நம் பகைவர் கையின்றும் ஆண்டவர் நம்மை மீட்டருள்வார். மீக்கா 4:10

அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள்.

இந்த நாளிலும்,நாம் ஆண்டவரின் சொல்கேட்டு நடந்தால், அவர் சொல்கிறபடி யாவற்றையும், செய்தால் நம்மை எதிர்ப்பவர்களுக்கு அவரே எதிரியாயும், நம்மை பகைப்பவர்களுக்கு, பகைவனுமாக இருப்பதாக கடவுள் நமக்கு வாக்கு அருளுகிறார். விடுதலை பயணம் 23:22. அவர் குரலுக்கு நாம் செவிக்கொடுத்தால் உலகின் அனைத்து மக்களும் நமக்கு வாழ்த்து சொல்லும்படி செய்கிறார். அதுமட்டுமல்லாமல் விண்மீன்களைப்போலவும், கடற்கரை மணலைப்போலவும், நம் வழிமரபை பலுகிப் பெருகச் செய்வார். நம் வழிமரபினர் தங்கள் பகைவர்களின் வாயிலை உரிமையாக்கி கொள்ளும்படி செய்வார். தொ.நூல்.22:17.

நீங்கள் நல்லது செய்தும் உங்களுக்கு தீமை நடந்தால் கவலைப்படாமல் இருங்கள். நமக்காக யுத்தம் செய்யும் கடவுள் நம்மோடு இருப்பதால் நாம் கலங்க தேவையில்லை. அவருடைய தூய ஆவியானவர் நம்மை அவருடைய ஆவியினாலும், வல்லமையாலும்,  நீதியாலும், ஆற்றலாலும், நிரப்பி காத்துக்கொள்வார். நம் பகைவர் மானக்கேடு அடைவார்கள். முன்னுரைப்பவர்கள் நாணிப்போவார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் வாயைப் பொத்திக்கொள்வார்கள். ஏனெனில் கடவுள் அவர்களிடம் இருந்து நம்மை பாதுக்காத்துக்கொள்வார். அவர்கள் ஆண்டவரின் எண்ணங்களை அறியவில்லை. அவரது திட்டத்தையும் புரிந்துக்கொள்ளவில்லை.

கடவுள் நமக்கு அமைதியை அருள்வார். நாம் நமது ஆண்டவரின் பெயரை மகிமை படுத்தும்படிக்கும், அச்சமின்றி வாழும்படிக்கும் செய்வார். எல்லாத் தீமைக்கும் விலக்கி நம்மை தப்புவிப்பார். நாம் வானத்தில் இருந்து பொழியும் பனியைப்போலவும், புல்வெளி மேல் பெய்யும் மழையைப்போலவும், செழித்து இருக்கும்படி நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவார். நமக்கு நல்லது எது? கெட்டது எது? என்று காட்டியிருக்கிறார். நாம் கடவுள் விரும்பும்படி வாழ்ந்து நேர்மையை கடைப்பிடித்து மற்றவர்களுக்கு இரக்கம் காண்பித்து, கடவுளுக்கு முன்பாக மனத் தாழ்மையோடு நடந்துக்கொண்டால் அவர் நம்மை எல்லாத்தீமைக்கும் விலக்கி காத்து ஆசீர்வதிப்பார்.

ஜெபம்

அன்புள்ள இயேசு ஆண்டவரே! உம்மை போற்றுகிறோம், துதிக்கிறோம். இந்த நாளிலும் எங்களை எங்கள் பகைவர் கையினின்று மீட்டு காத்துக்கொள்வதால் உமக்கு நன்றியை தெரிவிக்கிறோம். துன்பத்திலும், துக்கத்திலும் இருந்து விடுவித்து காப்பாற்றிய தகப்பனே உம்மை ஆராதிக்கிறோம். எங்கள் பாவங்களை ஒவ்வொருநாளும் மன்னித்து அந்தந்த நாளுக்குரிய தேவைகளை தருபவரே நன்றி ஐயா! உம்மிடத்தில் நீர் விரும்பும்படி மனத்தாழ்மையோடு நடந்து உமக்கே புகழை உண்டாக்க உதவி செய்யும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் நல்ல பிதாவே! ஆமென்!!அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: