நம்பிக்கை இறைவனை காணச்செய்யும்

புரிந்துகொள்ளாத, புரிந்து கொள்ள முயலாத மனநிலை இருக்கிறவரை எத்தனை அடையாளங்கள் கொடுத்தாலும் அது வீணானதுதான் என்பது தான் இயேசு இன்றைய நற்செய்தி (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 11: 29-32) மூலமாக கற்றுத்தரும் செய்தி. யூதர்கள் நம்புவதற்கு ஏற்றவாறு ஏதாவது அதிசயங்களைச் செய்யச் சொல்லி இயேசுவிடம் வலியுறுத்துகிறார்கள். ஏனென்றால், அடையாங்களை வைத்தே யூதர்கள் ஒருவரை நம்புவதா? வேண்டாமா? என்று முடிவு செய்வர்.

இயேசுவுக்கு பிறகு கி.பி. 45 ம் ஆண்டில் தேயுதஸ் என்பவர், மக்களை எல்லாம் அழைத்து ஓடுகின்ற ஆற்றை இரண்டாகப்பிளக்கப் போகிறேன் என்று மக்களையெல்லாம் ஆற்றங்கரைக்கு அழைத்துச் சென்றான். ஆனால், அவனால் முடியவில்லை. இது போன்ற அடையாளங்கள் செய்கிறவர்களின் பின்னால் செல்வது யூதர்களுக்கு ஒன்றும் புதிதல்ல. ஆனால், அடையாளமாக இருக்கக்கூடிய இயேசுவை அடையாளம் காண, அவர்களால் முடியவில்லை. சாலமோனின் ஞானத்தை எங்கிருந்தோ ஆட்சி செய்த, ஓர் அரசியால் அடையாளம் காண முடிந்தது. யோனா கடவுளின் தூதர் என நினிவே மக்களால் அடையாளம் காண முடிந்தது. ஆனால், கண்ணெதிரே நிற்கக்கூடிய கடவுளின் மகனை, யூதர்களால் அடையாளம் காண முடியாதது கண்ணிருந்தும் குருடர்கள் தான் என்பதை தெளிவுபடுத்துகிறது.

கடவுளை நாம் எதிலும் காணலாம். கடவுளைக்காண விசுவாசம் இருந்தால் போதும். நாம் கொண்டிருக்கும் நம்பிக்கை எப்படியாவது நம்மை கடவுளிடத்திலே சேர்த்துவிடும். அந்த நம்பிக்கையை ஆண்டவரிடம் கேட்போம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: