நம்மை வழிநடத்திச் செல்பவர் நம் கடவுளாகிய ஆண்டவரே! இ.ச 9:3.

கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

கடவுள் நம்மை ஒவ்வொருநாளும் ஆசீர்வதித்து கரம் பிடித்து வழிநடத்தி செல்லவேண்டுமானால் நாம் அவரை அதிகாலையில் தேடவேண்டும். எனக்கு அன்பு காட்டுவோருக்கு நானும் அன்பு காட்டுவேன். என்னை ஆவலோடு தேடுகின்றவர்கள் என்னைக் கண்டுபிடிப்பார்கள் என்று நீதிமொழிகள் 8:17 ல் வாசிக்கிறோம். ஒரு நண்பரையோ, அல்லது உறவினர்களையோ நமக்கு பிடித்த நபர்களை காணவேண்டுமானால் நாம் எவ்வளவோ நேரத்தையும், பணத்தையும் செலவழிக்கிறோம். ஆனால் வானத்தையும், பூமியையும் உண்டாக்கிய கடவுளுக்கு நாம் எவ்வளவு நேரத்தையும், பணத்தையும் கொடுக்கிறோம் என்று யோசித்துப்பாருங்கள். ஏனெனில் நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் கடவுளின் கையில் உள்ளது. அவரே நம்முடைய எதிரிகளின் கையினின்றும் நம்மை துன்புறுத்துவோரின் கையினின்றும் விடுவிக்கிறார். திருப்பாடல்கள் 31:15.

கடவுளிடம் அடைக்கலம் புகுந்துள்ளோர் ஒருபோதும் வெட்கமடைய விடமாட்டார்.நம் துன்பத்தை பார்த்து இருக்கிறார்.நமது இக்கட்டுகளை அறிந்திருக்கிறார்.என் வாழ்க்கை வருத்தத்திலேயே கடந்து செல்கின்றது. ஆம்,என் வாழ்நாள் புலம்புவதிலேயே கழிகின்றது. துயரத்தால் என் வலிமை குறைந்து போகின்றது: என் எலும்புகள் தளர்ந்து போகின்றது திருப்பாடல்கள் 31:10ல் வாசிப்பது போல துயரத்தில் நம் மனம் தவிக்கும்போது தாவீதுக்கு உதவிய ஆண்டவர் இன்றும் நம்மோடு இருக்கிறார்.ஆடு மேய்த்துக்கொண்டு இருந்த தாவீதை கடவுள் அழைத்து இஸ்ரவேல் நாடு முழுதுக்கும் ராஜாவாக அபிஷேகம் செய்த ஆண்டவர் நமக்கும் உதவ காத்திருக்கிறார். அதற்கு நாம் என்ன விலைகிரையம் கொடுக்க இருக்கிறோம்? எந்தவொரு காரியமும் சுலபமாக கிடைக்காது.ஒருவேளை அப்படி கிடைத்தால் அதில் ஆசீர்வாதம் இருக்காது.தாவீது இரவும்,பகலும்
ஆண்டவரின் திருச்சட்டத்தில் பிரியமாய் இருந்து அதைக்குறித்து சிந்திப்பவராய் இருந்தார்.நாம் அதில் எப்படி இருக்கிறோம் என்று நம்மை சோதித்துப்பார்ப்போம்.

கடவுளின் சித்தத்திற்கு நம்முடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுப்போமானால் அவரே நமக்கு போதித்து  வழிநடத்துவார். சில நேரங்களில் நமக்கு ஏற்படும் துன்பத்தினால் நாம் சோர்ந்து போகாமல் நம்முடைய நம்பிக்கையில் சந்தோஷமாகவும்,உபத்திரவத்திலே [கஷ்டங்களில்] பொறுமையாகவும்,ஜெபத்திலே உறுதியாயும் இருந்து நம்மை துன்பப்படுத்துகிறவர்களையும், ஆசீர்வதித்து அவர்களுக்காக ஜெபம் செய்வோம்.நம்மால் கூடியமட்டும் எல்லோரிடமும் சமாதானமாக வாழ கற்றுக்கொள்வோம்.அப்பொழுது கடவுள் நம்மை சீர்படுத்தி, பெலப்படுத்தி, ஏற்றகாலத்தில் நம்மை உயர்த்துவார். இந்த தவக்காலத்தில் ஆண்டவர் நமக்காக பட்ட பாடுகளையும், நம் பெலவீனங்களையும், நோய்களையும், சிலுவையில் சுமந்து மீட்டுக்கொண்டதை நினைத்து அவரில் மன மகிழ்ச்சியோடு வாழுவோம்.

ஜெபம்

எங்கள் வழிகாட்டியாகிய இறைவா!நீர் காட்டும் பாதையில் நடக்க உதவி செய்யும். உம்மை வருத்தும் வழியில் நான் செல்கின்றேனா என்று பார்த்து என்றுமுள உமது வழியிலேயே எங்களை வழிநடத்தும். உமது இரக்கத்திற்காக நாங்கள் எழுப்பும் மன்றாட்டை கேட்டு உமது நீதியின் பாதையில் வழிநடத்தும்.உயிர் வாழ்வோர் எவரும் உமது திருமுன் நீதிமான் இல்லையே ஆகையால் நாங்கள் அறியாமல் செய்யும் பாவத்தை மன்னித்து உம்முன் சேர்த்துக்கொள்ளும். மீட்பர் இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறோம்
எங்கள் தந்தையே ஆமென்!! அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.