நற்செய்தியாளர் மத்தேயு

மத்தேயுவின் இயற்பெயர் லேவி என்று அழைக்கப்படுகிறது. இதனுடைய அர்த்தம் “சேர்க்கை” என்பதாகும். எபிரேய மொழியில் மத்தேயு என்றால் “கடவுளின் கொடை“ என்று அர்த்தம் சொல்கிறார்கள். திருத்தூதர்களில் ஒருவரான அந்திரேயா வழியாக, இவர் அறிமுகமாகிறார். மற்ற திருத்தூதர்கள் சாதாரணமானவர்கள். ஆனால், அவர்களை விட செல்வத்திலும், அதிகாரத்திலும் உயா்ந்த வரிவசூலிக்கக்கூடியவராக மத்தேயு இருக்கிறார். கப்பாநாகும் அருகில் இருக்கிற கலிலேயா கடற்கரை அருகில் தான், வரிவசூலித்துக்கொண்டிருந்தார். உரோமையர்களுக்காகப் பணிசெய்து கொண்டிருந்ததாலும், வரிவசூலிக்கக்கூடிய தொழிலைச் செய்து வந்ததாலும், மக்களின் கோபத்திற்கும், வெறுப்பிற்கும் ஆளானவர். ஆனாலும், இயேசுவின் அழைப்பை ஏற்று, அந்த மக்களுக்கே பணிபுரிவதற்கு முன்வருகிறார்.

இவர் எத்தியோப்பியா, பெர்ஷியா, பார்த்தியா, எகிப்து நாடுகளுக்குச் சென்று, வேதம் போதித்ததாக பாரம்பரியம் கூறுகிறது. எகிப்து நாட்டில் அரசாண்ட அரசனின் மகனை உயிருடன் எழுப்பினார். தொழுநோயால் தாக்கப்பட்ட அந்த நாட்டு இளவரசி இபிஜினாவையும் குணப்படுத்தினார். மத்தேயு தனது நற்செய்தியை யூதர்களுக்கு எழுதுகிறார். பழைய ஏற்பாடு நூலை முழுமையாகக் கற்றுக்கொண்டதை, அவர் எழுதுகிற மேற்கோள்களிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம். மத்தேயுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய முக்கியமான பண்பு, அவரது தாழ்ச்சி. தன்னுடைய நற்செய்தி நூலில் தன்னைப்பற்றிய சிறிய முன்னுரையை மட்டுமே தருகிறார். தன்னைப்புகழ்ந்தோ, போற்றியோ அவர் எங்கேயும் எழுதியிருக்கவில்லை. மாறாக, திருச்சபையின் தலைவராக இயேசுவால் ஏற்படுத்தப்பட்ட, பேதுருவிற்கு அதிக முக்கியத்துவத்தை அவர் கொடுக்கிறார். இது மத்தேயுவின் தாழ்ச்சியை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

மத்தேயுவைப்போல நாமும் தாழ்ச்சி நிறைந்தவர்களாக வாழ அழைக்கப்படுகிறோம். நம்மைப்பற்றி மற்றவர்களிடம் உயர்வாக தம்பட்டம் அடிப்பதைக் குறைத்து, மற்றவர்களிடம் இருக்கக்கூடிய நல்ல பண்புகளை, நாம் உற்சாகப்படுத்துவோம். நாமும் அவரைப்போல தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு நாம் வாழப்பழகுவோம்.

~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

%d bloggers like this: