நம்பியபடி நிகழட்டும் !

இயேசு செய்த அருங்குறிகள் பலவற்றுக்கும் அடிப்படை நலம் பெற்றவர்கள் கொண்டிருந்த நம்பிக்கை. பல நேரங்களில் நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும் என்று சொல்கிறார் இயேசு. எனவே, யாரிடம் நம்பிக்கை இருக்கிறதோ, அவர்களிடையே மட்டுமே அவர் அற்புதங்கள் செய்தார். அதுமட்டுமல்ல, மாற்கு நற்செய்தியிலே நம்பிக்கை பற்றிய செய்தி ஒன்று அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இயேசுவின் சொந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்தபோது, அவர்கள் அவரை மெசியாவாக ஏற்றுக்கொள்ளவில்லை, அவர்மீது நம்பிக்கை கொள்ளவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு இயேசு வியப்புற்றார். அது மட்டுமல்ல, அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக்கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை (மாற் 6:5) என்னும் விசித்திரமான, கொஞ்சம் துணிச்சலான செய்தியைப் பார்க்கிறோம். எனவே, நம்பிக்கை இருக்கிறர்களுக்கு மட்டுமே வியப்புக்குரிய செயல்களை இறைவன் செய்கிறார். எனவே, நாமும் நமது நம்பிக்கையை வளர்த்துக்கொள்வோம். இறை நம்பி;க்கையை மட்டுமல்ல, நமது தன்னம்பி;க்கையையும்கூட. நம்மீது, நமது ஆற்றல்கள்மீது நமக்கு நம்பிக்கை இருந்தால், நாம் நம்பியபடி நமக்கு நிகழும்.

மன்றாடுவோம்: நம்பிக்கையின் நாயகனே. இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்களிடமுள்ள நம்பிக்கைக் குறைவை மன்னித்து, எங்கள் நம்பிக்கையை ஆழப்படுத்த உம்மை இறைஞ்சுகிறோம். உம்மால் அனைத்தும் முடியும் என்று நம்பி, உம்மை நோக்கி மன்றாட அருள்தாரும். எங்கள் தன்னம்பிக்கைக் குறைவைப் போக்கி, எங்களை வலிமைப்படுத்தியருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.

~அருள்தந்தை குமார்ராஜா

You may also like...

Leave a Reply

%d bloggers like this: