண்டவர் அன்புள்ளவர். அதே சமயத்தில் நமக்கு தீங்கு செய்ய நினைப்பவர்களுக்கு அவரே சரியான தண்டனையை வழங்குவார்.நமக்கு பொல்லாப்பு செய்ய யாரையும் அனுமதிக்க மாட்டார். நாம் அவர்மேல் வைக்கும் நம்பிக்கை நம்மை ஒருபோதும் வெட்கப்படுத்தாது. மனுஷர்கள் செய்யும் எல்லாப் பொல்லாப்பையும் தேவன் அவர்கள் தலையின்மேல் திரும்பும்படி செய்வார்.

அன்பானவர்களே! இந்த நாளிலும் உங்களுக்கு விரோதமாய் யாராவது பொல்லாப்பை செய்ய நினைத்தாலும் நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் கவலைகள், துக்கங்கள் யாவற்றையும் நம்முடைய ஆண்டவரிடத்தில் அவரின் பாதத்தில் வைத்துவிட்டு நீங்கள் சந்தோஷமாக இருங்கள். உங்களுக்காக செங்கடலையும் பிளந்து வழிநடத்தி செல்வார். உங்களுக்காக அவரே யுத்தம் செய்வார். உங்களை ஒருபோதும் கைவிடாமல் நீங்கள் நினைப்பதற்கும் எண்ணுவதற்கும் மேலான ஆசீர்வாதங்களை அளித்து கண்ணின் மணியைப்போல் காப்பாற்றுவார்.

ஜெபம்

எங்களை அதிகமாக நேசிக்கும் அன்பின் தகப்பனே உம்மை போற்றுகிறோம், ஆராதிக்கிறோம், நன்றி சொல்கிறோம். நீரே எங்களுக்காக யுத்தம் செய்யும் தேவனாய் இருந்து எங்களுக்கு நேரிடும் எல்லா பொல்லாப்புகளில் இருந்தும் எங்களை மீட்டு காத்திடும் தெய்வமே, உம்மையே நாங்கள் நம்பி துதிக்கிறோம். உமக்கு பயந்து உமது கட்டளைக்கு கீழ்படிந்து வாழ்ந்து உமது சித்தத்தை செய்ய எங்களுக்கு அனுதினமும் போதித்து வழிநடத்தும். எங்கள் குற்றங்கள், பாவங்கள் யாவையும் மன்னித்து எங்களுக்காக உமது பிதாவிடம் வேண்டுதல் செய்வதற்காய் உமக்கு கோடி ஸ்தோத்திர பலிகளை ஏறேடுக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள தந்தையே! துதி, கனம், மகிமை யாவும் உம் ஒருவருக்கே செலுத்துகிறோம்,ஆமென்! அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: