நம் பொக்கிஷம் எது ?

இந்த உலகத்தில் வாழும் அனைவருக்கும் விலையுயர்ந்த பொக்கிஷம் என்றால் அது நம்முடைய வேதமே! ஏனெனில் வேதத்தின் மூலம் நாம் நல்லது எது? கெட்டது எது? வாழ்வா,சாவா? அனுதின வாழ்க்கையின் போராட்டத்தில் இருந்து எப்படி நம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும், ஆசீர்வாதமா? சாபமா? எல்லாவற்றுக்கும் பதில் அதில் இருக்கிறது. அனுதினமும் வேதத்தை வாசித்து தியானித்து அதன்படி நடந்தோமானால் நம்மை யாராலும் எதுவும் செய்ய முடியாது.
பயத்திலிருந்து விடுதலை, ஆபத்திலிருந்து பாதுக்காப்பு, நோயிலிருந்து சுகம், கடன் பிரச்சனையிலிருந்து சுதந்திரம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவையெல்லாம் நமக்கு கிடைக்க வேண்டுமானால் அதற்கு நாம் செய்ய வேண்டிய வேலை தினமும் காலையில் எழுந்து வேதத்தை வாசித்து ஆண்டவரை நோக்கி ஜெபித்துவிட்டு அந்த நாளுக்குரிய எல்லா காரியத்தையும் அவர் பாதபடியில் வைத்துவிட்டு அவர் சித்தப்படி நடந்துக்கொண்டால் இந்த உலகத்திலே நாம்தான் சிறந்தவர்கள். எல்லாம் நமக்கு கூட்டியே  கிடைக்கும். மத்தேயு 6 :33.
ஆனால் நாமோ அப்படிப்பட்ட விலையுயர்ந்த பொக்கிஷத்தை ஏதோ ஒரு மூலையில் தூசி படியவிட்டுவிட்டு எங்கெங்கோ தேடி அலைகிறோம். ஒரு பழமொழி சொல்வார்கள். “வெண்ணையை கையில் வைத்துக்கொண்டு எங்கெங்கோ தேடினார்களாம் ” கடவுள் நம் கையில் பொக்கிஷத்தை கொடுத்திருக்கிறார். அதை எடுத்து பயன்படுத்துவது உங்கள் ஒவ்வொரு கையில்தான் இருக்கிறது. உங்களுக்கு உலக பிரகாரமாக அநேக வேலைகள் இருக்கலாம். ஆனால் உங்களை படைத்த கடவுளுக்கு ஒரு மணி நேரம் கூட கொடுக்க மாட்டீர்களா? மத்தேயு 26:40.
அன்பானவர்களே! நீங்கள் யாராயிருந்தாலும் இனிமேலாவது தினந்தோறும் விவிலியம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் அதிசயத்தை கண்
கூடாக காண்பீர்கள். நீங்கள் வேண்டுமானால் ஒரு மாதம் சோதித்து பாருங்கள். ஆண்டவரின் வல்லமை என்ன என்றும் எவ்வளவு என்றும் உணர்வீர்கள். எதையும் சாப்பிட்டு பார்த்தால் தானே அதின் சுவை தெரியும். அதுமாதிரிதான் வேதத்தை வாசித்து பாருங்கள். அதின் மகிமையையும், வல்லமையையும் ருசிப்பீர்கள்.
தொடக்கத்தில் வாக்கு இருந்தது. அவ்வாக்கு கடவுளோடு இருந்தது. அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது  என்று யோவான் 1:1 ல் வாசிக்கிறோம். ஒளியான அவர் உலகில் இருந்தார். இந்த உலகமே அவரால் தான் உண்டானது. ஆனால் உலகத்தில் இருந்தவர்கள் அவரை அறிந்துக்கொள்ளவில்லை. யோவான் 1:10. நாமும் அவர்களைப்போல் அல்லாமல் அவர் நமக்கு கொடுத்த வாக்குகள் அடங்கியபொக்கிஷத்தை தினமும் வாசித்து, அவர்மேல் நம்பிக்கை கொண்டு அவருடைய பிள்ளைகள் என்ற உரிமையை பெற்று எல்லா ஆசீர்வாதங்களையும் அனுபவித்து சந்தோஷமாக, சமாதானமாக வாழ்ந்து பிறரையும் வாழும்படி செய்வோம்.
ஜெபம் :
அன்புள்ள இயேசப்பா, எங்கள் குறை, குற்றங்களை பொருட்படுத்தாமல் எங்களை அளவுக்கதிகமாய் நேசித்து வழிநடத்தும் தூயவரெ! உமக்கு நன்றி சொல்கிறோம். வேதத்தின் மகத்துவங்களை நாங்கள் இன்னும் அதிகமாக அறிந்துக்கொள்ள உதவி செய்யும். மற்ற புத்தகம் போல் இது ஒரு சாதாரண புத்தகம் இல்லை என்பதை அறிந்து, உணர்ந்து கொள்ளவும், அதை தூசி படியவிட்டு என்றோ ஒருநாள் என்று படிக்காமல் தினந்தோறும் தேடி வாசித்து உமது வல்லமையை  பெற்றுக்கொள்ள கிருபை தாரும். உமதுதிருச்சட்டம் எங்களுக்கு  இன்பம் தராமல் இருந்திருந்தால் துன்பத்தில் மடிந்து போயிருப்போம். உமது வார்த்தை எங்களுக்கு ஒளியை தருகிறது. பேதைகளுக்கு நுண்ணறிவை ஊட்டுகிறது. தினமும் இதை வாசிப்பதால் எங்களுக்கு
அறிவை புகட்டுவோர் அனைவரிலும் நாங்கள் விவேகம் உள்ளவர்களாய் மாற்றுகிறீர். உமக்கே துதி,கனம்,மகிமை,உண்டாகட்டும். ஆமென்!! அல்லேலூயா.!!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: