நம்முடைய சூழ்நிலைகளை அறிந்து செயல்படும் தேவன்

இயேசுகிறிஸ்து இந்த உலகில் வந்து பிறந்து தமது தந்தையின் எல்லா நினைவுகளையும் செயல்படுத்தி சென்றுள்ளார். மீதி பணியை நிறைவேற்ற மனிதர்களை ஏற்பாடு செய்திருக்கிறார். இயேசு எப்படி தம் தந்தையின் திருவுளத்தை அறிந்து செயல்பட்டாரோ அதேபோல் நாமும் அவரின் சித்தம் அறிந்து செயல்படவே விரும்புகிறார். நாம் திருப்பாடல்கள் 4 : 3 ல் இவ்வாறு வாசிக்கிறோம். ஆண்டவர் என்னைத்தம் அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்; நான் மன்றாடும்போது அவர் எனக்குச் செவி சாய்க்கின்றார் என்றும் 8 : 5 ம் வசனத்தில் ஆயினும் அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர் ; மாட்சியையும், மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டி
உள்ளீர். உமது கை படைத்தவற்றை அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்; எல்லாவற்றையும் அவர்கள் பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர் என்று வாசிக்கிறோம். தந்தை எப்படி தமது குமாரனுக்கு எல்லா
அதிகாரத்தையும் கொடுத்தாரோ, ஆண்டவர் அவரைப் பின்பற்றி நாமும் செயல்படவேண்டுமாக விரும்புகிறார்.

ஆண்டவர் அதற்காகவே நம்மை அழைத்து இருக்கிறார். எல்லாவற்றையும் அவர் விரும்பும் விதத்தில் செய்து முடிக்கும்படி நமக்கு ஞானத்தையும், அறிவையும் கொடுத்திருக்கிறார். நம்முடைய எல்லா சூழ்நிலைகளையும் அவர் அறிந்துள்ளதால் நாம் நினைப்பதற்கும் வேண்டிக்கொள்வதற்கும் அதிகமாக செய்ய காத்திருக்கிறார்.

இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென்றார். அவருடைய சீடர்களும் மக்கள் கூட்டமும் அவருடன் சென்றார்கள். இயேசு அந்த ஊர் வாயிலை நெருங்கிய பொழுது அந்த ஊர் மக்கள் இறந்த ஒருவனை
தூக்கி வந்தனர். அவனோ தன் தாய்க்கு ஒரே மகனாக இருந்தவன். அவளும் ஒரு விதவைப்பெண். அந்த விதவை தாயை கண்டபொழுது ஆண்டவர் அவள்மீது இரக்கம் கொண்டு ”அழாதீர்’ என்று சொல்கிறார். அதோடு மட்டும் அல்ல.  பாடையின் அருகில் சென்று இறந்த அந்த மகனை உயிரோடு எழுப்பி அந்த தாயிடம் ஒப்படைக்கிறார். இதை லூக்கா 7 : 11 லிருந்து 15 வரை வாசிக்கிறோம் . அந்த தாய் இயேசுவிடம் போய் அழுது புலம்பவில்லை. அவள் தன் மகனை பறிகொடுத்த துக்கத்தில் அழுதுக்கொண்டு போகிறாள். ஆனால் ஆண்டவரிடம் அவள் எதுவும் கேட்கவில்லை. இங்கு இயேசு அவளின் சூழ்நிலையை அறிந்து அந்த மகனை அவள் கேட்காவிட்டாலும் உயிரோடு எழுப்பி தருகிறார். அதனால்தான் அவர் நம்முடைய சூழ்நிலைகளை அறிந்து செயல்படும் தேவன் என்கிறோம்.

இதே லூக்கா 8 : 40 லிருந்து 56 வரை வாசித்து பார்ப்போமானால் அங்கு இரண்டு சம்பவங்கள் எழுதியிருக்கிறது.தொழுகைக்கூடத்தலைவர் ஒருவர் இயேசுவிடம் வந்து 12 வயது நிரம்பிய தனது
ஒரே மகள் சாகும் தருவாயில் இருக்கிறார் என்று சொல்லி இயேசுவின் காலில் விழுந்து தன் வீட்டிற்கு அழைக்கிறார். ஆனடவரும் செல்லும் பொழுது வழியில் 12 வருஷமாக இரத்தப்போக்கினால் வருந்திய பெண் அவர்மேல் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கையினால் அவரின் மேல் ஆடையைத் தொட்டாலே தனக்கு சுகம் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு தொட்டு சுகத்தை பெற்றுக்கொள்கிறார். வழியில் செல்லும்பொழுது நேரமாகிவிட்டதால் அந்த சிறுபெண் இறந்து விட்டதாக தகவல் வருகிறது. ஆனாலும் அவர்களை நம்பிக்கையோடு இருக்கும்படி சொல்லி அந்த சிறு பெண்ணை உயிரோடு எழுப்பி தருகிறார்.

நாம் நமது முழு நம்பிக்கையையும் ஆண்டவர் மீது வைத்து செயல்பட்டால் நம்முடைய எல்லாத் தேவைகளையும் கொடுத்து நம்மை ஆசீர்வதிப்பார். நாம் அவரைப்பற்றிக்கொண்டு பெறும் ஆசீர்வாதங்களை நாமும் பிறர்க்கு பகிர்ந்து அளிக்கும்படியே நம்மை நோக்கி பார்க்கிறார். நன்மை செய்வோர் கடவுளிடம் இருந்து பிறந்தவர்கள் தீமை செய்வோர் கடவுளைக் கண்டதில்லை என்று 1 யோவான் 1: 11ல் வாசிக்கிறோம். கடவுள் எப்படி நம்முடைய சூழ்நிலையை அறிந்து செயல்படுகிறாரோ நாமும் அவர் சாயலில் அவருக்கென்று படைக்கப்பட்டதால் அவரின் திருவுளத்தை அனுதினமும் நிறைவேற்றுவோம். நம்மில் இயேசு மகிமை அடையட்டும்.

அன்புள்ள இயேசு தெய்வமே!!

உம்மை போற்றுகிறோம்,துதிக்கிறோம். தகப்பனே இந்த உலகில் வாழும் நாங்கள் ஒருவருக்கொருவர் அன்பாகவும், ஒருவர் தேவையை ஒருவர் அவரவரால் முடிந்தவரைக்கும் உதவி செய்து நீர் விரும்பும் வாழ்க்கையை வாழும்படிக்கு எங்களுக்கு நீரே அனுதினமும் போதித்து வழிநடத்தும். உமது கரத்தில் இருந்து பெற்றுக்கொண்ட ஆசீர்வாதங்களை மற்றவர்களுக்கும் பகிர்ந்து அளிக்கும் நல்ல மனதை தந்தருளும். அதற்காகவே எங்களை பக்தி உள்ளவர்களாகவும், தூதரிலும் சற்றே சிறியவராகவும் படைத்தீர் என்பதை நாங்கள் வாசிக்கிரவர்களாய் மாத்திரம் இல்லாமல் எங்களை சுற்றி நடக்கும் சூழ்நிலைகளை அறிந்து செயல்பட்டு உமது திருவுளத்தை நிறைவேற்ற உதவி செய்யும். துதி, கனம், மகிமை யாவும் உமது ஒருவருக்கே உண்டாகட்டும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் தந்தையே!

ஆமென்! அல்லேலூயா!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: