நம்மை உயிர் வாழச்செய்தவரும் அவரே

திருப்பாடல் 66: 8 – 9, 16 – 17, 20
”நம்மை உயிர் வாழச்செய்தவரும் அவரே”

திருப்பாடல் 66 ஒரு நன்றிப்பாடல். இது குறிப்பிட்ட நிகழ்வை வைத்து எழுதப்பட்ட பாடல் அல்ல. மாறாக, கடவுள் செய்து வந்திருக்கிற நன்மைகளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று, நம்மை உந்தித்தள்ளுகிற ஒரு பாடல். எல்லா மக்களுமே கடவுளைப் போற்றிப் புகழ அழைக்கப்படுகிறார்கள். இந்த திருப்பாடலின் சிறப்பு, தனிப்பட்ட முறையில் இறைவன் தனக்கு செய்திருக்கிற நன்மைகளை நினைத்து, தாவீது அரசர் பாடுவதாக இது சொல்லப்படுகிறது. அவருடைய துன்ப வேளையில் இறைவன் எவ்வாறெல்லாம், அவரைப் பேணிப்பாதுகாத்தார் என்பதுதான் இந்த திருப்பாடலின் மையச்சிந்தனையாக இருக்கிறது.

மக்களினங்கள் அனைவரும் ஆண்டவரைப் புகழ வேண்டும் என்று ஆசிரியர் அழைப்பு விடுக்கின்றார். இந்த அழைப்பு எல்லா மக்களுக்கும் என்றாலும், குறிப்பாக இஸ்ரயேல் மக்களுக்கான அழைப்பாக இது பார்க்கப்படுகிறது. இரண்டு காரணங்களுக்காக, இந்த அழைப்புவிடுக்கப்படுகிறது. முதல் காரணம், கடவுள் இஸ்ரயேல் மக்களை பல்வேறு நெருக்கடிகளிலிருந்து பாதுகாத்திருக்கிறார். எதிரிகளின் கண்ணியிலிருந்து விடுவித்திருக்கிறார். இரண்டாவது காரணம், துன்பங்களுக்கு மத்தியில் சிக்குண்டு, நொறுங்கிப்போயிருந்த இஸ்ரயேல் மக்களின் ஆன்மாக்களுக்கு உயிர் கொடுத்தவர் கடவுள் தான். கடவுள் இல்லையென்றால், இஸ்ரயேல் மக்கள் உடைந்து போயிருப்பார்கள். வறண்டு போயிருப்பார்கள். இல்லாமல் போயிருப்பார்கள். ஆனால், கடவுள் அவர்களின் ஆன்மாக்களுக்கு புத்துயிர் கொடுத்து, அவர்களுக்கு வாழ்வளித்திருக்கிறார்.

நமது வாழ்க்கையில், நாமும் எப்போதும் கடவுளைப்போற்றக்கூடியவர்களாக வாழ்வோம். அவர் நமக்கு செய்திருக்கிற நன்மைகளை எந்நாளும் எண்ணிப்பார்ப்போம். அவர் நம்மை கைவிட மாட்டார். ஒருபோதும் நம்மை விட்டு, அகன்று போக மாட்டார். நம்மை அன்பு செய்யும் இறைவனை, நாம் எப்போதும் போற்றுகிறவர்களாக மாறுவோம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: