நம் தாய் வயிற்றில் உருவாகும்போதே நம்மை பெயர் சொல்லிக் கூப்பிட்டவர் நமது ஆண்டவர்.ஏசாயா 49:1

அன்பும், பாசமும் நிறைந்த சகோதர,சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

இந்த நாளிலும் நாம் படும் பாடுகளை நமது ஆண்டவர் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார். அவைகளை நமக்கு நன்மையாக மாற்றித் தர ஆவலோடு காத்திருக்கிறார். அந்த பாதையின் வழியில் கடந்து செல்லும் பொழுது அதின் மேடு, பள்ளங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டுமாய்
சில கஷ்டங்கள் நேரிடும். ஆனால் அது எப்போதும் நீடிக்காது. மேடு, பள்ளங்களை நாம் அறிந்துக்கொண்டால் அதற்கு தகுந்தவாறு நாம் நடப்போமல்லவா, அதை நாம் கண்டுக்கொள்ளவே அதை அனுப்புகிறார். ஏனெனில் அவர் நம் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னரே நம்மை பெயர் சொல்லி கூப்பிட்டு அறிந்து வைத்திருக்கிறார். அதனால் நாம் எந்த சூழ்நிலையிலும் மனம் சோர்ந்து போகாதபடிக்கு அவரிடத்தில் சந்தோஷமாக இருப்போம்.

நாம் நீதித் தலைவர்கள் [நியாயாதிபதிகள்] புத்தகத்தில் 14ம் அதிகாரத்தில் சிம்சோனை பற்றி வாசிக்கிறோம். சிம்சோன் தன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னரே கர்த்தருடைய தூதன் அவர்களை சந்தித்து இதோ நீ கர்ப்பந்தரித்து ஒரு குமாரனை பெறுவாய். அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படலாகாது. அந்தப்பிள்ளை பிறந்தது முதல் கடவுளுக்கு என்று இருப்பான்.அவன் இஸ்ரயேலை பெலிஸ்தர் கைக்கு நீங்கலாக்கி இரட்சிப்பான் என்று அவர் உருவாகும் முன்னரே அவரைக் குறித்து உள்ள செய்கைகள் சொல்லப்படுகிறது. இதுபோலதான் நம் ஒவ்வொருவருக்கும் கடவுள் ஒரு சித்தம் வைத்திருப்பார்.அதை அறிந்து நாம் செயல்பட்டால் எல்லா காரியங்களிலும் நமக்கு ஜெயத்தை கட்டளையிடுவார்.

ஆண்டவர் வாக்கு கொடுத்த படியே அந்த சிம்சோன் உடன் கூடவே இருந்தார். ஒருநாள் தனது பெற்றோரோடு திம்னாத்துக்கு போகையில் கெர்ச்சிக்கிற ஒரு சிங்கம் அவனுக்கு எதிராக வந்தது. அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவர்மேல் பலமாய் இறங்கினதால் அவர் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும் அந்த சிங்கத்தை ஒரு ஆட்டுக்குட்டியை கொன்று போடுவதுபோல் போட்டு விட்டார்  என்று வாசிக்கிறோம். ஆபத்தில் நமக்கு ஆண்டவர் கூடவே இருந்து நம்மை எந்த தீங்கும் தொடாமல் நிச்சயம் பாதுக்காப்பார். ஏனெனில் அவர் நம்மை பெயர் சொல்லி அழைத்த தேவனல்லவா! இது சிம்சோனுக்கு மாத்திரம் அல்ல. அவருடைய பிள்ளைகள் ஒவ்வொருவருக்கும் இந்த அதிசயம் நடக்கும்.

என் வாழ்க்கையில் இதை நான் கண்டேன். அதினால் சொல்கிறேன். 16 / 7 / 2013 அன்று காலை 10 மணிக்கு துணி காயப்போட வெளியே சென்றேன்.வீட்டு காம்பவுண்டுக்குள் அதுவும் சிமிண்ட் தரையில் ஒரு நல்ல பாம்பு சுமார் 3 அடிக்குமேல் இருக்கும், ஒரு தவளையை வாயில் வைத்துக்கொண்டு இருந்தது. அதைப்பார்த்ததும் எனக்கு பயம். அப்பொழுது வீட்டில் யாரும் இல்லை. நான்மட்டும் தான் இருந்தேன். துணியை அப்படியே வைத்துவிட்டு வெளியே யாராவது இருந்தால் சொல்லலாம் என்று பார்த்தால் அந்த நேரம் ஒருவரும் இல்லை. சரி,கொஞ்ச நேரம் கழித்து போனால் அது ஓடிவிடும் என்று நினைத்து கொஞ்ச நேரம் கழித்து போனேன். அப்பொழுதும் அது அங்கேயே இருந்தது. ஒரு தடியை எடுத்து தூரத்தில் நின்று தட்டினேன். அந்த பாம்பு அப்படியே சீறிக்கொண்டு என்னை படம் எடுத்தது. பயத்தில் நடுங்கி என்ன செய்வது என்று புரியாமல் உடனே ஆண்டவரை நோக்கி ஜெபம் செய்தேன். தாவீது சிங்கத்தை கொன்று போட்டதுபோல், இந்த சிம்சோன் சிங்கத்தை கொன்று போட்டதுபோல இயேசப்பா நீங்கள் என்னோடு இருந்தால் இந்த பாம்பை நான் கொல்ல வேண்டும் என்று ஜெபித்தேன். அடுத்த நிமிஷம் எனக்கு எப்படி தைரியம் வந்தது என்று இன்று நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கும். இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் என்று சொல்லி 2வது தடவை அந்த பாம்பு என்னை படம் எடுத்த பொழுது கையில் வைத்திருந்த தடியால் ஓங்கி அதை அடித்தேன். அது அப்படியே செத்துவிட்டது. அந்த தைரியம் சில வினாடிதான். பாம்பை கொன்று விட்டு பயத்தில் ஒருமணி நேரம் அழுதேன்.அந்த பாம்பை பார்த்த என் வீட்டார் யாவரும் ஆச்சரியப்பட்டனர். எப்படி உனக்கு இவ்வளவு தைரியம் வந்தது என்று கேட்டு வியந்தனர். அன்று அந்த தைரியத்தை ஆண்டவர் எனக்கு கட்டளையிட்டார்.

அன்பானவர்களே! அவரால் பெயர் சொல்லி அழைக்கப்பட்டவர்களை யாராலும் எந்த தீங்காலும் தொடவே முடியாது. நம்மை காக்கிறவர் தூங்குவதும் இல்லை, உறங்குவதும் இல்லை. நம்மை அவர் உள்ளங்கையில் வைத்து தாங்குவார். அதனால் நீங்கள் எந்த கஷ்டம், பாடுகள் வந்தாலும் கவலைப்படாதீர்கள். கடவுள் நமக்கு எல்லாவற்றிலும் உறுதுணையாக இருப்பார்.

ஜெபம்.

அன்பின் ஆண்டவரே! உம்மை போற்றுகிறோம், துதிக்கிறோம் அப்பா,எங்கள் தாயின் வயிற்றில் நாங்கள் உருவாகும் முன்னரே நீர் எங்களை அறிந்து எங்கள் தேவைகள் யாவையும் குறித்து வைத்திருக்கிறீர். அதினால் இன்றுமுதல் நாங்கள் எதைக்கண்டும் கலங்காமல் மனம் பதறாமல், பயப்படாமல் இருக்க உதவி செய்யும். உமது வார்த்தைகளை அப்படியே நம்பி விசுவாசிக்க உதவிசெய்யும். நீர் சொல்ல ஆகும். கட்டளையிட நிற்கும். நீர் கட்டளை இடாதிருக்க காரியம் வாய்க்காது. உமது வேதம் எங்களுக்கு எப்பொழுதும் மனமகிழ்ச்சியை கொடுப்பதால் உமக்கு கோடி நன்றி அப்பா. நாங்கள் ஒவ்வொருநாளும் காலையில் உமது வார்த்தைகளை வாசித்து எங்களை அப்படியே உமது கரத்தில் ஒப்புக்கொடுத்து பிறகு எங்கள் மற்ற வேலைகளை கவனிக்க போதித்து அந்தந்த நாளுக்குரிய ஞானத்தையும்,வழிநடத்துதலையும் தர வேண்டுமாய் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தின் மூலம் ஜெபம் ஏறேடுக்கிறோம் எங்கள் பிதாவே!ஆமென்!!அல்லேலூயா!!!.

(Written by – Sara, MyGreatMaster.com)

You may also like...

Leave a Reply

%d bloggers like this: