நம்முடைய பெற்றோரை மதித்து அன்புக்காட்டி நடப்போம். வி.ப.20:12

கடவுள் நமக்கு கொடுத்த பத்து கட்டளைகளில் ஒரு கட்டளை உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி உன் தந்தையையும், உன் தாயையும், மதித்து நட என்பதாகும். விடுதலை பயணம் 20 : 12. சிலசமயங்களில் நாம் நம்முடைய பொறுமை-யின்மையால் அவர்கள் மேல் கோபம் கொண்டுவிடுகிறோம். நம்மை பெற்றெடுத்து நம்மை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டுவர அவர்கள் எவ்வளவோ தியாகங்களை செய்கிறார்கள் என்பதை நாம் ஒருபோதும் மறக்கவே கூடாது. ஒரு சின்ன கதையை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன்.

ஒருநாள் ஒரு தந்தையும், மகனும் வீட்டின் ஜன்னல் அருகே உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்த தந்தைக்கு கொஞ்சம் வயதாகிவிட்டதால் கண் பார்வை கொஞ்சம் மங்கலாகிவிட்டது. அந்த ஜன்னலின் தொலைவில் ஒரு காகம் வந்து அமர்ந்தது. அது கருப்பாக இருந்ததால் தந்தை மகனை நோக்கி அங்கு ஏதோ கருப்பாய் உட்கார்ந்திருக்கிறதே ! அது என்ன என்று கேட்டார்? அப்பொழுது மகன், அப்பா அது ஒரு காகம் என்று சொன்னான்.

தந்தைக்கு வயதாகிவிட்டதாலும் தான் கேட்டதை மறந்துவிட்டதாலும் மறுபடியும் கொஞ்ச நேரம் கழித்து அந்த காகத்தை பார்த்து அது என்ன என்று கேட்டார்? மகன் அது ஒரு காகம் என்று சொன்னான். பிறகு கொஞ்ச நேரம் கழித்து மூன்றாம் தடவையாக அதே கேள்வி யை கேட்டார். மகன் சிறிது எரிச்சலோடு அது காகம் என்று சொன்னான். தந்தை மறுபடியும் தான் கேட்ட கேள்வியை மறந்துவிட்டார். நான்காவது தடவையாக மீண்டும் அதே மாதிரி மகனே! அது என்ன என்று கேட்டார். மகனின் கோபம் அதிகமானதால் அவன் தன் பொறுமையை இழந்து அது ஒரு காகம், காகம், காகம் போதுமா? வயசாச்சுன்னா சும்மா இருக்க முடியாதா? ஒரே கேள்வியை எத்தனை தடவை கேட்பீர்கள்? என்று மிகவும் கடினமாக தந்தையிடம் கோபமாய் எரிந்து விழுந்தான்.

தந்தையின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது. அவரால் எதுவும் பேசமுடியவில்லை. மெதுவாக எழுந்து உள்ளே போனார். சிறிது நேரத்தில் கையில் ஒரு பழைய டைரியுடன் திரும்பி வந்தார். அந்த டைரியில் ஒரு பக்கத்தை எடுத்து காண்பித்து இதை கொஞ்சம் வாசித்துப்பார் என்று சொன்னார். மகனும் வேண்டா வெறுப்பாக அதை வாசித்தான்.

இன்று என் செல்ல மகன் என்னிடம் ஜன்னலின் அருகே வந்து அமர்ந்த ஒரு பறவையை பார்த்து அப்பா அது என்ன? என்று கேட்டான். நான் அவன் மழலையில் சந்தோஷப்பட்டு அது ஒரு காகம் என்று புன்னகையுடன் சொன்னேன். அவனுக்கு அது புரியவில்லை போலும்  .. மறுபடியும்,மறுபடியுமாக பலத்தடவை கேட்டான். நான் ஒவ்வொரு தடவையும் அவன் கேள்வியில் மகிழ்ந்து அவனை கட்டி அணைத்து முத்தம் கொடுத்து அது ஒரு பறவை இனம். அதன் பெயர் காகம் என்று ஒவ்வொரு தடவையும் சொன்னேன். அவன் ஆர்வமாய் கேள்வி கேட்டதால் நான் மகிழ்ச்சியோடு பதில் சொல்லிக்கொண்டே இருந்தேன்.இந்த நாள் எனக்கு மிகவும் சந்தோஷமான நாளாக உணர்ந்தேன் என்று எழுதியிருந்தது.

அதைப்படித்ததும் மகனின் கண்களில் கண்ணீர் வந்தது. நம் அப்பா நான் கேட்ட கேள்விக்கு எவ்வளவு பொறுமையாக பதில் சொல்லி இருக்கிறார். நாமோ கோபப்பட்டு விட்டோமே என்று நினைத்து மனம் வருந்தினான். அப்பா என்னை மன்னித்து விடுங்கள். நான் உங்கள்மேல் கோபப்பட்டது தவறு என்று உணர்ந்துக்கொண்டேன் என்றான். தன் அப்பாவை கட்டி அணைத்துக்கொண்டான்.

அன்பானவர்களே! உங்கள் பெற்றோர் வயது சென்றவர்களாய் இருந்தால் அவர்கள்மேல் கோபம் படாதீர்கள். பொறுமையோடும், அன்போடும் நடந்துக்கொள்ளுங்கள். இதுவே நம்முடைய ஆண்டவருக்கு பிரியமான காரியமாக இருக்கும். எபேசியர் 6 : 1,2 வசனமும், கொலேசெயர் 3 : 20 ஆகிய வசனங்களும் நமக்கு இதையேச்சொல்கிறது.அன்போடு நடந்துக்கொள்வோம். ஆண்டவரின் ஆசீரை பெற்றுக்கொள்வோம்.

– Written by Mrs. Sara, MyGreatMaster.com

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: