நமக்கு விரோதமாய் உருவாக்கப்படும் ஆயுதம் நிலைத்திராது

அன்பான சகோதர,சகோதரிகளுக்கு, நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

இன்றும் நாம் வாழும் இந்த உலகத்தில் பொல்லாத பிசாசு நமக்கு எதிராக எத்தனையோ சோதனைகளை உண்டுபண்ணி நம்மை கடவுளிடம் இருந்து பிரிக்க பல முயற்சிகளை செய்துகொண்டுதான் இருக்கிறான்.ஆனால் நாம் அவனுடைய தந்திரங்களுக்கு விலகி நம்மை பாதுகாக்க அனுதினமும் ஆண்டவரின் அருளையும்,கிருபையையும் பெற்று சோதனையிலிருந்து நம்மை விலக்கி பாதுகாத்துக்கொள்வோம்.

நாம் இரவும், பகலும் ஆண்டவரின் திருச்சட்டத்தை சிந்தித்து நடந்து நம்மை காத்துக்கொண்டால் நற்பேறு பெற்றவர்களாய் திகழலாம். சங்கீதம் 1:2. ஆண்டவரின் வார்த்தைகளை கைக்கொண்டு நடந்தோமானால் எந்த ஆயுதமும்,நம்மை சேதப்படுத்தாது.நம்மை தாக்குமாறு உருவாக்கப்பட்ட எந்த போர்க்கருவியும்,நிலைத்திராது. நம்மேல் குற்றம் சாட்டி தீர்ப்பு சொல்லும் நாவை ஆண்டவர் அடக்கி விடுவார்.இதுதான் அவருடைய பிள்ளைகளாகிய நமக்கு அவர் அளிக்கும் உரிமைச்சொத்து. எசாயா 54:17. ஒருவேளை நொடிப்பொழுது நம்மை கைவிடலாம்.ஆனாலும் அவருடைய பேரன்பால் நமக்கு இரக்கம் காட்டுவார். ஏசாயா 54:7.

நாம் எந்தவொரு காரியத்தை குறித்தும்,கவலைப்படாமல் நம் பாரத்தை எல்லாம் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவிடம் ஒப்புக் கொடுத்து ஜெபித்து வெற்றியுள்ள வாழ்க்கை வாழலாம்.வேதத்தில் யோபு சாத்தானால் சோதிக்கப்பட்டு தன் குழந்தை, ஆடு, மாடு, ஒட்டகம் என்று எல்லாவற்றையும்,பறிகொடுத்தும் ஆண்டவரிடம் முறுமுறுக்காமல் கடவுள் கொடுத்தார்,அவரே எடுத்தும் கொண்டார்,என்று சொல்லி ஆண்டவரை போற்றுவதை பார்க்கிறோம். யோபு 1:21,22. நாமும் கூட நமக்கு ஏற்படும் சோதனைகளில் சோர்ந்து போகாமல் யோபுவைப் போல நம்பிக்கையோடு செயல்பட்டால் நிச்சயம் இரண்டு மடங்கு ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம்.

பிரியமானவர்களே, நீங்கள் யாராயிருந்தாலும் நமக்கு ஏற்படும் பலப்பல கஷ்டங்களில் மனம் சோர்ந்து போகாமல் விண்ணையும், மண்ணையும்,உருவாக்கிய ஆண்டவர் நமக்கு இருக்கிறார்,என்பதை ஒருபோதும் மறவாமல் தைரியமாய் இருப்போம்.நமக்காக யுத்தம் பண்ணும் ஆண்டவர் நமக்கு ஏற்படும் எல்லாவித பாடுகளில் இருந்தும்,நமக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் நிலைத்திராதபடி செய்ய வல்லவர், நல்லவர் என்பதை ஒருபோதும் மறக்கவேண்டாம்.

ஜெபம்

பரமண்டலத்தில் வீற்றிருக்கும்,எங்கள் பிதாவே உம்முடைய நாமத்துக்கு என்றென்றும் மகிமை உண்டாகட்டும்.நீர் எங்களோடு கூடவே இருந்து காத்துக்கொள்வதற்காய் உமக்கு நன்றி எங்களுக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் செயல்படாமல் காப்பதற்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம்.துதி, கனம், மகிமையாவும் உம் ஒருவருக்கே உண்டாகட்டும். ஆமென், அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

%d bloggers like this: