நம்முடைய தேவைகளை அறிந்து வைத்திருக்கிறார்

அன்பார்ந்த சகோதரர்,சகோதரிகளுக்கு,நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

இந்த உலகில் வாழும் நம் ஒவ்வொருவருக்கும் பலவிதமான காரியங்கள் தேவைப்படுகிறது. பணத்தேவை, பொருளாதரத்தேவை, வீடு தேவை, நம்மை நேசிக்கும் அன்புள்ளங்கள் தேவை, நம் கவலைகளை பகிர்ந்துக்கொள்ள நல்ல நண்பர்கள் தேவை, இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். சில வீடுகளில் பணம், பொருளாதாரம இருக்கும்.ஆனால் அதை அனுபவிக்க அவர்களால் கூடாது போகலாம். நல்ல சுகம் இருக்கும், அவர்கள் பசியாலும், பட்டினியாலும் துன்பப்படுவார்கள். ஆனால் நம்முடைய தேவன் நம் மேல் மனதுருகி இந்த மாதிரியான கஷ்டங்களில் இருந்து நம்மை பாதுக்காக்க வல்லவராய் இருக்கிறார். அவரை நோக்கி கூப்பிடும் யாராயிருந்தாலும் இவைகளில் இருந்து விடுவிக்கப்படுவர். ஒருபோதும் தம்முடைய பிள்ளைகள் கஷ்டப்படுவதை ஆண்டவர் விரும்பமாட்டார் .

கடவுள் தம்முடைய பிள்ளைகளுக்கு யார் மூலமாவது உதவிகளை அனுப்புவார். இதை வேதத்தில் நாம் நிறைய இடங்களில் வாசிக்கலாம். எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம்
பொய்த்தது: நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரவேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர். ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப் படவில்லை. சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும் இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர். ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்க வில்லை. சிரியாவைச் சேர்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது என்று லூக்கா 4:26,27 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம். நம் தேவைகளை அறிந்து வைத்திருக்கும் ஆண்டவர் ஏற்ற சமயத்தில் யார் மூலமாவது நம்முடைய தேவைகள் அனைத்தையும் சந்திப்பார்.

இயேசுகிறிஸ்து சிலுவையில் தொங்கிக் கொண்டு இருந்த பொழுதும் மற்றவர்களை மறக்காமல் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்தார். யாரையும் அவர் கைவிடவே இல்லை. தம் உயிர் போகும் தருவாயிலும் தமது தாயை நோக்கி இதோ உன் மகன் என்றும், யோவானை நோக்கி இதோ உன் தாய் என்றும் ஒப்புக்கொடுத்தார். அவரை நம்பி, அவரிடத்தில் அடைக்கலம் புகுவோர் யாராயிருந்தாலும் ஒருபோதும் வெட்கப்பட்டு போவதில்லை, கைவிடப்படுவதில்லை. நாம் செல்லும் இடமெல்லாம் நம்மை காக்கும்படி அவர் தமது தூதர்களுக்கு கட்டளையிடுவார். நம்முடைய கால் கல்லில் மோதாதபடிக்கு தூதர்கள் நம்மை தாங்கிக் கொள்ளும்படி செய்வார். நாம் அவரை நோக்கி மன்றாடும்போது நமக்கு பதிலளிப்பார். நம்முடைய துன்பத்தில் நம்மோடு கூடவே இருந்து நம்மை தப்புவித்து அதே இடத்தில் நம்மை பெருமைப்படுத்துவார்.

அன்பானவர்களே! இப்படிப்பட்ட கடவுள் நம்மோடு இருக்கும்பொழுது நாம் எதற்காக மனம் கலங்க வேண்டும்? நம்முடைய தேவைகளை ஜெபத்தின் மூலமும், நம்முடைய மன்றாட்டின் மூலமும், தேவனிடத்தில் வைத்துவிட்டு பொறுமையோடு காத்திருந்து நமது தேவைகள் யாவையும் இரு மடங்காய் பெற்று ஆசீர்வாதத்துடன் வாழ்வோமாக!!!

ஜெபம்

அன்பின் உன்னதரே!உமது பாதுகாப்பில் வாழ்வோர் உமது நிழலில் தங்கிடுவார்.நீரே எங்கள் புகலிடம், அரண், நாங்கள் நம்பியிருக்கும் இறைவன். எங்கள் தேவைகள் அனைத்தையும் நீர் அறிந்து வைத்திருக்கிறீர். நாங்கள் நினைப்பதற்கும், வேண்டிக்கொள்வதற்கும் அதிகமாக கொடுப்பவர் நீரே, எங்கள் நம்பிக்கையில் ஒருபோதும் மனம் சோர்ந்து போய்விடாத படிக்கு எங்களை காத்து விடுவித்தருளும். உம்மீது அன்பு கூர்ந்த ஒவ்வொருவரையும் நீர் விடுவித்து காப்பாற்றுவீர். எந்த தீங்கும் எங்களை தொடாதபடிக்கும், நோய் தாக்காதபடிக்கும், எங்கள் ஒவ்வொருவரின் தேவைகளையும் பூர்த்தி செய்து உமது நாமத்திற்கே மகிமை உண்டாகும்படி செய்யும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் மூலமாய் வேண்டிக்கொள்கிறோம் எங்கள் விண்ணகத் தந்தையே!ஆமென்!! அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: