நம்பிக்கையிழந்த இளைய சமுதாயம்

நம்பிக்கை என்பது ஒரே சமதளத்தில் இருக்கக்கூடியது அல்ல. சில வேளைகளில் மிகுந்த நம்பிக்கை உணர்வு நம்மிடம் மேலோங்கியிருக்கும். பல நேரங்களில் நாம் நம்பிக்கை உணர்வு அற்றவர்களாக இருப்போம். அப்படிப்பட்ட மனநிலையைத்தான் சீடர்கள் தங்களது வார்த்தையில் பிரதிபலிக்கிறார்கள். நிச்சயமாக, இது குற்ற உணர்வில் வெளிப்படுகின்ற வார்த்தைகள். தங்களுடைய போதகரிடத்தில் உண்மையாக இல்லாத ஒரு நிலையில் வெளிப்படுகின்ற வார்த்தைகள். சாதாரண மனிதர்களின் நம்பிக்கை வாழ்வில் இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகளை, உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தக்கூடிய வார்த்தைகள்.

சீடர்கள் தங்களின் நம்பிக்கை உணர்வை அதிகப்படுத்தும்படியாக இயேசுவிடத்தில் கேட்கிறார்கள். ஒன்று மட்டும், சீடர்களின் வார்த்தையில் தெளிவாக இருக்கிறது. தங்களிடம் நம்பிக்கை குறைவு என்பதை, ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த நம்பிக்கைக் குறைவை இயேசு ஒருவரால் தான், சரிப்படுத்த முடியும் என்பதிலும் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இன்றைக்கு நம்பிக்கையை அதிகப்படுத்துவது, கடவுளின் வல்லமையால் மட்டும் தான் முடியும் என்பதை, இந்த நற்செய்தி நமக்குக் கற்றுத்தருகிறது. நமது வாழ்வில், நமது நம்பிக்கை இறக்கம் காண்கிறபோதெல்லாம், நாம் கடவுளின் அருளை அதிகமாக நாட வேண்டும். நம்பிக்கைத்தளர்ச்சி என்பது, எல்லா மக்களின் வாழ்விலும் சாதாரணமாக ஏற்படக்கூடியது. வாழ்க்கையில் நாம் சந்திக்கக்கூடிய மோசமான நிகழ்வுகள் அதற்கு காரணமாக அமைந்து விடுகின்றன. ஆனாலும், நாம் கடவுள் மீது விசுவாசம் கொண்டு, மீண்டு எழுந்து, வாழ்க்கையை நம்பிக்கையோடு எதிர்கொள்ள இந்த நற்செய்தி நமக்கு அழைப்புவிடுக்கிறது.

இன்றைய உலகத்தில் தினசரி செய்தித்தாள்களில் வாசிக்கக்கூடிய செய்திகள் நமக்கு அதிர்ச்சியைத் தரக்கூடியதாக இருக்கிறது. சாதாரண காரியத்திற்கும் நம்பிக்கையிழந்து, தங்களது வாழ்வை முடித்துக்கொள்ளக்கூடிய, பரிதாபமான நிலைமைக்கு இன்றைய இளைய சமுதாயம் தள்ளப்பட்டிருக்கிறது. இன்றைய இளைய சமுதாயம் நம்பிக்கையிழந்த சூழலில், வாழ்ந்து கொண்டிருக்கிறது. அவர்களுக்கு நம்பிக்கை உணர்வை ஊட்ட வேண்டியது நம் அனைவரின் கடமையாக இருக்கிறது.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: