நம் கடவுளின் பெயரால் வெற்றிக்கொடி நாட்டுவோமாக! தி.பா.20:5.

அன்பான இறைமக்கள் யாவருக்கும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பான நல்வாழ்த்துக்கள்.

அன்பானவர்களே! இந்த பிப்ரவரி மாதம் முழுதும் கடவுள் நம்மோடு கூடவே இருந்து எல்லாத் தீங்கிற்கும் விலக்கி பாதுகாத்து நம்முடைய தேவைகளை சந்தித்து ஆசீர்வதித்து வழிநடத்தி அவரின் செட்டைகளின் மறைவில் வைத்து காத்து வந்திருக்கிறார். இதுபோல் இந்த மார்ச் மாதம்
முழுதும் கடவுள் நம்மோடு இருந்து அவரின் கிருபையால் தாங்கி காத்து வழிநடத்த வேண்டுமாய், நாம் ஒவ்வொருவரும் அவருடைய பெயரால் வெற்றி பெற்று அவருக்கே வெற்றிக்கொடி நாட்டுவோமாக!

ஆண்டவருக்கு புகழ்ப்பா அமைத்து பாடுவோம்.ஏனெனில் அவர் நமக்கு மாட்சியுறும் செயல்களைப் புரிந்துள்ளார். அனைத்துலகமும் இதை அறிந்து ஆர்ப்பரித்து அக்களிப்போம். தூயவர் நம்மிடையே சிறந்து விளங்குகிறார். ஏசாயா 12:5,6. இந்த மாதத்தில் அவர் பரிவு என்னும்  கட்டுகளால் நம்மை பிணைத்து,அன்புக் கயிறுகளால் கட்டி, நம் கழுத்தின்மேல் இருந்த நுகத்தை அகற்றி நமக்கு எல்லாவற்றையும் தந்து காத்திருக்கிறார். ஓசேயா 11:4. நாம் எத்தனையோ காரியத்தில் அவரை துக்கப்படுத்தியிருந்தாலும் அன்பே உருவான அவர் நம் தப்பிதங்களை பொருட்படுத்தாமல் அவரின் இரத்தத்தால் நம்மை மன்னித்து நம் அக்கிரமத்தை, தீயசெயல்களை மறந்து உதவி வந்துள்ளார். நாம் இன்னும் இந்த உலகத்தில் நல்லமுறையில் வாழ அவரையே தேடுவோம்.

ஏனெனில் மலைகளை உருவாக்கியவர் அவரே: காற்றை தோன்றச்செய்தவர் அவரே, அவருடைய எண்ணத்தை நமக்கு வெளிப்படுத்துகிறவரும் அவரே, காலைப்பொழுதைக் காரிருள் ஆகச் செய்பவரும் அவரே, இந்த பூமியின் நிலத்தின் உயர்ந்த இடங்களில் நடமாடுபவரும் அவரே, நம் நடுவே உலாவி கரம் பிடித்து காத்து நம்மத்தியில் கடந்து போகிறவரும் அவரே. அவரின் பேரன்பை கண்டடைய வைகறையில் எழுந்து அவரையே நம்பி,அவரையே தேடி போற்றுவோம். கடவுளே உமது திருவுளத்தை நிறைவேற்ற எங்களுக்கு கற்பித்தருளும். ஏனெனில் நீரே எங்கள் கடவுள். உமது நலமிகு ஆவி எங்களை செம்மையான வழியில் நடத்துவாராக!

ஜெபம்.

விண்ணையும், மண்ணையும் படைத்த பரம தகப்பனே! இந்தமாதம் முழுதும் எங்களை காத்து வந்ததற்காய் உமக்கு நன்றி ஐயா! இது போல் வரும் மாதத்திலும் எங்களோடு கூடவே இருந்து வழிநடத்த வேண்டுமாய் கெஞ்சுகிறோம். ஒவ்வொருநாளும் உமக்கு ஏற்புடையவர்களாக வாழ்ந்து உமக்கே புகழ் உண்டாகும்படியும், மகத்துவம் உண்டாகும்படியும் வாழ்ந்து உம்மை போற்றிட கிருபை அளித்தருளும். எங்கள் குற்றம், குறைகளை மன்னித்து உமது காயங்களால் எங்களை குணமாக்கி எந்த தீங்கும் எங்களை தொடாதபடி உமது இறக்கையின் மறைவில் பாதுகாத்தருளும். துதி, கனம், மகிமை யாவும் உமது பெயருக்கே உண்டாகட்டும். ஆமென்!!அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: