நற்கருணையால் ஒரே குடையின் கீழ் வருவோம்

யோவான் 6:41-51

கிறிஸ்தவப் பெண் ஒருவர் நற்கருணையின்மீது நம்பிக்கை இல்லாதவராக இருந்தார். குறிப்பாக இயேசுவின் வார்த்தைகளான ‘எனது சதையை உண்டு, எனது ரத்தத்தைக் குடிப்போர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்’ என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. `ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் உடலையும் ரத்தத்தையும் எப்படி உண்பது… அப்படி உண்பது நர மாமிசம் சாப்பிடுவதைப் போன்றது ஆகாதா?’ என்று பலவாறாக யோசித்து, மிகவும் குழப்பத்தில் இருந்தார். ஒருநாள் தன்னுடைய நான்கு சக்கர வாகனத்தில் அந்தப் பெண் பயணம் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானார். விபத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறி மயக்கம் போட்டு விழுந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

மருத்துவமனையில் அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது, அவருடைய உடலில் ரத்தம் ஏற ஏற அவர் தெளிவுபெற்றுக் கண்திறந்தார். அப்போது அவர் அங்கே நடப்பவற்றை கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினார். `யாரோ ஒருவருடைய ரத்தம் தனக்கு வாழ்வு கொடுக்கும்போது, எல்லாம் வல்ல இயேசுவின் ரத்தம் எப்படி வாழ்வு கொடுக்காமல் இருக்கும்?’ என்று நினைத்து அன்று முதல் அவர் இயேசுவின் வார்த்தைகளின் மீதும், நற்கருணையின்மீதும் நம்பிக்கைகொள்ளத் தொடங்கினார். ஆம், நற்கருணை என்பது வெறும் உணவு மட்டும் கிடையாது,

 • அது வாழ்வு கொடுக்கும் உயிருள்ள உணவு.
 • எல்லா ஆசியையும் அருளையும் அள்ளித் தரும் அற்புத உணவு
 • நோயைக் குணப்படுத்தும் தெய்வீக மருந்து
 • த்தானை ஓட ஓட விரட்டும் சாட்டை
 • கொல்லும் நஞ்சு கூட நற்கருணையை நம்புவோருக்கு தீங்கிழைக்காது’

பொதுக்காலம் 19ம் ஞாயிறு நற்கருணை விருந்தில் பங்கெடுக்கும் நாம், நற்கருணைக்கு பக்தியும் வணக்கமும் செலுத்தவும், அது சுட்டிக்காட்டும் அழைப்பினை வாழவும் நம்மை சிறப்பாக அழைக்கின்றது.

நற்கருணையில் ஆண்டவரின் பிரசன்னம் உண்மையானது: உலகம் முடியும் வரை நிரந்தரமானது. இதனை ஒவ்வொருவரும் உணர வேண்டும். ஆயிரமாயிரம் அற்புதங்கள் இதனைப் புலப்படுத்துகிறது. ‘இது என் உடல்: இது என் இரத்தம்’ என்று சொன்ன ஆண்டவர் ஒருபோதும் பொய் சொல்ல மாட்டார். ஆகையால் விசுவாசத்தின் மறைபொருளான நற்கருணைப் பிரசன்னத்தை நாம் முழுமையாக விசுவசிக்க வேண்டும்.

‘உமது பிரசன்னம் கூட வரவில்லையெனில் எங்களை இங்கிருந்து போகச் செய்யாதீர்: நானும் உம் மக்களும் உம் பார்வையில் தயை பெற்றுள்ளோம் என்பதை எப்படி அறிவோம்? நீர் எங்களோடு வருவதாலும் நானும் உம் மக்களும் மண்ணுலகில் உள்ள அனைத்து மக்களினின்றும் வேறுபட்டு நிற்பதாலும் அன்றோ(விப33:15-16) என்று முறையிட்ட மக்களுக்கு ‘உங்களோடு என்றும் இருப்பேன்’(யோசுவா 3:7) என்ற வாக்குறுதியை இறைவன் தந்தார். அவருடைய பிரசன்னமே அனைத்தையும்விட மேலானது. இதோ! கடவுளின் உறைவிடம் மனிதர் நடுவே உள்ளது. அவர் அவர்கள் நடுவே குடியிருப்பார். அவர்கள் அவருக்கு மக்களாய் இருப்பார்கள். கடவுள்தாமே அவர்களோடு இருப்பார். அவரே அவர்களுடைய கடவுளாய் இருப்பார். அவர்களுடைய கண்ணீர் அனைத்தையும் துடைப்பார்(திவெ21:3,4). என்ற இறைவாக்கு நற்கருணையில் உண்மையாகிறது. ஆகையால் தான் ‘நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம்: மருள வேண்டாம்(யோவா14:27) என்று சொன்ன இம்மானுவேல் உலகை வென்றுவிட்டேன்’ என்று சொல்லி அதற்கு சாட்சியாய் இந்த நற்கருணைப் பிரசன்னத்தை விட்டுச் சென்றிருக்கிறார்.

கடவுளின் தோற்றத்தை நற்கருணையிலே நேரடியாக பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள். ஏமாந்து போகின்றார்கள். இறைவனின் விருப்பம் என்பது தம்மை வெளிப்படுத்து தான். ஆனால் மனிதன் விரும்பும் விதத்தில் வெளிப்படுத்துவது அல்ல. மாறாக அவர் விருப்பப்படியே அவர் தன்னை வெளிப்படுத்துகிறார். அவர் வெளிப்படுதத்துகிற விதத்தில் அவரைக் கண்டுகொள்பவர்கள், கண்ணுக்கு புலப்படுவதை மட்டுமல்ல, புலப்படாதவற்றையும் கூட விசுவசிப்பர்.

காணாமலே நம்புவோர் பேறுபெற்றோர்(யோவான் 20:29) என இயேசு சொல்கிறார். அந்தப் பேற்றினை பெற்ற முதல் பாக்கியசாலிகள் இடையர்கள். அவர்களுக்கு துணை நின்றது மனித ஞானம் அல்ல, இறைவெளிப்பாட்டின் மீது கொண்ட நம்பிக்கை.

சாதராண துணிகளில் பொதியப்பட்ட மீட்பரை இடையர்கள் தங்கள் நம்பிக்கையால் கண்டுக்கொண்டனர். சாதராண மனிதராக பணிசெய்த ஆண்டவர் இயேசுவை பேதுரு மட்டுமே மெசியா என கண்டுபிடித்தது அவரிடமிருந்த நம்பிக்கையால். தோட்டக்காரர் தோற்றத்தில் வந்த உயிர்த்த இயேசுவை மகதலா மரியா தன்னுடைய போதகர் என்று கண்டுகொண்டது அவரிடமிருந்த நம்பிக்கையால்தான். இவர்களிடமிருந்த நம்பிக்கை நம்மிடம் இருந்தது என்றால் நற்கருணை பேழையில் அப்ப உருவில் மறைந்திருக்கும் இயேசுவை நம்மால் காண முடியும். கண்டு விசுவசிக்க முடியும். அவரை அனுபவிக்க முடியும். அவராக மாற முடியும்.

நற்கருணை மீது நாம் கொண்டிருக்கிற விசுவாசம் நம்முடைய அன்றாட பக்தி நடவடிக்கைகளில் வெளிப்பட வேண்டும்:

 • ஆலயத்திற்குள் வரும் போதும் வெளியே செல்லும்போதும் தலை வணங்கி நற்கருணை
 • ண்டவருக்கு வணக்கம் செலுத்த வேண்டும்
 • நற்கருணை ஆண்டவரை தினமும் சந்திக்க வேண்டும்
 • அன்றாடம் திருப்பலியில் கலந்துகொள்ள வேண்டும்
 • நற்கருணை ஆராதனை, நற்கருணைச் சுற்றுப்பிரகாரம் ஆகியவற்றில் பங்கெடுக்க வேண்டும்
 • நற்கருணை வாங்கிய பிறகு அவரோடு விசுவாசநிலையில் உரையாட வேணடும்
 • நற்கருணையைக் கைகளில் வாங்கும்போது கவனத்துடன் வாங்கி பராக்குக்கு இடம்கொடுக்காமல் உண்ணுவதும் உறவாடுவதும் அவசியமாகும்

என நம்முடைய விசுவாசம் வெளிப்பட வேண்டும்.

எல்லாவற்றைவிட கிறிஸ்துவின் திருவுடலாகிய நற்கருணைமீது அதன் பிரசன்னத்தின்மீது நாம் கொண்டுள்ள விசுவாசம் கிறிஸ்துவின் மறையுடலாகிய திருச்சபையில் செயலாக்கம் பெற வேண்டும்.

நற்கருணை விசுவாசம் செயலாக்கம் பெறுவது ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஒரே குடும்பமாக ஒன்றித்து, ஒற்றுமையில் வளரும் போதுதான். இதனைத்தான் தூய பவுல் நமக்கு வலியுறுத்துகிறார். ‘நாம் பலராயினும் ஒரே உடலாய் இருக்கிறோம்’ ஏனெனில் நாம் அனைவரும் அந்த ஒரே அப்பத்தில்தான் பங்கு கொள்கிறோம்(1கொரிந்தியர் 10:17). நற்கருணை உண்கின்ற நாம் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும்.

ஒரு முதியவருக்கு பல மகன்கள் இருந்தார்கள். ஆனால் அவர்கள் எப்பொழுதும் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டே இருந்தார்கள். சண்டை போட வேண்டாம் என்று முதியவர் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை.

ஒருநாள் மகன்கள் எல்லோரையும் அவர் அழைத்தார். தம் பக்கத்தில் கட்டி வைத்திருந்த ஒரு விறகுகட்டை அவர்களுக்குக் காட்டி அதை முறிக்கும்படி சொன்னார். எல்லோரும் முயற்சி செய்து பார்த்தார்கள். ஒருவராலும் அந்தக் கட்டையை முறிக்க முடியவில்லை.அதை அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். பிறகு அந்தக் கட்டை அவிழ்த்து தனித்தனியாகக் குச்சிகளை முறிக்கும்படி சொன்னார்.மிக சுலபமாக அந்தக் குச்சிகளை மகன்கள் முறித்துவிட்டார்கள்.முதியவர் அதைச் சுட்டிக்காட்டி,”பார்த்தீர்களா? சேர்ந்து இருக்கிறவரையில் அந்தக் கட்டை யாராலும் முறிக்க முடியவில்லை.குச்சிகளைத் தனியாகப் பிரித்தால் சுலபமாய் முறிக்க முடிகிறது.இதுதான் வாழ்வின் இரகசியம். நீங்கள் சகோதர அன்பால் கட்டுப்பட்டு சேர்ந்திருக்கிறவரையில் உங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது.நீங்கள் என்று பிரிகிறீர்களோ அன்றே உங்கள் எதிரிகள் உங்களை நசுக்கி விடுவார்கள்” என்று அறிவுரை சொன்னார். அதன்பிறகு அவர் மகன்கள் ஒற்றுமையாய் இருந்தார்கள்.

அன்புமிக்கவர்களே! நமக்குள்ளே இருக்கின்ற வித்தியாசங்களை உடைப்போம். கிறிஸ்தவர்களிடத்தில் பிளவு இல்லை என்பதை நிரூபிப்போம். அவர்கள் அனைவரும் சகோர சகோதரிகள் என்பதையும் ஒரே கடவுளின் பிள்ளைகள் என்பதையும் வாழந்துக் காட்டுவோம். நற்கருணையால் ஒரே குடையின் கீழ் பயணிப்போம். ஒருவரையொருவர் ஒற்றுமையால் முன்னேற்றம் காண செய்வோம்.

ஒற்றுமை யென்றொரு கயிறு
ஒற்றையாய்ப் பிடிப்பது தவறு
ஒன்றாய் சேர்ந்து பிடிப்போம்
உயர்வை நோக்கி செல்வோம்

மனதில் கேட்க…

நற்கணை ஆண்டவரோடு நான் உறவாடும் நேரங்கள் குறைவா? போதுமா?
நற்கருணையை உண்கின்ற நான் சமாதானத்திற்கு காரணமாக அமைய வேண்டாமா?

மனதில் பதிக்க…
நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்! (யோவா 20:28)

அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: